
ஒருங்கிணைந்த தகவல் தொடர்புகள் (Unified communications) என்பது தொலைபேசி அழைப்புகள், ஒளித்தோற்ற அழைப்புகள் (video), பல்வகை ஊடகங்கள் (multi media) போன்றவற்றின் செய்தி கையாளும் மேலாண்மை செயலாற்றல் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் ஒரு தொழில் நுட்பமாகும். ஒருங்கிணைந்த தகவல் தொடர்புகள், தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், செலவுகளை குறைக்கவும் நிறுவனங்களுக்கு உதவுகின்றது.
புறாக்களையும், குதிரை மேல் சேவகர்களையும் செய்தி அனுப்ப உபயோகித்த காலத்தில் இருந்து இன்று நாம் வெகு தொலைவில் வந்து விட்டோம். தொலைபேசி என்ற தொழில்நுட்பம், தூரம் மற்றும் காலத்தால் ஏற்பட்ட இடையூறுகளை பெருமளவு போக்கிவிட்டது. இணையதளம் என்ற தொழில்நுட்பம், காலம், நேரம் மற்றும் இடைத்தரகர்களால் ஏற்பட்ட இடையூறுகளை அகற்றி விட்டது. மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் (Microsoft teams), ஜூம்(Zoom), கூகுள் மீட் (Google Meet) போன்றவை ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப உதாரணங்கள்.
ஒருங்கிணைந்த தகவல் தொடர்புகள் என்பது, நிறுவனங்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளவும், ஒத்துழைக்கவும் உதவும் பல்வேறு தகவல் தொடர்பு சேனல்களை ஒருங்கிணைக்கும் ஒரு தொழில்நுட்பமாகும். இது தொலைபேசி அழைப்புகள், வீடியோ மாநாடுகள், மின்னஞ்சல், உடனடியாக செய்தியிடல் மற்றும் பலவற்றை ஒரே தளத்தில் கொண்டு வருகிறது. இதனால் பயனர்கள் வெவ்வேறு பயன்பாடுகளுக்கு இடையில் மாறாமல் ஒரே இடத்தில் இருந்து கொண்டு அனைத்து தொடர்புகளையும் நிர்வகிக்க முடிகிறது.
இவற்றின் முக்கிய கூறுகள் பற்றி பார்ப்போம்:
1. உடனடி செய்தியிடல் (Instant Messaging)
ஒருவருக்கொருவர் உடனடியாக செய்திகளை அனுப்பவும் பெறவும் முடிகிறது.
2. இருப்பு தகவல் (Presence Information)
ஒரு நபரின் இருப்புத் தன்மையை அதாவது இருப்பிடத்தை மற்றவர்களுக்கு தெரிவிக்கிறது.
3. வீடியோ மாநாடுகள் (video conferencing)
தொலைதூர குழுக்களுடன் வீடியோ வழியாக பேசுவதற்கும், கூட்டங்களை நடத்துவதற்கும் இந்த வீடியோ மாநாடுகள் உதவுகின்றன.
4. குரல் அழைப்புகள்(Voice Calls)
இணையம் வழியாக குரல் அழைப்புகளை மேற்கொள்ளவும், பெறவும் உதவி புரிகிறது.
5. சகல ஊடக தகவல் தொடர்புகள்(Multimedia Communication):
ஒருவருக்கொருவர் படங்களையும், எழுத்துக்களையும், குரல் போன்றவற்றையும் ஒரே நேரத்தில் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.
6. வணிக பயன்பாடுகளுடன் ஒருங்கிணைப்பு(Integration with business applications):
CRM போன்ற பிற வணிகப் பயன்பாடுகளுடன் ஒருங்கிணைக்கப்படுவதன் மூலம் தகவல் தொடர்புகள் எளிதாக்கப்படுகின்றன.
ஒருங்கிணைந்த தகவல் தொடர்புகளின் நன்மைகள்:
தகவல்களை பரிமாறிக் கொள்வது எளிதாக இருப்பதால் உற்பத்தி திறன் அதிகரிக்கிறது. பயண செலவுகளும் குறைகிறது. பயனர்கள் வெவ்வேறு பயன்பாடுகளுக்கு மாற வேண்டிய அவசியம் இல்லாததால், அவர்களின் பணி எளிதாகிறது. நிறுவனத்தின் அனைத்து தகவல் தொடர்பு சேனல்களும் ஒரே தளத்தில் இருப்பதால் தொடர்புகள் எளிதாவதுடன், தகவல்கள் விரைவாக பகிரப்படுவதால் முடிவுகள் விரைவாக எடுக்கப்படுகின்றன.