

நம் வீட்டில் மயிலிறகை(Peacock feather) அழகுக்காகவும், வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை விரட்டி அடித்து பாசிட்டிவ் எனர்ஜியை வீடு முழுவதும் நிரம்ப செய்வதற்காகவும் வைத்திருப்போம். ஆனால், மயிலிறகில் இன்னும் சில அதிசய சக்திகள் ஒளிந்திருப்பதை அறிந்து விஞ்ஞானிகளே அதிர்ச்சி அடைந்துவிட்டார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
நாம் அனைவருமே சிறுவயதில் மயிலிறகை வைத்து விளையாடியிருப்போம். அதை புத்தகத்தின் நடுவிலே வைத்து மயிலிறகு குட்டி போடும் என்று நம்பியிருப்போம். ஆனால், ஒரு லேசர் லைட்டுக்கான ஒளி மயிலிறகில் இருக்கிறது என்பது அப்போது தெரியாது. இப்போது தெரியவந்திருக்கிறது!
ஒரு சாதாரண பல்பில் இருந்து வரும் ஒளி எல்லா பக்கமும் சிதறி போகும். அதனுடைய அலைகள் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாமல் இருக்கும். ஆனால், லேசர் லைட் ஒரே நேரத்தில் லைட்டை வெளியிடும். மேலும் இது ஒரே Wavelength ல் இருக்கும். லேசர் லைட் பயணிப்பதும் ஒரே நேர்க்கோட்டில் தான் பயணிக்கும். இந்த ஒளி மிகவும் பிரகாசமாக இருக்கும்.
இரண்டு கண்ணாடிகளை வைத்து அந்த ஒளியை முன்பும் பின்பும் மோதவிட்டு பல மடங்கு அதனுடைய ஒளியை அதிகப்படுத்தி தான் லேசர் லைட்டை உருவாக்குவார்கள். ஆனால், தற்போது அமேரிக்காவில் உள்ள பிளோரிடா பாலிடெக்னிக் யுனிவர்சிட்டியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு அரிய விஷயத்தை கண்டுப்பிடித்துள்ளனர். இவர்கள் மயிலிறகை வைத்து நடத்திய ஆராய்ச்சியில் தான் இது தெரிய வந்துள்ளது.
நாம் பார்க்கும் மயிலிறகு நம் கண்ணை பறிக்கும் நிறத்தில் இருக்கும் பார்த்திருக்கிறீர்களா? இதற்கு காரணம் மயிலிறகில் கண் போன்ற வடிவம் இருக்கும் இடத்தில் லேசர் லைட்டை உருவாக்கும் அமைப்பு இயற்கையாகவே உள்ளது. அதில் இருக்கும் நேனோ ஸ்ட்ரக்சரில் இருந்து ஒளியை முன்னும் பின்னுமாக பிரதிபலித்து பல மடங்கு அந்த ஒளியை பெருக்கி லேசர் லைட்டாக மாற்றுகிறது என்று கண்டுப்பிடித்துள்ளனர்.
இந்த கண்டுப்பிடிப்பை விஞ்ஞானிகள் மிகவும் முக்கியமாக கருதுகிறார்கள். ஏனெனில், வருங்காலத்தில் இதை வைத்து புதிதாக மருத்துவ இமேஜிங்கை உருவாக்குவது, புதுமையான சிகிச்சைகளை உருவாக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.