
அணு ஆயுதம் என்றாலே நாம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது வீசப்பட்ட குண்டுகள்தான். அந்தத் தாக்குதல்களால் லட்சக்கணக்கானோர் உடனடியாக உயிரிழந்ததும், தலைமுறைகளைத் தாண்டிய கதிர்வீச்சுப் பாதிப்புகளும் வரலாறு கண்டிராத பேரழிவு.
அணு ஆயுதங்களின் சக்தி குறித்த அச்சம் இன்றும் உலகம் முழுவதும் நிலவுகிறது. சர்வதேச சூழலில் பதட்டங்கள் அவ்வப்போது எழுந்தாலும், அணு ஆயுதப் பயன்பாட்டிற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றே நிபுணர்கள் கருதுகின்றனர். எனினும், ஒருவேளை, இந்தியா மீது ஒரு அணு ஆயுதத் தாக்குதல் நடந்தால் அதன் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஒரு அணு ஆயுதத் தாக்குதலுக்கு இலக்காகும் நகரங்கள் பெரும்பாலும் அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய நகரங்களாகவே இருக்கும். இந்தியாவின் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்கள் அதிக ஆபத்துள்ள பட்டியலில் இருக்கலாம். நாகசாகி மீது வீசப்பட்ட அளவுள்ள ஓர் அணு குண்டு ஒரு நகரத்தின் மீது விழுந்தால், சில லட்சங்கள் முதல் இருபது லட்சம் பேர் வரை உடனடியாக உயிரிழக்க நேரிடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. குண்டு வெடித்த மையத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் சுற்றளவில் மொத்தக் கட்டிடங்களும் தரைமட்டமாகி, ஐம்பது கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு அதன் அதிர்வுகள் உணரப்படும்.
அணு ஆயுதத் தாக்குதல், வெறும் அழிவை மட்டும் ஏற்படுத்துவதல்ல. தாக்குதல் நடந்த நகரங்களில் மின்சாரம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, மருத்துவமனைகள் போன்ற அனைத்து அடிப்படை உள்கட்டமைப்புகளும் முற்றிலுமாகச் செயலிழந்துவிடும். இதனால், காயமடைந்தவர்களுக்கும், உயிர் பிழைத்தவர்களுக்கும் கூட உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் போகும். உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கே கடும் தட்டுப்பாடு ஏற்படும். தாக்குதலுக்கு உள்ளாகாத அருகிலுள்ள நகரங்களும் இதன் பாதிப்பிலிருந்து தப்ப முடியாது; நாடு முழுவதுமே ஸ்தம்பிக்கும் நிலை உருவாகலாம்.
அணு ஆயுதத்தின் மிக மோசமான நீண்டகாலப் பாதிப்பு அதன் கதிர்வீச்சுதான். இது நிலம், நீர், காற்று என அனைத்தையும் நச்சுப்படுத்தும். ஆறுகள் பாதிக்கப்படும், விவசாய நிலங்கள் விஷமயமாகிப் பயிரிட முடியாத நிலை ஏற்படலாம். இதனால், பல்லாயிரக்கணக்கானோர் புற்றுநோய் மற்றும் மரபணு ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாவார்கள். சுற்றுப்புறச் சூழலில் கதிர்வீச்சின் தாக்கம் பல பத்தாண்டுகளுக்கு நீடிக்கும்.
கதிர்வீச்சு பாதித்த பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி கிராமங்களை நோக்கி இடம்பெயர்வார்கள். இது கிராமப்புற வளங்களில் பெரும் சுமையை ஏற்படுத்தும். உணவுப் பற்றாக்குறை, நோய்கள் பரவல், சமூக அமைதியின்மை போன்றவை தலைவிரித்தாடும்.
நகரங்களில் பேரழிவு அதிகமாக இருந்தாலும், விவசாயத்தைச் சார்ந்திருக்கும் கிராமப்புறப் பகுதிகள் அல்லது பெரு நகரக் கட்டமைப்பிலிருந்து சற்றுத் தொலைவிலுள்ள இடங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த பாதிப்பைச் சந்திக்க வாய்ப்புள்ளது. எனினும், தேசிய அளவிலான பாதிப்பிலிருந்து யாரும் முழுமையாகத் தப்ப முடியாது.