இன்றைய AI உலகத்தில் கூகுள் ஜெமினி, ChatGPT போன்றவைதான் பலரின் தேடுதல் தளமாக அமைந்துள்ளன. நாம் கேட்கும் கேள்விகளுக்கு நொடிப்பொழுதில் பதில்களைத் தரும் இந்த AI எப்படி செயல்படுகிறது, நாம் கேள்வி கேட்ட உடன் என்ன நடக்கிறது என ஒரு நிமிடம் நீங்கள் யோசித்ததுண்டா? AI இயங்குவதற்கு வெறுமனே மின்சாரமும், இண்டெர்நெட்டும் தான் தேவையா? இல்லை.
நீங்கள் இந்த AI chat box- யிடம் ஒரு கேள்வி கேட்கும்போது மின்சாரம் மற்றும் இணைய இணைப்பைத் தாண்டி பெரிய அளவில் தண்ணீரும் செலவாகிறது. அது எந்த அளவிற்கு என்று தெரிந்தால் நிச்சயம் உங்களுக்கு ஆச்சரியத்தை வரவழைக்கும். கடந்த சில மாதங்களாக சமூக ஊடங்களில் AI டெக்னாலஜிக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது என்ற செய்தி டிரெண்ட் ஆகியது.
ஒரு சிறிய AI கேள்விக்கு மட்டும் லட்சக் கணக்கான லிட்டர் தண்ணீர் செலவாகும் என சொல்லிவிட முடியாது.
ஆனால், AI மாடல்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும், நீங்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கும் பெரிய கம்ப்யூட்டர் சென்டர்கள் (Data Centers) தேவை. இந்தக் கம்ப்யூட்டர் சென்டரில் இருக்கும் சர்வர்கள் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டே இருக்கும். அப்படி செயல்படும்போது, அதில் இருந்து பயங்கரமாக வெப்பம் வெளியாகும். இந்த வெப்பத்தைக் குறைக்க, கம்ப்யூட்டர் சென்டர்களுக்கு கூலிங் சிஸ்டம் மிகவும் அவசியம். இந்த கூலிங் சிஸ்டம் வேலை செய்ய தண்ணீர் மிக மிக முக்கியம்.
அமெரிக்காவில் இருக்கின்ற கூகுள் கம்பெனிக்குச் சொந்தமான ஒரு கம்ப்யூட்டர் சென்டருக்கு மட்டும், ஒரு நாளைக்கு பல லட்சம் கலன் தண்ணீர் பயன்படுத்தப் படுவதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. இது இந்தியாவில் உள்ள பல நூறு வீடுகளின் ஒரு நாள் தண்ணீர் தேவையை விட அதிகமாம்.
AI-யிடம் கேட்கின்ற ஒவ்வொரு கேள்வியும், இந்தப் பெரிய கம்ப்யூட்டர் சென்டர்கழில் உள்ள சர்வர்களை இயங்க வைக்கிறது. ஒவ்வொரு தேடலும், ஒவ்வொரு கேள்வி பதிலும், சர்வரின் வேலையை அதிகமாக்குகிறது. அதற்கு இன்னும் அதிக கூலிங் தேவைப்படுகிறது. அதிக கூலிங்கிற்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற ஆராய்ச்சியின்படி, ஒரு AI சாட் (கேள்விகள், பதில்கள் சேர்த்து) ஒரு சில மில்லி லிட்டரில் இருந்து சில லிட்டர் தண்ணீர் வரைக்கும் தேவைப்படலாம் எனத் தெரிய வந்துள்ளது. இதுபோல ஒரு நாளைக்கு உலகம் முழுக்க பில்லியன் கணக்கான AI கேள்விகள் கேட்கப்படும்பொழுது, அங்குத் தண்ணீர் தேவையும்பயங்கரமாக ஏறும்.
AI வளர்ச்சிக்காக தண்ணீர் ஒரு மறைக்கப்பட்ட செலவு என தற்போது உலகம் முழுக்க உணர தொடங்கியுள்ளது. இது குடிநீருக்கே கஷ்டப்படுகின்ற இடங்களில் பெரிய பிரச்சனையை உண்டாக்கலாம். எதிர்காலத்தில், AI கம்பெனிகள், கம்ப்யூட்டர் சென்டர்களை கட்டும்போது, தண்ணீர் இருக்கிறதா, அதை எப்படிச் சேமிக்கலாம் என யோசித்து செய்லபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலர் கூறுகின்றனர்.
ஆகவே, அடுத்த முறை நீங்கள் AI அசிஸ்டன்டிடம் ஒரு கேள்வி கேட்கும் முன்பு, ஒரு நிமிடம் யோசிக்கலாம். இந்தத் தண்ணீரைச் சேமிக்க, AI-யை தேவைக்கு மட்டும் பயன்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும். தேவையில்லாத கேள்விகளைத் தவிர்ப்பது, தேடல்களை சுருக்குகிறது. இது போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். AI வளர்ச்சி முக்கியம்தான், அதே சமயம், அது நம் சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என உறுதியுடன் இருப்பது அதைவிட முக்கியம்.. நீங்க என்ன சொல்றீங்க..