

நாம் எல்லோரும் ஹாலிவுட் படங்களைப் பார்த்துவிட்டு, விண்வெளிப் பயணம் என்றால் ஏதோ ஜாலியாக ஸ்டார் வார்ஸ் விமானத்தில் பறப்பது போலவும், விதவிதமான கிரகங்களில் இறங்கி நடப்பது போலவும் கற்பனை செய்து வைத்திருக்கிறோம். "எப்படியாவது ஒருமுறை செவ்வாய் கிரகத்துக்குப் போய்விட வேண்டும்" என்று கனவு காண்பவர்களும் உண்டு. ஆனால், நிஜம் அவ்வளவு அழகானது இல்லை நண்பர்களே.
விண்வெளி, நினைத்துப்பார்க்க முடியாத ஆபத்துகள் நிறைந்தது. ஒருவேளை, உங்களிடம் பாதுகாப்பான விண்வெளி உடை இல்லாமல், நீங்கள் விண்வெளியிலோ அல்லது வேறு கிரகங்களிலோ மாட்டிக்கொண்டால் என்ன நடக்கும்? நினைத்தாலே குலைநடுங்கும் அந்தத் திகில் அனுபவங்களைப் பற்றித்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.
வெற்றிடத்தில் என்ன நடக்கும்?
முதலில், எந்தக் கிரகத்திற்கும் போகாமல், சும்மா விண்வெளியின் வெற்றிடத்தில் நீங்கள் மாட்டிக்கொண்டால் என்ன ஆகும் என்று பார்ப்போம். சினிமாக்களில் காட்டுவது போல, உங்களால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியாது. அதிகபட்சம் ஒரு பத்து அல்லது பதினைந்து விநாடிகள்... அவ்வளவுதான்! அதற்குள் உங்கள் நுரையீரலில் இருக்கும் காற்று வெளியேறி, மயங்கி விடுவீர்கள். அடுத்த மூன்றாவது நிமிடத்தில், ஆக்ஸிஜன் இல்லாததால் மூளை நிரந்தரமாகச் செயலிழந்துவிடும். சுருக்கமாகச் சொன்னால், கண் இமைக்கும் நேரத்தில் கதை முடிந்துவிடும்.
சூரியனும் புதனும்!
சூரியன் பக்கம் போனால் வலி வருவதற்கு முன்னாடியே, உங்கள் உடல் ஒரு கற்பூரம் போலக் காற்றில் கரைந்து ஆவியாகிவிடும். சரி, சூரியனுக்கு அருகில் இருக்கும் புதன் கிரகத்திற்குப் (Mercury) போனால், அங்கே இரண்டு விதமான நரக வேதனை காத்திருக்கிறது. சூரிய வெளிச்சம் படும் பக்கம் நின்றால், 400 டிகிரிக்கும் அதிகமான வெப்பத்தில் தீயில் இட்ட மெழுகு போல உருகிப் போவீர்கள். அப்படியே பின்ப்பக்கம் நிழலுக்குப் போனால், மைனஸ் 170 டிகிரி குளிரில் ரத்தம் உறைந்து, ஐஸ் கட்டியாக மாறிவிடுவீர்கள். எங்கு நின்றாலும், காற்று இல்லாததால் சில நிமிடங்களில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் நிச்சயம்.
வெள்ளி (Venus)!
இருப்பதிலேயே மிகக் கொடுமையான இடம் வெள்ளி கிரகம் (Venus). இதை நரகத்தின் வாசல் என்றே சொல்லலாம். இங்கே வெப்பம் அதிகம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், இங்கே பெய்வதெல்லாம் தண்ணீர் மழை இல்லை. சல்பூரிக் ஆசிட் மழை! நினைத்துப் பாருங்கள், மேலே கொதிக்கும் வெயில், மேலே ஆசிட் மழை, போதாக்குறைக்கு நெஞ்சை நசுக்கும் வளிமண்டல அழுத்தம். இங்கே ஸ்பேஸ் சூட் இல்லாமல் போவது தற்கொலைக்குச் சமம்.
செவ்வாய்!
நம்ம எலான் மஸ்க் ஆசைப்படும் செவ்வாய் கிரகமும் (Mars) அவ்வளவு பாதுகாப்பானது இல்லை. அங்கே வளிமண்டலம் மிக மிக மெலிசு. கடுமையான குளிரைத் தாங்கிக்கொள்ளக் கம்பளி ஆடைகளைப் போட்டுக்கொண்டாலும், சுவாசிக்கக் காற்று இருக்காது. நீங்கள் எவ்வளவு நேரம் மூச்சடக்கி இருப்பீர்களோ, அவ்வளவு நேரம் மட்டும்தான் அங்கே உயிரோடு நடக்க முடியும்.
வியாழன் (Jupiter), சனி (Saturn) போன்ற கிரகங்களில் நிலைமை இன்னும் விசித்திரம். அங்கே காலூன்றி நிற்கத் தரையே கிடையாது. அவை வெறும் வாயுக்களால் ஆன ராட்சத பந்துகள். அங்கே போனால், பள்ளமே இல்லாத ஒரு கிணற்றில் விழுவது போல, உள்ளே விழுந்து கொண்டே இருப்பீர்கள். ஒரு கட்டத்தில், அந்தக் கிரகங்களின் பயங்கரமான அழுத்தம் உங்களை ஒரு அப்பளம் போல நசுக்கிவிடும்.
இதையெல்லாம் படிக்கும்போது, "நம்ம பூமிதான்யா சொர்க்கம்" என்று தோன்றுகிறது இல்லையா? உண்மைதான். விண்வெளி உடை, ஆக்ஸிஜன் சிலிண்டர் என்று எந்தத் தொந்தரவும் இல்லாமல், சுதந்திரமாக மூச்சுவிட்டு, நிம்மதியாக உயிர்வாழப் பிரபஞ்சத்திலேயே மிகச் சிறந்த இடம் நம் பூமி மட்டும்தான்.