அமெரிக்காவின் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆய்வுக்காக சொல்லும் இந்தியர்.
இந்தியா விண்வெளி துறையில் பல்வேறு தொடர் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியா மற்றும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி பணியை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்திருக்கின்றன. இதற்காக நாசாவின் நிர்வாக அதிகாரி பில் நெல்சன் டெல்லியில் ஆலோசனை நடத்தினார். இதில் இஸ்ரோவின் உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை முடிவில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன.
இவ்வாறு இந்தியாவின் இஸ்ரோவும் அமெரிக்காவின் நாசாவும் இணைந்து விண்வெளி ஆராய்ச்சியை மேற்கொள்ளபோகின்றன. மேலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர் ஒருவரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆய்வுக்காக அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இஸ்ரோ தேர்வு செய்யும் நபர்களுக்கு அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசா பயிற்சி அளிக்கும் என்றும், அதன் பிறகு நாசா, இஸ்ரோவின் முக்கிய திட்டமான என் ஐ எஸ் ஏ ஆர் திட்டத்தின் மூலம் 2024 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியரை விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் 2031 ஆம் ஆண்டு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை நாசா டீ-ஆர்பிட் செய்ய முடிவு செய்திருக்கிறது. இந்தியாவுடன் இணைந்து கதிர்வீச்சு தாக்க ஆய்வு, மைக்ரோ விண்கதிர் ஆய்வு, சுற்றுப்பாதை சிதைவு கவச ஆய்வு, சர்வதேச விண்வெளி மைய பணி திட்டக்குழு ஆய்வு ஆகியவற்றை மேற்கொள்ள உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் இந்தியா 2035 ஆம் ஆண்டிற்குள் விண்வெளியில் ஆய்வு நிலையத்தை அமைக்கவும், 2040 ஆம் ஆண்டிற்குள் நிலவிற்கு மனிதனை அனுப்பி ஆய்வு செய்யவும் முயற்சி எடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.