

உலகின் மிக மோசமான அணு உலை விபத்து நடந்த அந்த உக்ரைன் செர்னோபில் பகுதி, மனிதர்கள் நுழையவே முடியாத ஒரு மரணப் படுகுழியாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இயற்கைக்கு அழிவே கிடையாது என்பதை நிரூபிக்கும் வகையில், அந்த ஆபத்தான கதிர்வீச்சுக்கு நடுவே ஒரு உயிரினம் செழித்து வளர்ந்ததைக் கண்டு உலகம் உறைந்து போனது. அது ஒரு வகைக் கருப்புப் பூஞ்சை. மனித குலத்தின் அடுத்த கனவான செவ்வாய் கிரகப் பயணத்திற்கு, இந்தப் பூஞ்சைதான் மிக முக்கியத் திறவுகோலாக இருக்கப்போகிறது.
கதிர்வீச்சே இதன் உணவு!
சூரியகாந்திப் பூ எப்படிச் சூரியனைப் பார்த்துத் திரும்புகிறதோ, அதேபோல இந்தப் பூஞ்சை எங்கே கதிர்வீச்சுஅதிகமாக இருக்கிறதோ, அதைத் தேடிச் சென்று வளர்கிறது. நம் மனிதத் தோலுக்கு நிறத்தைக் கொடுக்கும் 'மெலனின்' என்ற அதே நிறமிதான் இந்தப் பூஞ்சையிலும் இருக்கிறது.
ஆனால், நாம் வெயிலில் இருந்து தப்பிக்க மெலனினைப் பயன்படுத்துகிறோம்; இந்தப் பூஞ்சையோ கதிர்வீச்சை உறிஞ்சி, அதைத் தனக்கான ஆற்றலாகவும் உணவாகவும் மாற்றிக்கொள்கிறது. சுருக்கமாகச் சொன்னால், நமக்குச் சோறு எப்படி முக்கியமோ, இதற்கு அணுக்கதிர் வீச்சு அப்படி.
விண்வெளிப் பயணம்!
மனிதன் நிலவுக்கோ அல்லது செவ்வாய்க்கோ செல்வதில் இருக்கும் மிகப்பெரிய தடையெ, விண்வெளியில் இருக்கும் மோசமான காஸ்மிக் கதிர்வீச்சுதான். இது விண்வெளி வீரர்களின் உயிரணுக்களையும், டி.என்.ஏ-வையும் சிதைத்துவிடும். இதிலிருந்து தப்பிக்க ஈயம் போன்ற கனமான உலோகங்களால் ஆன கவசங்களை ராக்கெட்டில் எடுத்துச் செல்ல வேண்டும்.
ஆனால், ராக்கெட் அறிவியலைப் பொறுத்தவரை எடை அதிகரித்தால், செலவும் கோடிக்கணக்கில் அதிகரிக்கும். "எடையைக் குறைக்கவும் வேண்டும், அதே சமயம் பாதுகாப்பும் வேண்டும்" என்று யோசித்த விஞ்ஞானிகளுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்தான் இந்தச் செர்னோபில் பூஞ்சை.
கவசம்!
இதைச் சோதித்துப் பார்ப்பதற்காக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இந்தப் பூஞ்சை அனுப்பி வைக்கப்பட்டது. அங்கே நடந்த சோதனையில், இது கதிர்வீச்சைத் தடுத்து நிறுத்தியது மட்டுமல்லாமல், பூமியை விட விண்வெளியில் 20 சதவீதத்திற்கும் அதிகமான வேகத்தில் வளர்ந்து ஆச்சரியப்படுத்தியது. கதிர்வீச்சை உறிஞ்ச உறிஞ்ச இது இன்னும் வலிமையாக வளர்ந்தது.
செவ்வாய் கிரகத்தில்!
எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறும்போது, பூமியில் இருந்து செங்கல்லையோ, சிமெண்டையோ சுமந்து செல்ல வேண்டியதில்லை. மிகச்சிறிய அளவில் இந்தப் பூஞ்சையின் விதைகளை எடுத்துச் சென்றால் போதும். அங்குள்ள மண்ணுடன் இதைக் கலந்து, கூடாரங்களின் மேல் பூசிவிட்டால், சில நாட்களிலேயே அது வளர்ந்து ஒரு போர்வையைப் போல மூடிக்கொள்ளும். இது கதிர்வீச்சைத் தடுக்கும் அரணாக மாறுவது மட்டுமல்லாமல், ஒருவேளை அந்தச் சுவரில் விரிசல் ஏற்பட்டால், தானாகவே வளர்ந்து தன்னைச் சரிசெய்துகொள்ளும் சக்தியும் இதற்கு உண்டு.
ஒரு காலத்தில் உலகையே அச்சுறுத்திய ஒரு அணு விபத்து, இன்று மனிதன் வேற்றுக் கிரகத்தில் வாழ்வதற்கான வழியைக் காட்டியுள்ளது என்பது இயற்கையின் முரண். வருங்காலத்தில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் கட்டும் வீடுகள், உயிருள்ள, சுவாசிக்கும் பூஞ்சை வீடுகளாக இருக்கப்போகின்றன என்பது நிஜமாகவே ஒரு அறிவியல் அதிசயம் தான்.