மனித குலம் தன் வாழ்நாளை நீட்டிக்க வேண்டும் என பலகாலமாக முயற்சித்து வருகிறது. அந்த ஆசையின் விளைவாகவே Cryonics என்ற ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாகியுள்ளது. Cryonics என்பது மிகக் குறைந்த வெப்பநிலையில் மனித உடலைப் பாதுகாத்து, எதிர்காலத்தில் மருத்துவம் மேம்பட்ட பிறகு உயிர்ப்பிக்கலாம் என்ற ஒரு கோட்பாடாகும்.
Cryonics என்ற கருத்து முதன்முதலில் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்க எழுத்தாளர் Robert Ettingerதான் Cryonics என்ற சொல்லையே உருவாக்கினார். அவர் 1962 ஆம் ஆண்டு வெளியிட்ட ‘The Prospect of Immortality’ என்ற புத்தகத்தில், Cryonics தொழில்நுட்பம் குறித்து விரிவாக எழுதியிருந்தார். எனவே, இவர்தான் Cryonics தொழில்நுட்பத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
Cryonics எவ்வாறு செயல்படுகிறது?
ஒரு நபர் இறந்தவுடன் அவரது உடல் மிகக் குறைந்த வெப்பநிலையில் குளிர்விக்கப்படுகிறது. இந்த செயல்முறை ‘Vitrification’ என்று அழைக்கப்படுகிறது. அதன் மூலம் உடலில் உள்ள நீர் படிவங்களாக மாறாமல், கண்ணாடி போன்ற ஒரு நிலைக்கு மாற்றப்படுகிறது. இதனால் உடலின் செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம்.
Ettinger-ன் புத்தகம் வெளியிடப்பட்ட பிறகு, Cryonics தொழில்நுட்பம் மீது மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கினர். இதன் காரணமாக பல Cryonics நிறுவனங்கள் உருவாக்கின. இந்த நிறுவனங்கள் மக்களின் உடலைப் பாதுகாத்து, எதிர்காலத்தில் மீண்டும் உயிர்பிக்க உதவுகிறோம் என்று வாக்குறுதி அளிக்கின்றனர்.
சவால்கள்: Cryonics தொழில்நுட்பம் இன்னும் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை. இந்தத் தொழில்நுட்பம் சார்ந்த பல சவால்கள் உள்ளன. ஏனெனில், இது மிகவும் சிக்கலானது. உடலை மிகக் குறைந்த வெப்பநிலையில் பாதுகாத்து, அதை மீண்டும் உயிர்பிக்கத் தேவையான தொழில்நுட்பம் இன்றும் கண்டறியப்படவில்லை. மேலும், பல நாடுகள் இந்தத் தொழில்நுட்பத்தை சட்டப்படி அங்கீகரிக்கவில்லை. இதனால், Cryonics நிறுவனங்கள் பல சட்டபூர்வமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
Cryonics தொழில்நுட்பம் சமூகத்தில் பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. சிலர் இதை விஞ்ஞானத்தின் எதிர்காலமாகப் பார்க்கிறார்கள். மற்றவர்கள், இதை ஒரு பொய்யான நம்பிக்கை என்று கருதுகிறார்கள். எனவே, இந்தத் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்து பல கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால், தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருவதால், ஒரு காலத்தில் Cryonics தொழில்நுட்பம் வளர்ச்சி அடையலாம் என நம்பப்படுகிறது.
இருப்பினும் இந்தத் தொழில்நுட்பத்தால் மனிதர்கள் சாகா வரம் பெறுவார்கள் என்பதால், இது இந்த உலகில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.