NASA மறைக்கும் அந்த ஒற்றைப் புகைப்படம்! - 3I/அட்லஸ் உண்மையிலேயே என்ன?

3I Atlas
3I Atlas
Published on

நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே, ஏதோ ஒரு நட்சத்திர மண்டலத்திலிருந்து ஒரு புதிய விருந்தாளி நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறான். ஜூலை 2025-ல் 'அட்லஸ்' (Atlas) தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட இதற்கு '3I/அட்லஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது சூரியக் குடும்பத்திற்கு வெளியே இருந்து வரும் மூன்றாவது விண்கல் என்பதால், இதற்கு '3I' எனப் பெயர் சூட்டப்பட்டது. ஆனால், இந்த விண்கல் வந்ததிலிருந்து பல மர்மங்களையும், குழப்பங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இது ஒரு சாதாரண விண்கல்தானா, அல்லது ஒரு ஏலியன் விண்கலமா என்ற விவாதம் இணையத்தில் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது.

ஏலியன் வதந்திகளும் போலி வீடியோக்களும்!

3I/அட்லஸ் ஒரு ஏலியன் விண்கலம்தான் என்பதற்கு ஆதாரமாக இரண்டு வீடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவின. ஒரு வீடியோ, நாசாவிடம் இருந்து கசிந்தது போலவும், மற்றொன்று ஜப்பானிய விஞ்ஞானிகள் எடுத்தது போலவும் இருந்தது. ஆனால், அந்த இரண்டு வீடியோக்களுமே பச்சைப் பொய்யானவை. அவை உண்மையில், 'பாராமிசியம்' (Paramecium) எனப்படும் ஒரு செல் நுண்ணுயிரியை (Microorganism) மைக்ரோஸ்கோப் வழியே படம் பிடித்து, பின்னணியை மட்டும் கறுப்பாக மாற்றி ஏமாற்றிய வீடியோக்கள்.

மேலும், நாசாவின் MRO விண்கலம் (Mars Reconnaissance Orbiter) இந்த விண்கல்லைப் படம் பிடித்தும், அந்தப் படங்களை வெளியிடாமல் மறைக்கிறது என்ற செய்தியும் இந்த ஏலியன் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

விஞ்ஞானிகளைத் திணறடிக்கும் உண்மைகள்!

வதந்திகளைத் தாண்டி, இந்த விண்கல் நிஜமாகவே பல விசித்திரமான குணங்களைக் கொண்டுள்ளது.

  1. முதலில், இந்த விண்கல் சிவந்த பழுப்பு நிறத்தில் (Reddish Brown) காணப்பட்டது. பின்பு, நம்பிபியாவில் ஒரு சூரிய கிரகணத்தின் போது பார்க்கையில், அது பச்சை நிறமாக மாறியிருந்தது. ஆனால், சமீபத்தில் ஹப்பிள் தொலைநோக்கி எடுத்த படங்கள் அது நீல நிறத்தில் இருப்பதாகக் காட்டுகின்றன. சூரிய ஒளி அதன் மீதுள்ள பனித்துகள்கள் மீது பட்டுத் தெரிப்பதால் இந்த நீல நிறம் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

  2. பொதுவாக, வால் நட்சத்திரங்கள் சூரியனுக்கு அருகில் வரும்போது, சூரியக் காற்றில் அதன் வால் சூரியனுக்கு எதிர்த் திசையில்தான் நீளமாக இருக்கும். ஆனால், 3I/அட்லஸின் வால், சூரியனை நோக்கிய திசையில் காணப்பட்டது, இது மிகவும் அரிதானது. இது நாம் பூமியிலிருந்து பார்க்கும் கோணத்தால் ஏற்படும் பிழையாக இருக்கலாம் அல்லது அதிலுள்ள கனமான தூசுத் துகள்கள் சூரியக் கான்றால் தள்ளப்படாததால் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

  3. இந்த விண்கல், கணிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் பயணிக்கிறது. இது ஏலியன் இன்ஜின்களால் அல்ல; அது சூரியனுக்கு அருகில் வருவதால், அதிலுள்ள பனிக்கட்டிகள் உருகி, வாயுக்களாக வெளியேறுகின்றன. இந்த வாயு வெளியேற்றம் ஒரு ராக்கெட் போலச் செயல்பட்டு, அதற்கு இயற்கையாகவே கூடுதல் வேகத்தைக் கொடுக்கிறது.

இதையும் படியுங்கள்:
செவ்வாய் தோஷம் - அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய சில உண்மைகள்!
3I Atlas

தற்போது செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையைக் கடந்துள்ள இந்த விண்கல், சூரியனுக்கு மிக அருகில் வந்து கொண்டிருக்கிறது. டிசம்பர் மாதத்தில் இது பூமிக்கு அருகில் வரும்போது, நம்மால் இதைப் பார்க்க முடியும். இது ஒரு ஏலியன் விண்கலம் என்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

ஆனாலும், இது நாம் இதுவரை பார்த்திராத பல மர்மங்களைக் கொண்ட ஒரு விசித்திரமான விருந்தாளி என்பதில் சந்தேகமில்லை. பிரபஞ்சத்தில் நாம் அறியாத விஷயங்கள் இன்னும் கோடிக்கணக்கில் உள்ளன என்பதற்கு இந்த 3I/அட்லஸ் ஒரு சிறந்த உதாரணம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com