நவீன சாதனங்களுடன் உங்கள் வீட்டை ஸ்மார்ட்டாக மாற்றுவது எப்படி?

Smart home
Smart home
Published on

தற்போதைய வாழ்க்கை முறை எளிமையையும் சுகாதாரத்தையும் முன்னிறுத்தும் வகையில் மாற்றம் அடைந்து வருகிறது. நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் ஒரே நொடியில் கட்டுப்படுத்தும் கட்டமைப்புகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. அந்த வரிசையில், வீட்டு வாழ்க்கையையே நேரடியாக மாற்றியமைக்கும் ஸ்மார்ட் ஹோம் தொழில்நுட்பம் தற்போது அதிக அளவில் பிரபலமடைந்துள்ளது.

ஒரு பட்டனை அழுத்தினாலே வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளையும் கட்டுப்படுத்த முடியும் என்றால், அது எப்படி இருக்கும் என சிந்தித்துப் பாருங்கள். இனி உங்கள் வீட்டை நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே எப்படி உங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என்பது பற்றி வாசிக்கலாம்.

ஸ்மார்ட் ஹோம் தொழில்நுட்பம் என்றால் என்ன?

உங்கள் வீட்டில் உள்ள விளக்குகள், ஃபேன்கள், கதவுப் பூட்டுகள், கேமராக்கள், மியூசிக் சிஸ்டம் போன்ற அனைத்தையும் இணையதள இணைப்பில் இணைத்து, உங்கள் ஸ்மார்ட் ஃபோன் அல்லது வாய்ஸ் அசிஸ்டென்ட் மூலம் கட்டுப்படுத்துவதுதான் ஸ்மார்ட் ஹோம் தொழில்நுட்பம் என சொல்லப்படுகிறது. இதற்காக உங்கள் மொபைலில் ஒரு ஆப் பதிவிறக்கம் செய்தாலே உங்கள் வீட்டை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள முடியும்.

ஸ்மார்ட் ஹோம் தொழில்நுட்பத்தின் முக்கிய நன்மைகள்:

எளிதான கட்டுப்பாடு

ஸ்மார்ட் ஹோம் அமைப்புகள் வழியாக வீட்டு சாதனங்களை எளிதாக கட்டுப்படுத்தலாம். நாம் வீட்டில் இல்லாவிட்டாலும், மொபைல் ஆப் மூலமாக விளக்குகள், ஏ.சி., கதவு பூட்டுகள் போன்றவற்றை இயக்கலாம்.

வீடு திரும்பும் முன்பே ஏ.சி.யை இயக்கி, குளிர்ச்சியான சூழலை உருவாக்கலாம்.

மேம்பட்ட பாதுகாப்பு – 24 மணி நேர கண்காணிப்பு:

ஸ்மார்ட் லாக்ஸ், சென்சார்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வீட்டை அதிக பாதுகாப்புடன் பாதுகாக்கலாம்.

யாராவது கதவைத் திறக்க முயற்சித்தால், உடனடியாக உங்கள் மொபைலிற்கு அலர்ட் வரும்.

கேமராக்கள் மூலம் வீட்டை நேரடியாக பார்வையிட முடியும்.

மின்சாரம் சேமிப்பு

ஸ்மார்ட் சாதனங்கள் தேவையில்லாத மின்சார நுகர்வை தானாகக் கட்டுப்படுத்தும். வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில், விளக்குகள் மற்றும் ஏ.சி. தானாக அணைக்கப்படும்.

இதன் மூலம் மின் கட்டணத்தை கணிசமாக குறைக்க முடியும்.

நவீன வாழ்க்கை அனுபவம்

மனநிலைக்கேற்ப வீட்டு சூழலை மாற்றிக்கொள்ளும் வசதி ஸ்மார்ட் ஹோம் அமைப்புகளின் முக்கிய சிறப்பம்சம் ஆகும்.

விளக்குகளின் நிறம் மற்றும் பிரைட்னஸை உங்கள் விருப்பப்படி அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்.

விரும்பிய பாடல்கள் அல்லது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நேரத்தை ஒலிக்க ஏற்பாடு செய்யலாம்.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் நம் வீட்டு வசதிகளையும் பாதுகாப்பையும் புதிய கட்டத்திற்கு கொண்டு செல்கின்றன.

இதையும் படியுங்கள்:
முடி அதிகமாக கொட்டுவதை இப்படியும் நிறுத்தலாம்!
Smart home

வாய்ஸ் கட்டுப்பாட்டுடன் இயங்கும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள்

அமேசான் எக்கோ, கூகிள் ஹோம் போன்ற சாதனங்கள் வாய்ஸ் கமாண்டுகளை ஏற்று நம்மைச் சுற்றி உள்ள சாதனங்களை குரல்வழியாக கட்டுப்படுத்த இவை உதவுகின்றன.

ஸ்மார்ட் லைட்ஸ்

லைட்டின் கலர், பிரைட்னஸ் உள்ளிட்ட அம்சங்களை மொபைல் ஆப் மூலம் மாற்றுவதற்கான வசதியை அளிக்கின்றன.

ஸ்மார்ட் தெர்மோஸ்டாட்கள்

வீட்டில் இல்லாத நேரங்களிலும், வெப்பநிலையை தேவைக்கு ஏற்ப மாற்ற முடிகிறது.

ஸ்மார்ட் லாக்ஸ் மற்றும் கேமராக்கள்

இவை நம் வீட்டின் பாதுகாப்பை பல மடங்காக மேம்படுத்தி, வீட்டை எப்போதும் கண்காணிக்க உதவுகின்றன. இந்த சாதனங்கள் அனைத்தும் மின்சாரத்தை சேமிக்கவும், வாழ்க்கையை சுலபமாகவும், நவீனமாகவும் மாற்றும் சக்தி கொண்டவை.

இத்தகைய தொழில்நுட்பங்களில் சிறிய பாதுகாப்பு சிக்கல்களும் இருக்கக்கூடும். மொபைல் ஆப்களில் இணைப்பதால் ஹேக்கிங் அபாயங்கள் இருக்கக்கூடும். எனவே, நம்பகமான பிராண்டுகளை தேர்வு செய்ய வேண்டும். Wi-Fi பாஸ்வேர்டை பாதுகாப்பான முறையில் அமைத்திருக்க வேண்டும். மாதம் ஒருமுறை பாதுகாப்பு அமைப்புகளை பரிசோதித்து கொள்வது சிறந்தது.

அதன்படி, ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் நமக்கான நவீன வசதிகளை மட்டும் அல்லாமல், நம்முடைய நேரம், ஆற்றலையும் சீராக பயன்படுத்தும் ஒரு பயனுள்ள வழியாக திகழ்கின்றன. இருப்பினும், இந்த வசதிகளோடு பாதுகாப்பு விழிப்புணர்வும் அவசியம். தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்தும் திறமை நம்மிடம் இருந்தால் மட்டுமே, அது நம் வீட்டையும் வாழ்க்கையையும் ஸ்மார்டாக மேம்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
"சண்டைக் காட்சிகளில் யதார்த்தமே இல்லை" - ஜாக்கி சான் ஓபன் டாக்!
Smart home

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com