சுனாமி எனும் பெருங்கடல் சீற்றம் எப்படி ஏற்படுகிறது?

Tsunami
Tsunami

சுனாமி (Tsunami) என்பது இரண்டு எழுத்துகளைச் கொண்ட ஒரு ஜப்பானிய மொழிச் சொல்லாகும். ‘ச’ என்னும் ஜப்பானிய மொழி எழுத்தானது துறைமுகம் என்பதைக் குறிப்பிடுகிறது. ‘னாமி’ என்ற எழுத்தானது அலைகளைக் குறிப்பிடுகிறது. இரண்டையும் சேர்த்தால் ‘துறைமுக அலைகள்’ என்று பொருள் வருகிறது.

கடலின் தரைப்பகுதிகளில் நிலநடுக்கம், எரிமலை வெடித்தல் மற்றும் நிலச்சரிவுகள் போன்றவை கடுமையான அளவில் ஏற்படும் சமயங்களில் கடலானது பெரும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. இதன் காரணமாக கடல் சீற்றமடைந்து மிகப்பெரிய கடல் அலைகளை ஏற்படுத்துகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் அலைகளானது கடலுக்குள் மிகவேகமான முறையில் கரைப்பகுதிகளை நோக்கி பயணிக்கிறது. முடிவில் ஆக்ரோஷமான இத்தகைய கடல் அலைகள் கடலின் கரைப் பகுதிகளில் மோதி பெரும் உயரத்திற்கு எழும்பிச் சிதறி கடல் நீரானது கடற்கரையை ஒட்டியுள்ள நிலப்பகுதிகளுக்குள் புகுந்து அப்பகுதியில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தி அங்கு வசிப்போரின் உயிரையும் பறித்துவிடுகிறது. இத்தகைய பெரும் கடல் சீற்றமே சுனாமி என்று அழைக்கப்படுகிறது.

கடலின் தரைப்பகுதியில் நிகழ்ந்த பூகம்பம் எரிமலை வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்ட இடத்திலிருந்து உருவாகும் கடல் பேரலைகள் ஆனது, பல ஆயிரம் மைல்களுக்கு பயணித்து இறுதியில் கடற்கரைப் பகுதியை அடைந்து தாக்கும் இயல்புடையவை.

பெரும்பாலான சுனாமி பேரலைகளானது கடலின் தரைப்பகுதியில் ஏற்படும் பெரும் பூகம்பங்களாலேயே உருவாகின்றன. கடல் பூகம்பங்கள் 8.0 ரிக்டர் அளவிற்கு மேல் பதிவாகும்போது மட்டுமே சுனாமி பேரலைகள் உருவாக்கப்படுகின்றன. கடல் பூகம்பங்கள் ரிக்டர் அளவில் 8.0க்கு கீழ் பதிவாகும்போது சுனாமி பேரலைகள் உண்டாவதில்லை. சில சமயங்களில் உண்டாக்கப்பட்டாலும் அவற்றின் தாக்குதலானது குறைவான அளவிலேயே இருக்கும்.

சுனாமி பேரலையானது கடற்கரையை தாக்கும் முன்னால் கடற்கரைப் பகுதிகளில் உள்ள நீரானது 100 அடிகள் முதல் 200 அடிகள் வரை உள்நோக்கி இழுக்கப்படும். பின்னர் ஒரு பெரும் சக்தியுடன் அலைகளானது கரையைத் தாக்கி மோதி 40 மீட்டர்கள் முதல் 100 மீட்டர்கள் உயரம் வரை எழும்பி கரையை அடைந்து அப்பகுதிகளை சேதப்படுத்திவிடுகின்றன.

இதையும் படியுங்கள்:
பயனர் உருவாக்கும் உள்ளடக்கங்கள் (User Generated Content)!
Tsunami

இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியானது எவ்வாறு ஏற்பட்டது இப்போது பார்க்கலாம். நாம் வசிக்கும் பூமிக்குள் பல பிரிவுகள் அமைந்துள்ளன. இதில் ஒரு பிரிவாகிய ‘க்ரெஸ்ட்’ எனப்படும் பகுதியில் நகரக்கூடிய பாறைப் பலகைகள் போன்ற அமைப்பு காணப்படுகிறது. இவை ‘டெக்டானிக் பிளேட்டுகள்’ என்று அழைக்கப்படுகின்றன.

இந்தப் பாறைப் பலகைகளில் இரண்டு பலகைகள் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள சுமத்ரா தீவின் தென்கிழக்குப் பகுதியில் சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் தங்கள் வழக்கமான இடத்திலிருந்து திடீரென்று நழுவி விட்டன.

இதன் காரணமாக கடலின் தரைப்பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு கடல் அதிர்ச்சிக்குள்ளானது. இதனால் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 9.0 அளவாக பதிவானது.

கடலின் தரைப்பகுதியில் நிலநடுக்கம் உண்டானதும் கடல் அலைகளானது அனைத்து திசைகளிலும் பரவி பயணிக்க ஆரம்பித்து, கடலுக்கு அடிப்பகுதியில் ஒரு மணிக்கு சுமார் 700 கிலோமீட்டர்கள் வேகத்தில் பயணம் செய்து கடற்கரையை நோக்கி நகர்ந்து, கடற்கரையை நெருங்கியதும் அதி வேகமாக மோதி சிதறியது. இவ்வாறு சிதறிய அலைகளானது கடற்கரைப் பகுதியில் பல மீட்டர் உயரம் உயர்ந்து எழும்பி கடற்கரைப்பகுதிகளில் உள்ளவற்றை தாக்கி அழித்தது!

கடற்கரைப் பகுதிக்கு அருகாமையில் கடலுக்குள் நிலநடுக்கங்கள் ஏற்பட்டால் சுனாமி அலைகளானது உடனேயே கடற்கரையை அடைந்து தாக்குதலை நிகழ்த்தும். இப்படிப்பட்ட சமயங்களில் சுமார் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்குள் சுனாமி தாக்குதலானது நடைபெற்றுவிடும். கடற்கரைக்கு பல கிலோமீட்டர் தொலைவில் கடல் நிலநடுக்கங்கள் ஏற்பட்டால் கடல் அலைகளானது கடலுக்குள் பயணித்து கரையை அடைய பல மணிநேரங்களை எடுத்துக்கொண்ட பின்னரே தாக்குதலை நடத்தும்.

சுனாமி தாக்குதலானது பசிபிக் கடற்கரைப் பகுதிகளில் அதிக அளவில் அடிக்கடி நிகழ்கின்றன. இதற்கு அடுத்தபடியாக அட்லாண்டிக் கடற்கரைப் பகுதியில் சுனாமி தாக்குதல்கள் ஓரளவிற்கு நடைபெறுகின்றன. இந்தியப் பெருங்கடலில் சுனாமி தாக்குதல் எப்போதாவதுதான் நிகழ்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com