
இன்றைய டிஜிட்டல் உலகில், ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது என்பது கடினமான செயலாக உள்ளது. உங்கள் தனிப்பட்ட தகவல்களுக்கு முதல் பாதுகாப்பு அரண் 'பாஸ்வேர்ட்' (Password). ஆனால், கோடிக்கணக்கான மக்கள் இன்னும் '123456' அல்லது 'password' போன்ற எளிதில் கணிக்கக்கூடிய பாஸ்வேர்டுகளையே பயன்படுத்தி வருகின்றனர். இது இணைய குற்றவாளிகளுக்கு உங்கள் கணக்குகளை திறந்து வைப்பது போலத்தான்.
சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் பாஸ்கீஸ் (passkeys) போன்ற பாதுகாப்பான வழிமுறைகளை ஊக்குவித்தாலும், இன்றும் பாஸ்வேர்டுகள்தான் நமது அன்றாட டிஜிட்டல் வாழ்க்கையின் அத்தியாவசிய அங்கமாக உள்ளன.
மிகவும் பலவீனமான பாஸ்வேர்டுகள்:
NordPass-ன் வருடாந்திர ஆய்வின்படி, அதிகம் பயன்படுத்தப்படும் மற்றும் எளிதாக ஹேக் செய்யக்கூடிய பாஸ்வேர்டுகளில் சில:
123456 – உலகளவில் 112 மில்லியனுக்கும் அதிகமான முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
123456789 – இது சற்று நீளமாக இருந்தாலும், 50 மில்லியனுக்கும் அதிகமான பயன்பாட்டுடன் பாதுகாப்பற்றதாக உள்ளது.
password – இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்றும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
qwerty – கனடா, லித்துவேனியா, மற்றும் நார்வே போன்ற நாடுகளில் பிரபலமான, கணிக்கக்கூடிய ஒரு கீபோர்டு பேட்டர்ன்.
போர்ப்ஸ் மற்றும் ட்ரெண்ட் ஆகிய நிறுவனங்களின் கூற்றுப்படி, பரவலாகப் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டுகளில் கிட்டத்தட்ட 50% எண்களின் வரிசை அல்லது கீபோர்டு பேட்டர்ன்களைப் பின்பற்றுகின்றன. இதனால், ஹேக்கர்கள் பயன்படுத்தும் தானியங்கி கருவிகள் மூலம் அவற்றை எளிதாக உடைக்க முடியும்.
சாதாரணமான பலவீனமான பாஸ்வேர்டுகளைத் தவிர, மக்கள் திரைப்படங்கள், பிரபலமான பெயர்கள் மற்றும் பொதுவான வார்த்தைகளையும் பாஸ்வேர்டுகளாகப் பயன்படுத்துவதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆபத்தான மற்றும் ஆச்சரியமான சில பாஸ்வேர்டுகள்:
'secret', 'iloveyou', 'football', 'princess', 'superman', 'computer', 'killer', 'liverpool', 'batman', 'chelsea', 'facebook', 'cheese', 'naruto', 'minecraft', மற்றும் 'pokemon' போன்ற பாஸ்வேர்டுகளும் இந்த பட்டியலில் உள்ளன. இவை தனித்துவமானவை எனத் தோன்றினாலும், பரவலாகப் பயன்படுத்தப்படுவதால் ஹேக்கர்களின் தரவுத்தளங்களில் இவை இடம்பெறுகின்றன. இதனால், இவையும் பாதுகாப்பற்றவை.
அதோடு, ஹேக்கர்கள் இப்போது அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தி சில நொடிகளில் கணக்குகளை உடைக்கிறார்கள் எனவும், பலவீனமான பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்துவது வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு செல்வது போல எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எப்படி பாதுகாப்பது?
பாஸ்கீஸ் (passkeys) பயன்படுத்துவது சிறந்த வழி. அது சாத்தியமில்லாத பட்சத்தில்,
சிக்கலான, தனித்துவமான பாஸ்வேர்டுகளை உருவாக்கவும் மற்றும் சேமிக்கவும் ஒரு பாஸ்வேர்ட் மேனேஜர் (Password Manager) பயன்படுத்தவும்.
பல கணக்குகளுக்கு ஒரே பாஸ்வேர்ட்டை மீண்டும் பயன்படுத்தாதீர்கள்.
'password' அல்லது '123456' போன்ற பொதுவான வார்த்தைகள் அல்லது எண்களின் வரிசையை தவிர்க்கவும்.
இணைய அச்சுறுத்தல்கள் வேகமாக அதிகரித்து வரும் இக்காலத்தில், இந்த எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கலாம்