

நாம் கடைகளில் வாங்கும் பெரும்பாலான பாட்டில் தண்ணீரில் காலாவதி தேதி (Expiry date) குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த காலாவதி தேதி பாட்டிலுக்கா அல்லது தண்ணீருக்கா என்ற கேள்வி பொதுவாக எல்லோருக்கும் எழுகிறது. இது குறித்த அறிவியல் பின்னணி விளக்கங்களை இப்பதிவில் காண்போம்.
அறிவியல் சொல்வது
சுத்தமான நீர் (H2O) வேதியல் ரீதியாக பார்க்கும் போது உண்மையில் காலாவதியாகாமல் அதாவது கெட்டுப் போகாமல் இருக்கும். அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) வணிகரீதியாக சீல் வைக்கப்பட்ட தண்ணீர், சரியாக சேமிக்கப்பட்டால், காலவரையின்றி குடிக்கப் பாதுகாப்பானது எனக் கூறுகிறது.
பாட்டில்களில் உள்ள காலாவதி தேதி தண்ணீரின் தரத்தையே குறிக்கிறது. நீண்ட காலமாக பாட்டிலுக்குள் இருக்கும் தண்ணீர் பாட்டிலுடன் வினைபுரிந்து அதன் சுவை, வாசனை மற்றும் தோற்றம் ஆகியவை மாறுபடலாம்.
பாட்டில் தண்ணீர் பெரும்பாலும் PET (Polyethylene Terephthalate) பிளாஸ்டிக்கில் நிரப்பப்படுகிறது. இந்த பிளாஸ்டிக், அதிக வெப்பத்தில் இருக்கும் போது அல்லது நேரடிச் சூரிய ஒளியில் படும்போது, தண்ணீரில் சிறிய அளவில் ரசாயனங்களை வெளியேற்றும் என்பதால் பாட்டில் தண்ணீரை சூடான காருக்குள் நீண்ட நேரம் ஒருபோதும் விட்டுச் செல்லக்கூடாது.
சில பிளாஸ்டிக்குகளை மென்மையாக்கப் பயன்படும் பிஸ்பெனால் ஏ (BPA) என்ற ரசாயனம் ஹார்மோன் சமநிலையைக் குலைக்கும் அபாயம் கொண்டவை. ஆகவே BPA இல்லாத (BPA-free) பாட்டில்களைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.
நீண்ட காலமாகச் தண்ணீர் பாட்டிலை சேமித்து வைக்கும்போது, பாட்டிலில் உள்ள பிளாஸ்டிக் துகள்கள் நீரில் கசியக்கூடும் என்றாலும் , 2019 ஆய்வின்படி, நீரின் தரத்தை அதிகமாகப் பாதிக்கக்கூடிய செறிவில் இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இல்லை என்றும், சரியான முறையில் சேமிப்பதன் மூலம் இதைத் தவிர்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.
குடிநீரின் உண்மையான ஆயுட்காலம்
திறக்கப்படாமல் இருக்கும் தண்ணீர் பாட்டிலை குளிர்ச்சியான இருண்ட இடத்தில் வைத்திருந்தால், ஆண்டு கணக்கில் குடிக்கப் பயன்படுத்தலாம். ஆயினும் சிறந்த தரத்திற்காக உற்பத்தி செய்யப்பட்ட தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் இதனை குடித்து விடுவது சாலச் சிறந்தது. இல்லையெனில் தண்ணீர் பிளாஸ்டிக்கின் உள்ள தொடர்பு காரணமாக அதனுடைய வாசனை மற்றும் சுவை மாறுபடலாம்.
குழாய் நீர் (Tap Water)
குழாய் நீரை சுத்தமான, BPA இல்லாத பாட்டில்களில் அடைக்கப்பட்டிருந்தால் 6 மாதங்கள் வரை சேமிக்கலாம். அதற்குப் பிறகு, அது புத்துணர்ச்சியூட்டும் சுவையை இழக்கலாம் அல்லது சரியாக சீல் வைக்காமல் இருந்தால் இது அசுத்தமடையும்.
மழை நீர் (Rainwater)
மழைநீர் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அசுத்தங்களை கொண்டிருக்கும் என்பதால் சுத்திகரிக்காமல் குடிக்க வேண்டாம். வடிகட்டி மற்றும் கிருமி நீக்கம் செய்யப்படாமல் இருக்கும் மழை நீரை செடிகளுக்கு பயன்படுத்தலாம்.
தண்ணீர் கெட்டுப் போக விட்டாலும் வழக்கத்திற்கு மாறான வாசனை, பச்சை அல்லது நீல நிறத்தில் காணப்பட்டாலோ, உலோக சுவை அல்லது பழைய சுவையுடன் தெரிந்தால் தரக்குறைவுக்கான அறிகுறி என்பதால் இத்தகைய தண்ணீரை குடிக்காமல் இருப்பதே சிறந்தது.
முக்கிய குறிப்பு: பிளாஸ்டிக் பாட்டில்கள் வசதியானவை என்றாலும் முடிந்தவரை மீண்டும் பயன்படுத்தக்கூடிய கொள்கலனையும் குழாய் நீரையும் பயன்படுத்துங்கள்.