
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்திய விஞ்ஞானி நிக்கு மதுசூதன் பூமியை தவிர இன்னொரு கிரகத்திலும் உயிர்கள் இருப்பதாக ஒரு கூற்றை முன்வைத்துள்ளார். புதிய கிரகத்தின் வளிமண்டலத்தில் உயிரினங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் இரசாயனங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பல நூற்றாண்டு காலமாக மனிதர்களின் மனதில் உள்ள ஒரு கேள்வி பூமியை போன்று மனிதர்களும், விலங்குகளும் வாழும் வேறு ஏதேனும் கிரகங்கள் உள்ளதா? என்பதுதான். அதுவும் கடைசி இரண்டு நூற்றாண்டுகளில் இந்த கேள்வி மிகவும் வலிமை வாய்ந்ததாக மாறி உள்ளது. இன்னும் சொல்லப் போனால் பலர் கற்பனைக் கதைகளில் வேற்று கிரகத்திலிருந்து உயிரினங்கள் வந்து பூமியை தாக்குவது போல் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இது நமது சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்துகிறது. ஆனால், அதற்குறிய சரியான விடை கிடைப்பதில்லை.
பூமியிலிருந்து 700 டிரில்லியன் மைல் தொலைவில் உள்ள K2-18b என்ற கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டும் அறிவிப்புகளை விஞ்ஞானிகள் பெற்றுள்ளனர். இந்தக் கிரகம் பூமியை விட இரண்டரை மடங்கு பெரியது, அதன் வளிமண்டலம் குறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்து வருகிறது.
K2-18b கிரகத்தின் வளிமண்டலத்தில், டைமெத்தில் சல்பைடு மற்றும் டைமெத்தில் டைசல்பைடு போன்ற வேதிப்பொருட்களைக் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த வேதிப் பொருட்கள் பூமியில் பைட்டோபிளாங்க்டன் மற்றும் பாக்டீரியா போன்ற உயிரினங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த தகவல்களை வைத்து மட்டுமே உயிரினங்கள் அங்கு வாழ்வதாகக் கருத முடியாது என்றாலும், இந்த வேதிப் பொருட்கள் உயிர்கள் இல்லாமல் எப்படி உருவாகி இருக்க முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.
இன்னும் சில ஆண்டுகளுக்குள் K2-18b கிரகத்தில் உயிர்கள் இருப்பது சாத்தியம் என்பதை கண்டுபிடிக்க முடியும் என்பதை என்று முன்னணி ஆராய்ச்சியாளர் பேராசிரியர் நிக்கு மதுசூதன் நம்புகிறார். இந்தக் கோளின் வளிமண்டலத்தில் அம்மோனியா இல்லாததால், அம்மோனியாவை உறிஞ்சும் ஒரு பெரிய கடல் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
அம்மோனியாவின் இருப்பு வாழ்க்கைக்கான ஒரு முக்கிய தேவையாகும். அது கடல் உயிரினங்களின் வாழ்க்கைக்கு துணைபுரியும் கட்டமைப்புகளை கொண்டிருக்க வாய்ப்புள்ளது. அதே நேரம் பெருங்கடலுக்கு அடியில் எரிமலை இருக்கும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது.
K2-18b கிரகத்தின் வளிமண்டலத்திலிருந்து விஞ்ஞானிகள் இதுவரை 'மூன்று-சிக்மா' நிலை உறுதிப்படுத்தலைப் பெற்றுள்ளனர். சிக்மா என்பது அறிவியல் துல்லியத்தை அளவிடுவதற்கான தரநிலையாகும். பொதுவாக ஒரு கண்டுபிடிப்பை வலிமையானது என்று அழைக்க ஐந்து சிக்மா தேவைப்படுகிறது. மூன்று சிக்மா மட்டத்தில் காணப்படும் சமிக்ஞைகள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், இன்னும் கூடுதலான துல்லிய தகவல்கள் தேவைப்படுகிறது.
K2-18b கிரகத்தில் உயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அது ஒரு கிரகத்தின் சாத்தியக் கூறுகளை மட்டும் வெளிப்படுத்தாது. இந்த முழு பிரபஞ்சத்திலும் மற்ற கிரகத்தின் வாழ்வின் சாத்தியக்கூறுகளை ஆராய முன்னோடியாக இருக்கும் என்று பேராசிரியர் நிக்கு மதுசூதன் கூறுகிறார்.
இந்த கண்டுபிடிப்பு அறிவியலின் பார்வையில் மட்டுமல்ல, மனிதகுலத்தின் எதிர்காலத்தைப் புரிந்துகொள்வதற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகக் கருதப்படும். இந்தக் கண்டுபிடிப்பு பிரபஞ்சத்தில் வாழ்வின் சாத்தியக்கூறுகளுக்கான புதிய கதவுகளையும் திறக்கக்கூடும்.