
தற்போது பல வீடுகளில் வீட்டிற்குள் செடி வளர்க்கிறார்கள். அதனால் பல நன்மைகள் உண்டு என்கிறார்கள். உங்கள் வீட்டில் செடிகளை வளர்ப்பதால் அது வீட்டினுள் உருவாகும் கெட்ட நச்சு வாயுக்களையும், மாசுக்களையும் 24 மணி நேரத்தில் 87 சதவீதம் வெளியேற்றி விடுகிறது என்கிறார்கள் நாசா ஆய்வு விஞ்ஞானிகள்.
இரவும் பகலும் ஒளிச்சேர்க்கையை (Photosynthesis) செய்வதால், செடிகள் தொடர்ந்து ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. அதேசமயம், ஃபார்மால்டிஹைட், பென்சீன், சைலீன் போன்ற விஷமான காற்று மாசுபடுத்திகளை உறிஞ்சி, உட்புற சூழலை சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும்.
உங்களது வீட்டிற்குள் எப்போதும் சுத்தமான காற்று உலாவ வேண்டும் என்றால் வீட்டினுள் தாவரங்களை வளர்க்க வேண்டும்.அது ஆக்ஸிஜன் நிறைந்த காற்றை வெளியிடுகிறது (அல்லி, கற்றாழை, பீஸ் லில்லி, ஸ்பைடர் தாவரங்கள்).
வீட்டினுள் வளரும் செடிகள் வீட்டில் இருப்பவர்களின் ஒருமுக சிந்தனையையும், வேலை செய்யும் திறனையும் 15 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மேலும், உங்களிடம் ஏற்படும் மன இறுக்கத்தை குறைத்து உங்களை நல்ல மனநிலையில் வைத்திருக்க உதவுகிறது என்கிறார்கள்.
வீடுகளில் செடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
உடலின் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது, வேலை செய்வதில் நாட்டம் ஏற்பட உதவுகிறது. வேலை செய்வதில் ஒரு ஒழுங்கு ஏற்பட உதவுகிறது. அதுவே குழந்தைகளுக்கு அவர்களின் பள்ளிகளிலும், வெளியே வேலை செய்கின்றவர்களுக்கு அவர்களின் பணியிடத்திலும் தொடர உதவுகிறது. மேலும், வேலை திறனையும் அதிகரிக்கிறது. பதற்றத்தை தணித்து பணியில் சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. வேலை செய்வதில் ஒரு திருப்தியை உணர வைக்கிறது.
வீட்டில் நோயாளிகள் இருந்தால், அவர்களின் பதற்றத்தை தணித்து நோய்களிடமிருந்து விரைவில் அவர்கள் குணமடைய உதவுகிறது என்கிறார்கள்.
காலையில் எழுந்ததும் முதல் வேலையாகவும், இரவில் தூங்கச் செல்லும் முன் கடைசியாகவும் நீங்கள் வளர்க்கும் செடிகளுடன் அமைதியாக உணர்வுகளை பறிமாறிக் கொள்ளுங்கள்.இது நரம்பு தளர்ச்சியால் விளையும் சிடுசிடுப்பையும், வெறுப்புணர்வையும் போக்கும் என்கிறார் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர் டிகஷன் குக்ரெஜா.
அலுவலக வேலை பளு காரணமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறீர்களா? இதிலிருந்து விடுபட, உங்கள் மேஜை மீது ஒரு சிறிய தொட்டியில் செடியை வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள் நார்வே யுனிவர்சிட்டி ஆஃப் லைஃப் சயின்ஸ் ஆராய்ச்சியாளர்கள்.
அலுவலக அறையில் செடி வளர்க்கப்படுகிறதா? அங்கு ஊழியர்கள் அடிக்கடி உடல் நலக்குறைவு காரணமாக லீவு எடுப்பதில்லை என்கிறார்கள். மேலும், அலுவலகங்களில் ஆங்காங்கே தொட்டிகளில் செடியை வளர்க்கும்போது, ஊழியர்களுக்கு மன அழுத்தம், தொண்டை வறட்சி, தலை வலி, இருமல் மற்றும் சரும வறட்சி ஆகிய பாதிப்புகள் குறைவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பொதுவாக, பச்சை பசேல் என்று செடி, கொடிகளை பார்ப்பதால் மனம் உற்சாகம் அடையும், இதுவே நோய்கள் குணமாக உதவுகிறது என்கிறார்கள். அலுவலகப் பணி என்பது மூளை சம்பந்தப்பட்டது. அதிக வேலை பளு காரணமாக மூளை சோர்வடையும் இதனை பசுமையான சூழலால் போக்க முடியும் என்கிறார்கள்.
வாரத்திற்கு ஒருசில நாள்கள் 20 முதல் 30 நிமிடங்கள் தோட்டக்கலையில் ஈடுபடுவது மன அழுத்தத்தைக் குறைத்து ஆரோக்கியமான மனநிலையை உயர்த்தும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. மேலும், இவர்களுக்கு ஞாபக மறதி நோய் வராமல் தடுக்க உதவுகிறது என்கிறார்கள்.