1 கிலோ தங்கம் = 1 ரூபாயா? பூமிக்கு வரப்போகும் ரூ.83,000 லட்சம் கோடி ஜாக்பாட்!

Gold Asteroid
Gold Asteroid
Published on

நாம் இரவில் வானத்தைப் பார்க்கும்போது நட்சத்திரங்களையும், கோள்களையும் பார்க்கிறோம். ஆனால், இதே சூரிய குடும்பத்தில், பூமி, செவ்வாய், வியாழன் போல ஒரு கோள் உருவாக முயற்சி செய்து, தோல்வியடைந்த ஒரு பொருளின் மிச்சம் சுற்றிக் கொண்டிருக்கிறது. 

அது சாதாரண பாறையோ, பனிக்கட்டியோ அல்ல... அது ஒரு மாபெரும் உலோகப் புதையல். அதன் பெயர் '16 சைகே' (16 Psyche). இந்த ஒரு விண்கல், நம் ஒட்டுமொத்த பூமிப் பொருளாதாரத்தையே தலைகீழாக மாற்றும் சக்தி கொண்டது.

ரூ.83,000 லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷம்!

செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையே உள்ள விண்கல் பாதையில் இந்த 'சைகே' சுற்றிக்கொண்டிருக்கிறது. இதன் மதிப்பு ஏன் இவ்வளவு அதிகம்? ஏனென்றால், இது முழுக்க முழுக்க இரும்பு, நிக்கல் மற்றும் தங்கம் போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களால் ஆனது. 

விஞ்ஞானிகள் இதன் மதிப்பை சுமார் 83,000 லட்சம் கோடி ரூபாய் என்று மதிப்பிடுகின்றனர். எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், பூமியில் உள்ள அனைத்து நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பையும் கூட்டினால் கூட, இந்த ஒரு கல்லின் மதிப்புக்கு ஈடாகாது. இது ஒரு உருளைக்கிழங்கு வடிவத்தில், சுமார் 226 கி.மீ அகலத்தில் ஒரு உலோக மலையாக மிதந்து கொண்டிருக்கிறது.

இதன் பண மதிப்பை விட, விஞ்ஞானிகளுக்கு இதன் அறிவியல் மதிப்புதான் முக்கியம். பூமி போன்ற கோள்கள் உருவாகும்போது, கனமான உலோகங்கள் அதன் மையப் பகுதிக்கும், இலகுவான பாறைகள் மேற்பகுதிக்கும் பிரிந்துவிடும். 

'சைகே' ஏதோ ஒரு காரணத்தால் சிதைந்து போன ஒரு 'தோல்வியுற்ற கோளின்' (Failed Planet) வெளிப்படையான உலோக மையமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. நம்மால் பூமியின் மையத்திற்குச் சென்று ஆய்வு செய்ய முடியாது. ஆனால், சைகேவை ஆய்வு செய்வதன் மூலம், நம் பூமியின் மையம் எப்படி இருக்கும், கோள்கள் எப்படி உருவானன போன்ற பிரபஞ்ச ரகசியங்களைத் தெரிந்துகொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்:
நிலவில் அணு உலை… 2026ம் ஆண்டுக்குள் அமைக்க நாசா திட்டம்..!
Gold Asteroid

நாசாவின் வரலாற்றுப் பயணம்!

இந்த உலோக உலகத்தை ஆய்வு செய்வதற்காகவே, நாசா 'சைகே' என்ற பெயரிலேயே ஒரு விண்கலத்தை அனுப்பியுள்ளது. 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலம், விண்வெளியில் ஒரு வினாடிக்கு 23 மைல் என்ற அசுர வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. 

இது பல நூறு மில்லியன் மைல்கள் பயணம் செய்து, 2029-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த விண்கல்லைச் சென்றடையும். ஒரு உலோக மையத்தை ஆய்வு செய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

பூமிக்கு வந்தால் என்ன ஆகும்?

சரி, கட்டுரையின் தலைப்புக்கு வருவோம். ஒருவேளை இந்த விண்கல் பூமி மீது மோதினால் என்ன ஆகும்? நிச்சயமாக அது ஒரு கொண்டாட்டமாக இருக்காது. இவ்வளவு பெரிய உலோகப் பாறை மோதினால், அது டைனோசர்களை அழித்ததை விடப் பெரிய பேரழிவை ஏற்படுத்தும், மனித இனமே அழியக்கூடும். சரி, மோதலை விடுங்கள். 

இதையும் படியுங்கள்:
ஒரு தண்ணீர்க் கதை
Gold Asteroid

ஒரு கற்பனைக்காக, அந்த விண்கல்லில் உள்ள தங்கம், இரும்பு அனைத்தையும் நாம் பூமிக்குக் கொண்டு வந்துவிட்டால் என்ன ஆகும்? உலகப் பொருளாதாரம் ஒரே நாளில் செயலிழந்துவிடும். தங்கத்தின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்திக்கும். இன்று நாம் அலுமினியத்தைப் பார்ப்பது போல, தங்கம் ஒரு சாதாரண உலோகமாக மாறிவிடும். ஒரு கிலோ தங்கம் ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் நிலை கூட வரலாம்.

அதிர்ஷ்டவசமாக, 'சைகே' நம்மை நோக்கி வரவில்லை. அது அதன் பாதையில் பாதுகாப்பாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது. இப்போதைக்கு, அது நமக்கு ஒரு பணப் புதையல் என்பதை விட, ஒரு அறிவியல் பொக்கிஷம் என்பதே உண்மை. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com