பிப்ரவரி 28 - தேசிய அறிவியல் தினம் - அறிவியலின் முக்கியத்துவத்தை அறிவோம்; பரப்புவோம்; போற்றுவோம்!

Science day
Science day
Published on

இந்தியாவில் பிப்ரவரி 28ஆம் தேதி, தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. அறிவியலின் முக்கியத்துவத்தையும், மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. அறிவியல் மற்றும் தொழில் நுட்ப தொடர்புக்கான தேசிய கவுன்சில் NCSTC, 1986ஆம் வருடம், பிப்ரவரி 28ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கம் முன் வைத்தது. இதைத் தொடர்ந்து 1987ஆம் வருடம் முதல், தேசிய அறிவியல் தினம் அனுசரிக்கப்பட ஆரம்பித்தது.

ஏன் இந்த குறிப்பிட்ட நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது? பிப்ரவரி 28, 1928ஆம் வருடம், 20வது நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியலாளர், டாக்டர். சந்திரசேகர் வெங்கட்ராமன், தனது 'ராமன் விளைவு' கண்டுபிடிப்பை உலகிற்கு அறிவித்தார். இதற்காக சி.வி.ராமன் அவர்கள் 1930ஆம் வருடம் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஆசிய கண்டத்திலிருந்து, இந்தியாவிலிருந்து, இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்ற முதல் விஞ்ஞானி சி.வி.ராமன் அவர்கள். “ஓளியின் சிதறல் குறித்த அவரது பணிக்காகவும், அவர் பெயரிடப்பட்ட விளைவைக் கண்டு பிடித்ததற்காகவும் இந்த பரிசு” என்று நோபல் பரிசு வழங்கும் அமைப்பு அதனுடைய இணைய தளத்தில் பதிவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
பிப்ரவரி 28 - தேசிய அறிவியல் தினம் - விண்வெளி பயணத்தில் உலக அளவில் நான்காவது இடத்தில் இந்தியா!
Science day

இராமன் அவர்களின் கண்டுபிடிப்பு மகத்தானது. ஏனென்றால் அவர் படித்து, ஆராய்ச்சிகள் பல மேற்கொண்டு கண்டு பிடித்தது இந்தியாவில். அவர் இந்த ஆராய்ச்சிக்காக எந்த வெளிநாடும் செல்லவில்லை. பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவில், ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கான வசதிகள் அவ்வளவாக இருக்கவில்லை.

டாக்டர் சி.வி.இராமன், தமிழ்நாட்டில், திருச்சியில் 1888ஆம் வருடம், நவம்பர் 7ஆம் தேதி பிறந்தார். சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பி.ஏ. மற்றும் எம்.ஏ. பௌதிகம் கற்று, முதல் வகுப்பில் தேர்வு பெற்ற ஒரே மாணவர். கல்கத்தாவில் அரசின் நிதித் துறையில், வேலையில் சேருவதற்கு, அதற்குண்டான போட்டித் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். ஆனால், அவருடைய எண்ணமெல்லாம் இயற்பியல் ஆராய்ச்சியில் இருந்தது. அறிவியல் துறையில் அவருக்கு இருந்த ஆர்வத்தை அறிந்த கல்கத்தா பல்கலைக்கழக துணை வேந்தர், அவருக்கு கல்லூரி ஆசிரியர் வேலை அளித்தார். சம்பளம் நிறைய இருந்த அரசுப் பணியைத் துறந்து ஆசிரியர் வேலையில் சேர்ந்தார்.

