மனிதர்கள் பொய் சொல்வது சாதாரணமானதுதான் என்றாலும், அது அவர்களின் வாழ்க்கையின் பல அம்சங்களை வெகுவாக பாதிக்கிறது. அரசியல், நீதித்துறை தனிப்பட்ட உறவுகள் போன்ற பல்வேறு துறைகளில் பொய்கள் பல்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, நீதித்துறையில் குற்றவாளிகள் பொய் சொல்லி தப்பிக்க முயல்கின்றனர். அதைத் தடுப்பதற்காகவே பொய்யைக் கண்டுபிடிக்கும் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பதிவில் பொய் சொல்வதைக் கண்டுபிடிக்கும் கருவிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றி பார்க்கலாம்.
பொய் கண்டறியும் கருவிகள்: பொய் கண்டறியும் கருவிகள் என்பவை, ஒரு நபர் பொய் சொல்லும்போது, வெளிப்படுத்தும் உடல் மற்றும் நடத்தை சார்ந்த அறிகுறிகளை அளவிட்டு, பகுப்பாய்வு செய்ய பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமாகும். இந்தக் கருவிகள் பொதுவாக முக பாவங்கள், குரல் மற்றும் நரம்பியல் செயல்பாடுகளை கண்காணிக்கின்றன.
பொய் கண்டறியும் கருவிகளின் வகைகள்:
பாலிகிராஃப்: இது பொய்யினைக் கண்டறியும் மிகவும் பொதுவான கருவி. இது ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, சுவாசம் மற்றும் சருமத்தில் ஏற்படும் மாற்றங்களை அளவிடுகிறது. பொய் சொல்லும்போது உடல் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுவதால், அது கண்காணிக்கப்பட்டு பொய் கண்டுபிடிக்கப்படுகிறது.
உடல் வெப்பநிலை கண்காணிப்பு: பொய் சொல்லும்போது உடல் வெப்பநிலை மாறுபடும் என்பதற்கான சில ஆதாரங்கள் உள்ளன. இந்த முறை உடலில் வெப்பநிலை மாற்றங்களை கண்காணித்து பொய்யைக் கண்டறியும்.
முகபாவம் பகுப்பாய்வு: பொய் சொல்லும்போது முக பாவங்கள் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கண்கள், வாய் மற்றும் புருவங்கள் போன்ற முகத்தின் பல்வேறு பகுதிகளின் இயக்கங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம், பொய்யைக் கண்டுபிடிக்கலாம்.
குரல் பகுப்பாய்வு: பொய் சொல்லும்போது ஒருவர் பேசும் வார்த்தைகளில் ஏற்ற இறக்கங்கள், பேச்சு வேகம் போன்றவை மாறுபடும். இந்த முறையில் ஒருவரது குரல் பகுப்பாய்வு செய்யப்பட்டு பொய் கண்டுபிடிக்கப்படும்.
நரம்பியல் பகுப்பாய்வு: Functional Magnetic Resonance Imaging மற்றும் Electroencephalography போன்ற நரம்பியல் கருவிகள், மூளை செயல்பாட்டை அளவிட பயன்படுத்தப்படுகின்றன. ஒருவர் பொய் சொல்லும்போது மூளையின் வெவ்வேறு பகுதிகளில் மாற்றங்கள் ஏற்படும் என்பதால், கருவிகளைப் பயன்படுத்தி பொய்யை கண்டுபிடிக்கிறார்கள்.
பொய் கண்டறியும் கருவிகள் பொதுவாக ஒரு நபரிடம் கேள்வி கேட்டு, அவர்களின் உடல் மற்றும் நடத்தை சார்ந்த பதில்களை பதிவு செய்கின்றன. பின்னர், கிடைத்த தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு பொய் சொல்லும் சாத்தியக்கூறுகள் மதிப்பிடப்படுகின்றன. இருப்பினும், பொய் கண்டறியும் கருவிகள் தனிப்பட்ட உரிமைகளை மீறுவதாக சிலர் கருதுகின்றனர். நீதித்துறையில் குற்றவாளிகளைக் கண்டறிய இவை பயன்படுத்தப்பட்டாலும், இந்த கருவிகளின் துல்லியத்தன்மையில் உள்ள பிழை காரணமாக, தவறான குற்றச்சாட்டுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.