AI-யால் வரப் போகும் ஆபத்து... கூகுள் முன்னாள் தலைவர் எச்சரிக்கை!
செயற்கை நுண்ணறிவு (AI) என்பது, மனிதர்களைப் போல சிந்திக்கும் மற்றும் செயல்படும் திறன் கொண்ட கணினி அமைப்புகளை உருவாக்கும் அறிவியலாகும். இது இயந்திர கற்றல், இயல் மொழி செயலாக்கம் மற்றும் ரோபோட்டிக்ஸ் போன்ற பல துறைகளில் பயன்படுகிறது. மேலும் கல்வி, மருத்துவம், வணிகம் போன்ற பல்வேறு துறைகளிளிலும் புரட்சியை ஏற்படுத்தும் தொழில்நுட்பமாகும். AI யின் வளர்ச்சி, சவால்கள் மற்றும் எதிர்கால தாக்கங்கள் குறித்து பல விவாதங்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.
செயற்கை நுண்ணறிவு (AI) ஒரு கணினி அல்லது மென்பொருள், இது தரவுகளைச் சேகரித்து, பகுப்பாய்வு செய்து, அதன் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் திறனைக் கொண்டது. மருத்துவத் துறையில் நோய் கண்டறியவும், மருத்துவ முடிவுகளை எடுக்கவும், வணிகத் துறையில் வணிக உத்திகளை வகுக்கவும், வாடிக்கையாளர் சேவையில் மற்றும் பல்வேறு செயல்பாடுகளை மேம்படுத்துவதிலும் AI முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஜிபிடி-3 போன்ற AI அமைப்புகள் மனிதர்களைப் போலவே எழுதி, படைப்புகளை உருவாக்கும் திறன் கொண்டது இது. AI யின் வளர்ச்சி பல புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் வேலை வாய்ப்புகளில் அதன் தாக்கம் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
தற்போது உலகில் ஏ.ஐ. படுவேகமாக வளர்ந்து வருகிறது. இத்துறையில் ஏராளமான மாற்றங்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன. உலகெங்கும் தற்போது செயற்கை நுண்ணறிவில் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறுகிய காலத்தில் அடுத்தடுத்து ஏஐ துறையில் ஏற்படும் வளர்ச்சி பலரையும் வியக்க வைப்பதாக இருக்கிறது. ஒரு பக்கம் ஏஐ மனித வாழ்க்கைக்கு மிகப் பெரியளவில் உதவியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் ஏஐ காரணமாக வேலைவாய்ப்புகள் மிக அதிகமாக பாதிக்கப்படும் என பலரும் எச்சரித்து வருகிறார்கள்.
இது குறித்து பேசியுள்ள கூகுள் எக்ஸ் நிறுவனத்தின் வணிகத் தலைவராக இருந்த மோ காவ்தாத் சில முக்கிய கருத்துகளைக் முன்வைத்துள்ளார். ஏஐ புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று பரவிவரும் கருத்து பொய்யானது என்றும், ஏஐ காரணமாக அதிகப்படியானோர் வேலையிழப்பார்கள் என்றும் கூகுள் எக்ஸ் நிறுவனத்தின் மாஜி தலைவர் மோ காவ்தாத் எச்சரித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்ற கருத்து "முழுவதும் தவறானது" என்றும், "ஏஐ அமைப்புகளால் உயர்மட்ட அதிகாரிகளும் கூட தங்கள் பதவிகளை இழக்க நேரிடும்" என்றும் எச்சரித்துள்ளார். "ஏஐ புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காது" என்றும் அவர் கூறுகிறார்.
ஆட்குறைப்பு பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காவ்தாத்,
"செயற்கை பொது நுண்ணறிவு (AGI) காலப் போக்கில் மனிதர்களை விட அனைத்து விஷயங்களிலும் மேம்பட்டதாகவே இருக்கும். ஒரு முதன்மை செயல் அதிகாரியை விட சிறந்த நபராக ஏஐ இருக்கும். நான் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்து வருகிறேன். ஏஐ-க்கு முன்பு எனது நிறுவனத்திற்கு 350 டெவலப்பர்கள் தேவைப்பட்டார்கள். ஆனால், இப்போது மூன்று பேர் மட்டுமே போதுமானதாக உள்ளனர். அதிக சம்பளம் பெறுவோர் கூட மிகப் பெரிய வேலை இழப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்வார்கள். AI வேலைகளை உருவாக்கும் என்று சொல்வோரின் கருத்துகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏஐ வேலை வாய்ப்புகளை குறைக்கவே செய்யும் என்பது எனது கருத்து. ஆட்டோமேஷனால் பாதிக்கப்படாது என்று முன்பு நாம் நினைத்த துறைகள் கூட ஏஐ வளர்ச்சியால் ஆபத்தில் இருக்கிறது"
என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர்
"ஏஐ இப்போது எல்லா வேலைகளையும் செய்வதால் தலைமை பதவியில் இருப்போர் ஊழியர்களை நீக்கி, உற்பத்தித்திறன் மற்றும் செலவுகளைக் குறைக்க முடியும் என்பதற்காக இதைக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் யோசிக்காத ஒரே விஷயம், AI அவர்களையும் மாற்றும் என்பதுதான். ஏஐ செய்ய முடியாத வேலை குறைவு. இதனால் அனைவரும் ஆபத்தில் தான் உள்ளனர்"
என்றும் தெரிவித்துள்ளார்.
இப்போது உலகின் பல்வேறு நிறுவனங்களும் ஏஐஐ நோக்கி நகர்ந்து அதன் பயன்பாடுகளை அதிகரித்து வருகின்றன. இச்சூழலில் காவ்தாத்தின் எச்சரிக்கை மிகவும் முக்கியமானதாகவே கருதப்படுகிறது.
ஏஐ காரணமாக எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது குறித்து வல்லுநர்களின் கருத்து இரு வேறாகவே இருக்கிறது. காவ்தாத் இதுபோல எச்சரித்தாலும் பிற வல்லுநர்கள் வேறு விதமாகவே சொல்கிறார்கள். மார்க் கியூபன் மற்றும் ஜென்சன் ஹுவாங் உள்ளிட்ட வல்லுநர்கள், AI திறன்களைக் கற்றுக்கொள்வதுடன் சாப்ட்வேர் திறன்களை வலுப்படுத்துவது தொழிலாளர்களுக்கு மேலும் நன்மை தரும் எனச் சொல்லியுள்ளனர்.
எது எப்படியோ நமது இளைஞர்கள் பெருகிவரும் தொழில் நுட்பத் தேவைகளுக்கு ஏற்ப தமது தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறி வருகிறது என்பதுதான் எதார்த்தமான உண்மை.