1914ஆம் வருடம் அறிவியல் கல்லூரி முதல்வரானார். 1921ஆம் வருடம் அறிவியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார். 1924ஆம் வருடம் ராயல் சொசைடி ஆஃப் லண்டனின் உயரிய விருதைப் பெற்றார். 1928ஆம் வருடம் இந்தியன் சயன்ஸ் காங்கிரஸ் பிரசிடெண்ட் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இராமன் அவர்கள் முதலில் ஒலியியல் துறையில், இசைக் கருவிகள் பற்றி ஆராய்ச்சி செய்து வந்தார். 1921ஆம் வருடம், இலண்டனிலிருந்து இந்தியாவிற்கு கடல் பயணம் மேற்கொண்ட போது, கடல் ஏன் கருநீல நிறத்தில் இருக்கிறது என்ற கேள்வி அவர் மனதில் எழுந்த போது, மூலக் கூறுகள் ஒளியைச் சிதறடிக்கும் போது, என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்ற ஆராய்ச்சியில் ஈடுபட முடிவு செய்தார். இந்த ஆராய்ச்சியின் பயன் 'ராமன் விளைவுகள்'.

மூலக்கூறுகள் ஒரு ஒளிக்கற்றையை, திசைமாற்றும் போது, ஒளியின் அலை நீளத்தில் ஏற்படும் மாற்றத்தைப் பற்றிக் கூறுகிறது 'ராமன் விளைவுகள்'. ஒரு இராசயனக் கலவையின் வழியாக ஒளிக் கற்றை செல்லும் போது, அதில் ஒரு சிறு பகுதி, அந்த ஒளிக் கற்றையின் பகுதி தவிர வேறொரு பகுதியில் செல்கிறது. பெரும்பாலான சிதறிய ஒளியின் அலை நீளம் மாறுவதில்லை. ஆனால், வேறொரு பகுதியில் பிரிந்து செல்லும் ஒளிக் கற்றையின் ஒளி நீளங்கள் மாறுபடுகின்றன.

இந்த கண்டுபிடிப்பை அறிவித்த பின்னர், 1929ஆம் வருடம் பிரிட்டிஷ் அரசு ‘சர்’ பட்டம் வழங்கி கௌரவித்தது. 1930ஆம் வருடம் ராமன் விளைவிற்கான நோபல் பரிசு பெற்றார். இதே கண்டுபிடிப்பிற்காக ராயல் சொசைடி ஆஃப் லண்டன் “ஹ்யூம் மெடல்” பரிசளித்தது. 1933 முதல் 1948 வரை, பெங்களூரில் உள்ள “இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயன்ஸ்” இயக்குநராகப் பணி புரிந்தார். இந்தியாவின் உயரிய விருதான 'பாரத் ரத்னா' 1954ஆம் வருடம் சர்.இராமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 21, நவம்பர், 1970ஆம் வருடம் பெங்களூரில் இயற்கை எய்தினார்.

தேசிய அறிவியல் தினத்திற்கு கருப்பொருள் உண்டு. 2024ஆம் வருடத்திற்கான கருப்பொருள், “வளர்ந்த இந்தியாவிற்கான இந்திய தொழில் நுட்பங்கள்” இந்தியாவின் வளர்ச்சிக்காக அறிவியல், தொழில் நுட்பம், புதிய செயல்பாடுகள் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்பதை இந்த கருப்பொருள் வலியுறுத்துகிறது. 2025ஆம் வருடத்திற்கான கருப்பொருள், “வளர்ந்த இந்தியாவிற்கான, அறிவியல் மற்றும் புது முயற்சிகளில், உலகளாவிய தலைமைப் பொறுப்பிற்கு, இந்திய இளைஞர்களை மேம்படுத்துதல்,”

தேசிய அறிவியல் தினத்தில், பள்ளி, கல்லூரிகளில் அறிவியல் சம்பந்தமான கருத்தரங்குகள், வினாடி வினா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் செய்த விஞ்ஞான மாதிரிகள் கண்காட்சியாக வைக்கப்படுகின்றன. வானொலி மற்றும் தொலைக் காட்சியில் கருத்தரங்கம், வினாடி வினா ஆகியவை நடைபெறும். பொது மக்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு, அறிவியலின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நாள் 'தேசிய அறிவியல் தினம்'.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com