

சர்வதேச விண்வெளி மையத்தில் சுமார் 245 நாட்கள் ஆய்வுப் பணியை மேற்கொண்ட நாசா விஞ்ஞானிகள் மூன்று பேர், சோயுஸ் எம்எஸ்-27 விண்கலத்தின் வாயிலாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். இதனையொட்டி சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து, விண்கலம் வெற்றிகரமாக பிரிந்திருப்பதாக நாசா (NASA) தெரிவித்துள்ளது. மேலும் விண்கலம் பிரியும் வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சிக்காக தங்கியிருந்த இந்தக் காலகட்டத்தில் மட்டும் 3 விஞ்ஞானிகளும் பூமியை கிட்டத்தட்ட 3,920 முறை சுற்றி வந்ததாக நாசா தெரிவித்துள்ளது. இதுதவிர விண்வெளியில் இவர்கள் 104 மில்லியன் மைல் தொலைவு, அதாவது 167 மில்லியன் கிலோமீட்டர்கள் வலம் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கஜகஸ்தானில் புல்வெளிகள் அதிகம் நிறைந்த சமவெளிப் பகுதியில் சோயுஸ் எம்எஸ்-27 விண்கலம் தரையிறங்கியது.
நாசாவின் ஜானி கிம், மற்றும் ரோஸ்கோஸ்மோஸைச் சேர்ந்த செர்கே ரைஷிகோவ், அலெக்ஸெய் சுப்ரிட்ஸ்கி ஆகியோர் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு வந்தனர். கிம் மற்றும் சுப்ரிட்ஸ்கிக்கு இது முதல் விண்வெளிப் பயணமாகவும், ரைஷிகோவுக்கு மூன்றாவது பயணமாகவும் அமைந்தது. ரைஷிகோவ் நிலையத்தின் எக்ஸ்பிடிஷன் 73 மிஷனின் தளபதியாகவும் இருந்தார்.
திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தால், கிம் மற்றும் அவரது சக விஞ்ஞானிகளை ஏற்றிச் செல்லும் சோயூஸ் விண்கலம் செவ்வாய்க்கிழமை (டிச. 9) அதிகாலை 12:03 மணிக்கு அன்று கஜகஸ்தானின் புல்வெளியில், ஜெஸ்கஸ்கான் நகரம் அருகே தரையிறங்கும் என நாசா ஏற்கனவே தெரிவித்தது. இதன்படி 3 விஞ்ஞானிகளும் பத்திரமாக பூமிக்குத் திரும்பி உள்ளனர்.
கிம், ரைஷிகோவ் மற்றும் சுப்ரிட்ஸ்கி ஆகிய மூவரும் சர்வதேச விண்வெளி மையத்தை விட்டு புறப்பட்டதும், அந்தச் சுற்றுப்பாதையில் உள்ள ஆய்வகத்தில் ஏழு பேர் மீதமிருந்தனர். அவ்வகையில் தற்போது ரோஸ்கோஸ்மோஸைச் சேர்ந்த ஒலெக் பிளாட்டோனோவ், செர்கே குட்-ஸ்வெர்ச்கோவ், செர்கே மிகாயேவ், நாசா விண்வெளி வீரர்கள் சீனா கார்ட்மேன், மைக் பின்கே மற்றும் கிரிஸ் வில்லியம்ஸ், ஜப்பான் விண்வெளி வீரர் கிமியா யுயி ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜானி கிம், செர்கே ரைஷிகோவ் மற்றும் அலெக்ஸெய் சுப்ரிட்ஸ்கி ஆகியோர் நேற்று முன்தினம் திங்கள்கிழமை (டிசம்பர் 8) அன்றிரவு 8:41 மணிக்கு, சோயூஸ் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) விட்டு புறப்பட்டனர். இவர்கள் சுமார் 3.5 மணி நேரப் பயணத்திற்கு பிறகு, டிசம்பர 9 ஆம் தேதி அதிகாலை 12:03 அன்று பூமியில தரையிறங்கினர்.