

பொதுவாக நம் வீட்டுத் தோட்டத்திலோ அல்லது வரவேற்பறையிலோ இருக்கும் செடிகள் பகலில் பச்சையாகவும், அழகாகவும் இருக்கும். ஆனால், அதே செடிகள் இரவில் மின்சார விளக்கு போல ஜொலித்தால் எப்படி இருக்கும்? கற்பனைக்கே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா!
இந்தக் கற்பனையை நிஜமாக்கியிருக்கிறார்கள் சீனாவின் குவாங்சூவைச் (Guangzhou) சேர்ந்த 'தென் சீன வேளாண் பல்கலைக்கழக' (South China Agricultural University) ஆராய்ச்சியாளர்கள். அவர்கள் கண்டுபிடித்த ஒரு தொழில்நுட்பம் மூலம், சாதாரணச் செடிகளை வண்ணமயமான இரவு விளக்குகளாக மாற்ற முடியும்.
எப்படி ஒளிர்கிறது?
இதற்கு அவர்கள் மரபணு மாற்றம் எதையும் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, 'பாஸ்பர்' (Phosphor) எனப்படும் ஒளிரும் தன்மையுள்ள 'நானோ துகள்களை' (Nanoparticles) பயன்படுத்தியுள்ளனர். இருட்டில் ஒளிரும் பொம்மைகளில் இருப்பதைப் போன்றதுதான் இந்த வேதிப்பொருள்.
இந்தத் துகள்களைச் செடியின் இலைகளுக்குள் செலுத்திவிட்டால் போதும். அந்தச் செடிகள் சூரிய ஒளியிலோ அல்லது எல்.இ.டி விளக்கிலோ வெறும் இரண்டு நிமிடங்கள் இருந்தாலே சார்ஜ் ஆகிவிடும். அதன்பிறகு, சுமார் இரண்டு மணி நேரம் வரை அந்தச் செடிகள் சிவப்பு, பச்சை, நீலம் எனப் பல வண்ணங்களில் அழகாக ஒளிரும்.
இதற்கு முன்பு மின்மினிப் பூச்சியின் என்சைம்களை வைத்துச் செடிகளை ஒளிர வைக்க முயன்றார்கள். ஆனால் அது மிகவும் கடினமான முறை. சீன ஆராய்ச்சியாளர்கள் செய்த இந்த புதிய முறையில் செலவும் குறைவு, வேலையும் சுலபம்.
ஆனால், இதில் ஒரு சவால் இருந்தது. துகள்கள் மிகவும் சிறிதாக இருந்தால் வெளிச்சம் குறைவாக இருந்தது; பெரிதாக இருந்தால் இலைகளுக்குள் பரவவில்லை. பல சோதனைகளுக்குப் பிறகு, 7 மைக்ரோமீட்டர் என்பதே சரியான அளவு என்று கண்டுபிடித்தனர். மேலும், கீரை போன்ற மெல்லிய இலைகளை விட, சதைப்பற்றுள்ள தாவரங்களில்தான் இது மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது என்பதையும் கண்டறிந்தனர்.
இவ்வாறு ஒளிரும் செடியை உருவாக்க அதிக செலவாகாது. ஒரு செடியைத் தயார் செய்ய 10 நிமிடங்களும், சுமார் 120 ரூபாயும் மட்டுமே செலவாகும். தொடர்ந்து 10 நாட்கள் நடத்திய ஆய்வில், இந்தத் துகள்களால் செடியின் இலைகள் வாடவோ, பழுக்கவோ இல்லை; அவை ஆரோக்கியமாகவே இருந்தன.
தற்போது இந்தத் தொழில்நுட்பம் செடிகளுக்குப் பாதுகாப்பானதா என்று நீண்ட கால ஆய்வுகள் நடந்து வருகின்றன. இது வெற்றியடைந்தால், எதிர்காலத்தில் நம் வீட்டுத் தோட்டங்களிலும், பூங்காக்களிலும் மின்சார விளக்குகளுக்குப் பதிலாக, ஜொலிக்கும் செடிகளே வெளிச்சம் தரும்.