தமிழில் இயங்கும் கூகுளின் ஜெமினி AI: இந்தியாவில் அறிமுகம்!

Gemini AI in India
Gemini AI in India
Published on

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கூகுளின் ஜெமினி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் 9 மொழிகளில் கிடைக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை இப்போது காண்போம்‌.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் எதுவும் சாத்தியம் என்பது நிரூபித்துக் காட்டியுள்ளது AI எனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம். இதன்படி 2022 ஆம் ஆண்டின் இறுதிக்கட்டத்தில் ஓபன்AI நிறுவனம், சாட் ஜிபிடியை அறிமுகப்படுத்தியது. இது தொழில்நுட்ப உலகையே ஒருபடி மேலே கொண்டு சென்றது என்று தான் சொல்ல வேண்டும். பயனாளர்கள் கேட்கும் கேள்விகளை உள்வாங்கி திறமையாக பதில் சொல்லி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது சாட் ஜிபிடி. இதனால் இணைய உலகத்தை ஆளும் கூகுளுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதன்பிறகு AI களத்தில் குதித்த கூகுள், கடந்த ஆண்டின் இறுதியில் ஜெமினி எனும் செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்தி AI ரேஸில் நாங்களும் இருக்கிறோம் என்று உலகிற்கு உணர்த்தியது. இருப்பினும், சாட் ஜிபிடி ஏற்படுத்திய தாக்கத்தை ஜெமினியால் ஏற்படுத்த முடியவில்லை. ஆகையால் ஜெமினியில் சில மாற்றங்கள் வரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப தற்போது புதிய அம்சங்களுடன் ஜெமினி AI இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மனிதர்களைப் போல சிந்தித்துச் செயலாற்றும் திறனை ஜெமினி AI கொண்டுள்ளது எனக் கூறப்படுகிறது. முதன்முதலில் அமெரிக்காவில் அறிமுகமான ஜெமினி செயற்கை நுண்ணறிவு செயலி தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜெமினி AI-யில் முன்பு ஆங்கில மொழி மட்டுமே செயலில் இருந்தது. ஆனால் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், குஜராத்தி, உருது, பெங்காலி மற்றும் மராத்தி போன்ற 9 இந்திய மொழிகளில் ஜெமினி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தியாவைத் தவிர்த்து பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் துருக்கி போன்ற நாடுகளிலும் ஜெமினிAI அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. கணிதம், வரலாறு, இயற்பியல் மற்றும் மருத்துவம் உள்பட 57 பாடப்பிரிவுகளில் ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பதற்கு ஜெமினி AI உதவும். இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். கூகுளில் பயன்படுத்தப்பட்டு வந்த முந்தைய குரல் உதவியாளரைப் போலவே, ஜெமினியையும் “ஹே கூகுள்” என்று அழைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
AI ஆசிரியை அவசியம்தானா!
Gemini AI in India

தற்போது சாட் ஜிபிடிக்கு நிகராக, கூகுளின் ஜெமினியும் புதிய அம்சங்களுடன் பயனாளர்களைக் கவர்ந்துள்ளது. படங்களைப் பகுப்பாய்வு செய்வதற்கும், கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்கு மற்றும் அது தொடர்பான கேள்விகளை கேட்பதற்கும் ஜெமினி உதவியாக இருக்கிறது. இது கூகுளின் மற்ற சேவைகளான மேப்ஸ் மற்றும் ஜிமெயிலுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் நிகழ்நேர பயனர் உரையாடல்களை மொழிபெயர்க்கவும் முடியும்.

9 இந்திய உள்நாட்டு மொழிகளில் கூகுளின் ஜெமினி செயற்கை நுண்ணறிவு செயலி கிடைப்பதால், இந்தியாவில் இதன் பயன்பாடு இனிவரும் காலங்களில் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com