

கண் கண்ணாடி முதல் கண்ணாடி சுவர்கள் வரை நாம் பயன்படுத்தும் கண்ணாடிகளின் “கண்ணாடி நகரம்“ எது தெரியுமா?
“கண்ணாடி அறையிலிருந்து கல் எறியாதே!“, “கண்ணாடி உடைந்தால், அதை ஒட்ட வைக்க முடியாது“ “அவர் மனசு ஒரு கண்ணாடி மாதிரி“ என்று கண்ணாடியை மென்மையான உணர்களுடன் ஒப்பிடுவதை அறிந்திருப்பீர்கள். அதன் வண்ணமயமான வரலாறு தெரியுமா? உங்களுக்கு!
முகம் பார்க்கும் கண்ணாடி, மூக்குக் கண்ணாடி, கண்ணாடிப் பாத்திரங்கள், சரவிளக்குகள், ஜன்னல் கண்ணாடிகள், உலகின் மிகப்பெரிய கண்ணாடிப் பாலம், கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் கண்ணாடிச் சுவர்கள் என்று கண்ணாடிகளின் பயன்பாடு தவிர்க்க வியலாத விஷயமாகிப் போனது! உலகமே கண்ணாடியால் உருவானது போல் எங்ஙெங்கும் கண்ணாடிகளால் நிறைந்திருக்கிறது.
இந்தியாவின் கண்ணாடி நகரம் என்று வியந்துப் பார்க்கும் “கண்ணாடி நகரம்“ ஃபிரோசாபாத். இது புது டில்லியிலிருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் வட மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் ஆக்ராவுக்கு அருகில் அமைந்துள்ளது. கண்ணாடி உற்பத்தியில் உலக அளவில் முன்னணியிலிருந்து வருகிறது. இவற்றின் தனித்துவமான கலைத்தன்மைக்காக போற்றப்படுகிறது.
கண்ணாடி
ஃபிரோசாபாத் கண்ணாடித் தொழில் 16ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசர் அக்பரின் காலத்தில் தொடங்கியது. தொடக்கத்தில், அரச குடும்பத்திற்காக ஆடம்பரமான கண்ணாடி சரவிளக்குகள் மற்றும் வாசனைத்திரவிய குப்பிகள் வரை செய்யப்பட்டது.
கண்ணாடி நகரம்
சிலிக்கா மணல், சோடா சாம்பல் மற்றும் சுண்ணாம்புக் கல் போன்ற எளிய மூலப்பொருட்களைக் கொண்டு அதிக வெப்ப நிலையில் உருக்கி, அவை ஒளிரும் திரவமாக மாற்றி பின்னர் தேவையான கண்ணாடிப் பொருட்களாக தயாரிக்கின்றனர்.
இந்த உயிரோட்டமான ஃபிரோசாபாத் நகரம், இந்தியாவின் 80 சதவீதம் கண்ணாடி வளையல்கள் மற்றும் கண்ணாடிப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. 5 லட்சத்திற்கும் மேலான கைவினைக் கலைஞர்கள் இத் தொழிலில் தலைமுறை தலைமுறையாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பெரும்பான்மையான கண்ணாடி வளையல்கள் மற்றும் கண்ணாடிப் பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுவதால், கண்ணாடி நகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்நகரத்தின் கண்ணாடி தயாரிக்கும் தொழில் பாரம்பரியம் முகலாயர் காலத்தில் தொடங்கி, இன்று வரை நவீன தொழில் மையமாக வளர்ந்து வருகிறது.
இங்கு நூற்றுக்கணக்கான கண்ணாடி ஊதும் பட்டறைகளும், உலைகளும் உள்ளன. இங்கு வாயால் ஊதப்பட்டு, கைகளால் செய்யப்படுவதால் கண்ணாடிகளுக்கும் அதன் வண்ணங்களுக்கும் நாடெங்கும் புகழ் பரவி வருகிறது.
கண்ணாடிப் பொருட்கள், அலங்கார விளக்குகள், ஆய்வகக் கண்ணாடி பொருட்கள், சமையலறை பொருட்கள் என்று உலகெங்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.
பல நாடுகளிலும் கண்ணாடிப் பொருட்கள் செய்ய இயந்திரங்களைப் பயன்படுத்தி வரும் நிலையில், இங்கு கையால் செய்யப்படுவதால் கண்ணாடிச் சந்தையில் மிகவும் முன்னணியில் உள்ளது.
சீனா உலகின் மிகப்பெரிய கண்ணாடி நுகர்வோராக விளங்குகிறது. கட்டுமானத்துறை, ரியல் எஸ்டேட் துறை, ஸ்மார்ட்போன் மற்றும் மின்னணு உற்பத்தித்துறை என அனைத்திற்குமாக மிக அதிகப்படியான கண்ணாடியைப் பயன்படுத்துகிறது. அமெரிக்கா உலகின் மிகப் பெரிய கண்ணாடி இறக்குமதி செய்யும் நாடாக திகழ்கிறது.
இனி… காலையில் எழுந்ததும் முகம் பார்க்கும் கண்ணாடியில், உங்கள் முகம் பார்க்கும்போது… ஃபிரோசாபாத் நகரத்திற்கு நன்றி சொல்ல மறவாதீர்!