

மனிதன் பூமியில் இருந்து கொண்டே விண்வெளியை இயக்க உருவாக்கியதுதான் செயற்கைக்கோள்கள் (satellites).
இவற்றால் மனித முன்னேற்றத்திற்கு பல நன்மைகள் உண்டு. வேறு கிரகங்களுக்கு செல்லும் முயற்சியில் ரஷ்யாவும் அமெரிக்காவும் ஈடுபடுவது போல இந்தியா ஈடுபடாவிட்டாலும், செயற்கைக்கோள் ஏவுவதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அப்படி செயற்கை கோளை ஏவுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன? சில சமயங்களில் ஏன் அந்த செயற்கைக்கோளை கடலில் விழும்படி செய்கிறார்கள் (why satellites fall into ocean?) ? என்பதற்கான காரணத்தை இப்பதிவில் காண்போம்.
ஆரியபட்டா 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு அதன் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அந்த செயற்கைக்கோள் ஊதா நிறத்தில் வைரத்தின் வடிவத்தில் 26 பட்டைகள் கொண்டு குறுக்களவு 1.47 மீட்டர், உயரம் 1.16 மீட்டர் என்ற அளவில் வடிவமைக்கப்பட்டு மணிக்கு முப்பதாயிரம் கிலோமீட்டர் வேகத்தில் பூமியை சுற்றும் படி அதன் செயல்பாடுகள் அமைக்கப்படுகின்றன. பூமியுடன் தொடர்பு கொள்ள வேண்டிய கருவிகளுடனும் முக்கியமான மின்கலங்களோடும் செயற்கை கோள் உருவாக்கப்படுகிறது.
பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சோலோ செல்,சூரிய சக்தியை மின்சக்தியாக மாற்றி மின் கலங்களின் வழியே செயற்கை கோளை அந்தரத்தில் செயல்பட வைக்கிறது. செயற்கைக்கோளின் முழு அமைப்பும் உருவாகியவுடன் இது கேரியர் எனப்படும் ராக்கெட்டில் இணைக்கப்படுகிறது. ராக்கெட்டின் அடிப்பகுதியில் புவி ஈர்ப்புவிசையை எதிர்த்து செயல்படும் அளவிற்கு எரிபொருட்கள் நிரம்பிய சிலிண்டர்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. செயற்கைக்கோள் ஏவப்பட வேண்டிய பல மணி நேரங்களுக்கு முன்பே முழு அமைப்பையும் தயார் நிலைப்படுத்தி கவுண்டவுன் ஆரம்பிக்கப்பட்டு விடுகிறது .
சரியாக நேரம் வந்ததும் கண்ணிமைக்கும் நேரத்தில் விண்ணில் சீறிப் பாய்கிறது. முதலில் நேராக செல்லும் ராக்கெட் புவியீர்ப்பு விசைக்கு ஏற்ப மேலே செல்லச்செல்ல சாய்வாக பறக்கிறது. குறிப்பிட்ட இலக்கு அடைந்ததும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ள செயற்பாட்டுக்கு ஏற்றபடி தேவையான வேகத்தோடு செயற்கைக் கோளை சுற்றுப்பாதைக்கு அனுப்பி விட்டு ராக்கெட் பிரிந்து சென்று விடுகிறது. சரியான சுற்றுப்பாதையை அடைந்ததும் செயற்கைக்கோள் தன் வேலையைத் தொடங்கி விடுகிறது.
சில சமயம் இந்த செயற்கைக்கோள்கள் விண்கற்களோடு மோதி சேதம் அடைவது அல்லது வேகத்தை இழப்பது கூட நடப்பதுண்டு. அப்படி நடப்பது பூமியின் புவியீர்ப்பு விசையின் காரணமாக வந்துவிழும். ஆதலால் செயற்கைக்கோளை கண்காணிக்கும் ஆய்வாளர்கள் அது கடல் பகுதியில் விழும்படி செய்து சேதத்தை தவிர்த்து விடுகிறார்கள்.
இப்படி அனுப்பப்படும் செயற்கைக் கோள்களினால் பருவநிலை மாற்றம், தகவல் பரிமாற்றம், டிவி, ரேடியோ சிக்னல்கள் என அனைத்து தகவல் தொடர்பும் வேகமாக வளர்ந்து வருகிறது. இவைகள் எல்லாம் இப்பொழுது இல்லை என்றால் வாழ்க்கையே அஸ்தமித்து விடும் என்று கூறலாம். இப்படி பல்வேறு விதங்களில் நமக்கு உதவி செய்து வருவது செயற்கைக்கோள்களே!