
கொள்ளு எனும் தானிய வகை உடல் பருமனைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், கொள்ளை விட கருப்பு நிற கொள்ளில் நிறைய ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் கனிமச் சத்துக்களும் இருக்கின்றன என்பது பெரும்பாலானோர் அறியாதது. குறிப்பாக, மழை மற்றும் பனிக்காலத்தில் உண்டாகும் சளி, இருமலை சரிசெய்யவும் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பைக் கரைக்கவும் கருப்பு கொள்ளு பயன்படும்.
கருப்பு கொள்ளு துவர்ப்புச் சுவை, இனிப்புச் சுவை, வறட்சி, உஷ்ண வீர்யம் ஆகியவை கொண்டது. கொள்ளு கஞ்சியை அருந்துவதால் நாட்பட்ட ஜலதோஷம், மூச்சுத்திணறல், இருமல், மூலம், விக்கல், வயிற்று உப்புசம், கபவாயு, கல்லடைப்பு போன்ற நோய்களும், வீக்கம், பெருவயிறு போன்ற உபாதைகளும் நீங்கி விடுகின்றன.
கருப்பு கொள்ளில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதனால் தினமும் முளைகட்டிய கருப்பு கொள்ளை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கிறது. மாதவிடாய் பிரச்னை, குறைவான இரத்தப்போக்கு உடைய பெண்கள் கருப்பு கொள்ளை தினமும் உணவில் சேர்த்து வந்தால் மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சரியாகும்.
கருப்பு கொள்ளில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைக்கிறது. கருப்பு கொள்ளு ஊற வைத்த நீரை, குழந்தை பெற்ற தாய்மார்கள் பருகினால் உடலில் உள்ள பிரசவ அழுக்குகள் நீங்கி, உடல் சுத்தம் பெறும். இதில் ஹார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது. மேலும், புரதம், நார்ச்சத்து நிறைந்துள்ளதால் உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
கருப்பு கொள்ளில் பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் அதிக அளவில் நிறைந்துள்ளதால் சிறுநீரக கற்கள் ஏற்படாமல் தடுக்கிறது. சிறுநீரகங்களில் கால்சியம் ஆக்சிலேட் என்பதுதான் சிறுநீரக கற்கள். இவற்றை நீக்கும் தன்மை கருப்பு கொள்ளுவுக்கு இருக்கிறது. கருப்பு கொள்ளுவை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. இதனை சளி மற்றும் காய்ச்சல் இருக்கும்போது சூப்பாக வைத்து குடித்தால் சளி மற்றும் காய்ச்சல் பிரச்னை சரியாகும்.
கருப்பு கொள்ளும், அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன், தாதுவைப் பலப்படுத்தும். எலும்பு மற்றும் நரம்புகளை வலுப்படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் கருப்பு கொள்ளு நல்ல தீர்வைத் தரும். கண் புரை நோய் வராமல் தடுக்க கருப்பு கொள்ளு உதவுகிறது. உடல் வலி, சோர்வு போன்றவற்றை பெருமளவில் குறைக்கும் கொள்ளு, கடுமையான உடல் உழைப்பிற்குப் பின் ஏற்படும் உடல் அயர்ச்சியையும் குறைக்கும். உடல் உஷ்ணம் மிகுந்தவர்களும், பித்த உடம்பு உள்ளவர்களும் கண்டிப்பாக கருப்பு கொள்ளை தவிர்த்தல் நல்லது.