
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, நமது பல வேலைகளை எளிதாக்கி வருகிறது. சமையல் குறிப்புகள் முதல் சிக்கலான கணக்கீடுகள் வரை ஏ.ஐ.யின் உதவி அதிகம். இப்போது, வீடு மற்றும் தோட்டத்தை அழகுபடுத்துவது, மறுவடிவமைப்பது போன்ற விஷயங்களிலும் ஏ.ஐ.யின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சாட் ஜிபிடி போன்ற கருவிகளைப் பயன்படுத்தி மக்கள் தங்கள் இல்லங்களை அழகுபடுத்துவது ஒரு புதிய டிரெண்டாக மாறியுள்ளது. இது எப்படி சாத்தியம் என்று பார்ப்போம்.
உங்கள் வீட்டின் ஏதாவது ஓர் அறையையோ, நுழைவாயிலையோ அல்லது தோட்டத்தையோ மாற்றியமைக்க விரும்புகிறீர்கள், ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லையா? சாட் ஜிபிடியிடம் உங்கள் தேவையைச் சொல்லுங்கள். உதாரணமாக, 'என் படுக்கையறையை எப்படி இன்னும் விசாலமாகவும், அழகாகவும் மாற்றுவது?' அல்லது 'சமையலறைக்கு என்ன மாதிரி நிறம் பொருத்தமாக இருக்கும்?' என்று கேட்டால், அது உடனே பல புதுமையான யோசனைகளையும், ஸ்டைல் குறித்த வழிகாட்டுதலையும் வழங்கும். குறிப்பிட்ட அறையின் புகைப்படத்தைப் பகிர்ந்து கூட அதற்கான பரிந்துரைகளைக் கேட்கலாம்.
இன்டீரியர் டிசைனர்களின் ஆலோசனைகளைப் பெற நிறையச் செலவாகலாம் அல்லது நேரம் கிடைக்காமல் போகலாம். ஆனால், சாட் ஜிபிடி உங்களுக்கு ஒரு இலவச வடிவமைப்பாளர் போலச் செயல்படும். உங்கள் பட்ஜெட்டைச் சொன்னால், அதற்கேற்ற அலங்காரப் பொருட்கள், நிறத் தேர்வுகள் குறித்த ஆலோசனைகளை வழங்கும். சிறிய இடங்களான பால்கனி, சமையலறை போன்றவற்றை எவ்வாறு பயனுள்ள வகையில் அழகுபடுத்துவது என்பதற்கும் இது யோசனைகளைத் தரும். ஒரு சிறிய அறையின் புகைப்படத்தைக் காட்டி, அதைப் புதுப்பிக்க என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்று கேட்டாலும் உதவும்.
வீடுகளுக்கான பொருட்களைத் தேர்ந்தெடுப்பது, அலங்கரிப்பது மட்டுமின்றி, சுவர்களுக்கு என்ன நிறம் பூசுவது, ஒரு குறிப்பிட்ட அறையை ஒரு குறிப்பிட்ட color theme எப்படி அமைப்பது என்பதற்கும் சாட் ஜிபிடி உதவும். உங்களுக்குப் பிடித்த ஒரு நிறத்தை வீட்டில் எப்படிப் பயன்படுத்துவது என்று கேட்டால், அது உங்களுக்கு வழி காட்டும்.
புதிதாகத் தோட்டம் அமைப்பவர்களுக்கும் இது ஒரு சிறந்த நண்பன். எந்தச் செடி எப்போது பூக்கும், காய்க்கும், அல்லது மூலிகைச் செடிகள் பற்றிய தகவல்கள் என அனைத்தையும் கேட்கலாம். ஒரு பூவின் படத்தைக் காட்டி அது எந்தச் செடியைச் சேர்ந்தது என்று கேட்டாலும் சொல்லும்.
இப்படி உங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு வீடு மற்றும் தோட்டத்தை மாற்றியமைக்க சாட் ஜிபிடி ஒரு சக்தி வாய்ந்த கருவியாக மாறியுள்ளது.