அமெரிக்காவில் பறக்கும் கார் அறிமுகம். அனுமதியும் கிடைத்துவிட்டது.

அமெரிக்காவில் பறக்கும் கார் அறிமுகம். அனுமதியும் கிடைத்துவிட்டது.

லகிலேயே முதல் பறக்கும் காருக்கு அனுமதி வழங்கியுள்ளது அமெரிக்கா. இதனால் மக்களின் போக்குவரத்து முறையில் மாபெரும் புரட்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உலகெங்கிலும் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த காலத்தில் வீட்டுக்கு ஒரு சைக்கிள் இருந்தது மாறி, தற்போது வீட்டுக்கு ஒரு இருசக்கர வாகனமோ, காரோ என்ற நிலை பெரும்பாலான வீடுகளில் வந்துவிட்டது. மக்களுடைய பயன்பாடு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, வாகன உற்பத்தி நிறுவனங்களும், அவர்களால் முடிந்த அளவுக்கு புதிய வகை வாகனங்களை அவ்வப்போது சந்தையில் வெளியிடுகிறார்கள். அதே வேளையில், அதிக வாகனப் பயன்பாட்டால் சாலையில் நெரிசல்களும் அதிகரித்து வருகிறது. எனவே இதற்கான நல்ல மாற்றாக பறக்கும் வாகனங்கள் இருக்கலாம் என சொல்லப்பட்டது. 

விண்வெளி ஆராய்ச்சிகளிலும், தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகளிலும் எப்போதும் முதலிடம் வகிப்பது அமெரிக்காதான். மேலும் மக்களின் போக்குவரத்து முறையை மேம்படுத்துவதற்கும் பல புதிய தொழில்நுட்பங்களை அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகின்றன. ஏற்கனவே, ஓட்டுனர் இன்றி தானாகவே இயங்கக்கூடிய வாகனத்தை 'டெஸ்லா' நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பிக்க பறக்கும் கார்களை உருவாக்கும் முயற்சியிலும் அமெரிக்க நிறுவனங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வந்தது. 

இதைத்தொடர்ந்து, கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபரில் அமெரிக்க நிறுவனமான 'அலெஃப் ஏரோனாட்டிக்ஸ்' என்ற நிறுவனம், முதல் முறையாக பறக்கும் காரை அறிமுகப் படுத்தியது. மேலும் அந்த காருக்கு அனுமதி கோரியும் அமெரிக்க அரசிடம் விண்ணப்பித்திருந்தது. அவர்களின் கோரிக்கைக்கு அமெரிக்க அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இதனால், உலகிலேயே முதன்முறை பறக்கும் காருக்கு அனுமதி வழங்கியது அமெரிக்காதான் என்ற அந்தஸ்து அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. 

மின்சாரத்தை ஆதாரமாகக் கொண்டு இயங்கக்கூடிய இந்தக் காரில், இரண்டு பேர் பயணிக்கலாம். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலோ அல்லது விபத்து நடந்த இடங்களிலோ இந்த பறக்கும் கார் பயனுள்ளதாக இருக்கும் என இதைத் தயாரித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பல கார்ப்பரேட் நிறுவனங்களும், சில தனிநபர்களும் கூட, இந்தக் காரை வாங்குவதற்கு இப்போதே ஆர்டர் செய்து வருகின்றனர். ஆனால், இந்தக் காரைப் பயன்படுத்தி மணிக்கு 25 மைல் வேகம் வரை மட்டுமே செல்ல முடியும்.  

இந்தக் காரின் தொடக்க விலையாக $300,000 அமெரிக்க டாலர்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நின்ற இடத்தில் இருந்தபடியே செங்குத்தாக மேலே பறக்கும்படி இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. என்னதான் இது வேகம் குறைவாக சென்றாலும், வாகன போக்குவரத்து துறையில் புதிய புரட்சியை இந்த பறக்கும் காரணம் ஏற்படுத்தும் என்கின்றனர் அத்துறைசார் வல்லுநர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com