நாளுக்கு நாள் மக்களிடம் இணைய பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதை முறைகேடாக பயன்படுத்துவோரும் அதிகரித்துவிட்டனர். இணையம் வழியாக தனி நபர்களின் தரவுகளைத் திருடி மோசடி செய்யும் செயல்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. இப்படி தான் மாணவர்களை குறி வைத்து இலவச லேப்டாப் மோசடி நடந்து வருகிறது.
என்னதான் இதுபோன்ற மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு பல விழிப்புணர்வுகள் நடத்தப்பட்டாலும், புதுவிதமான மோசடிகள் அவ்வப்போது நடப்பதை யாராலும் தவிர்க்க முடியவில்லை. இணையத்தில் மட்டுமின்றி இப்போது நேரடியாகவும் மிகத் துணிச்சலாக மோசடி சம்பவங்கள் நடக்கிறது. இந்நிலையில் படித்து வரும் மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்குவதாகக் கூறி லிங்க் ஒன்று இணையத்தில் பரப்பப்பட்டு வருகிறது.
அந்த லிங்க் உடன் கொடுக்கப்படும் தகவல்களில் “2023 ஆம் ஆண்டுக்கான இலவச லேப்டாப் விண்ணப்பங்கள் இதில் கிடைக்கும். வறுமை காரணமாக மடிக்கணினி வாங்க முடியாத மாணவர்களுக்கு இந்த திட்டம் உதவும். 2023 ஆம் ஆண்டில் சுமார் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் கற்றலை மேம்படுத்தும் விதமாக இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. விரைவில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. எனவே உங்களின் விண்ணப்பத்தை பதிவு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்” என போடப்பட்டுள்ளது.
ஆனால் இது முற்றிலும் போலியான செய்தி என்றும்,அரசாங்கமோ தனியார் நிறுவனமோ இத்தகைய அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது. மோசடிக்காரர்களின் நோக்கத்தை கண்டறிந்து இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். எனவே இதுபோன்ற லிங்குகளை பார்த்தால் அதன் உள்ளே சென்று உங்களுடைய விவரங்களை பதிவு செய்ய முயற்சிக்க வேண்டாம்.
அப்படி செய்யும் பட்சத்தில், மோசடிக்காரர்கள் உங்களின் தரவுகளைப் பயன்படுத்தி, போலியான ஆவணங்கள் உருவாக்குவது மற்றும் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை திருடுவது போன்ற தவறான செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே மாணவர்கள், இலவசமாக கிடைக்கிறது என்பதை நம்பி ஏமாந்து விட வேண்டாம்.