
திருமண வயதில் உள்ள பெண்ணுக்கோ அல்லது பிள்ளைக்கோ திருமணம் செய்துவைக்க வரன் தேடும்போது முதலில் நாம் பார்ப்பது அவர்கள் ஜாதகத்தில் உள்ள தோஷத்தைத்தான். அந்த வகையில் இரண்டு விதமான தோஷங்கள் திருமணத் தடைக்குக் காரணமாக அமைகின்றன. அதில் முக்கியமானது செவ்வாய் தோஷம். அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
முதலில் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளது என்பதை அறிந்து கொண்டால் அதற்குத் தகுந்தாற்போல் செவ்வாய் தோஷம் உள்ள நபர்களுக்கு தகுந்த வரன்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது முன்னோர்களின் கூற்றாகும். செவ்வாய் தோஷம் என்பது செவ்வாய் கிரகமானது குடும்ப ஸ்தானங்களை அமைக்கக்கூடிய இடங்களான 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருப்பதாகும். இந்த இடங்களில் செவ்வாய் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளப்படுகின்றது. செவ்வாய் தோஷத்தில் சில விதிவிலக்குகளும் இருக்கின்றன.
செவ்வாய் கிரகம் உயிரினங்களிடத்தில் ஓடும் இரத்தத்தை குறிக்கக்கூடிய கிரகம் ஆகும். மேலும், செவ்வாய் கிரகம் படைத்தளபதியாகவும் கருதப்படுகின்றது. கோபம், வீரம் போன்றவற்றோடு விளங்கக்கூடியவர் செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் அதிகமாக உள்ள நபர்கள் ஆவர். இவர்களின் இரத்த ஓட்டத்தின் வேகமும் அதிகமாக இருக்கும். இந்த வேகம் சிலருக்கு கோபங்களாகவும், சிலருக்கு தாம்பத்தியம் மீது ஆர்வமும், சிலருக்கு உணர்ச்சிகள் மற்றும் ஆசைகளாகவும் இருக்கக்கூடியதாகும்.
செவ்வாய் தோஷம் உள்ள நபர்கள் எதிர்பாலின மக்களின் மீது ஒருவிதமான ஈர்ப்பு கொண்டிருப்பார்கள். அவர்களின் மீது ஆசைகளை வளர்த்துக்கொள்ளக்கூடிய நபர்களாகவும் இருக்கின்றனர். திருமண வாழ்க்கையில் இணையும்போது தாம்பத்திய சுகம் என்பது தம்பதியினர் இருவருக்கும் மிகவும் இன்றியமையாததாகும். அதில் ஒருவருக்கு அதிக விருப்பமும், மற்றவருக்கு விருப்பமின்றியும் இருக்கும் பட்சத்தில் அங்கே முதன்முதலாக பிரச்னைகள் தோன்றத் துவங்குகின்றன. இந்தக் கருத்து வேறுபாடுகள் நாளடைவில் இவர்களுக்கு இடையே ஒரு பிரிவினையை ஏற்படுத்தக்கூடிய ஒரு சூழலை உருவாக்குகின்றது.
செவ்வாய் தோஷமுள்ள நபர் தனது கோபத்தினால் என்ன செய்கின்றோம் என்று அறியாது சில செயல்களையும் செய்து விடுகின்றனர். இதுவே அவர்களின் பிரிவினைக்குக் காரணமாகிறது. இந்த காரணத்தை அடிப்படையாகக் கொண்டே நமது முன்னோர்கள் செவ்வாய் தோஷம் உள்ள நபர்களுக்கு செவ்வாய் தோஷம் உள்ள நபர்களை இணைக்க வேண்டும் என்று கூறினார்கள்.
செவ்வாய் தோஷத்திற்கு சிறந்த பரிகாரம் என்பது அவர்களை ஜாதக முறையில் இணைப்பதே ஆகும். ஆண் ஜாதகருக்கு 7, 8 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் பெண்ணிற்கும் அதே இடங்களில் செவ்வாய் இருக்குமாறு திருமணம் செய்வதும் அதேபோல 2, 4, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தாலும் அதே அமைப்புடைய ஜாதகரோடு திருமணம் செய்யும்போதும் தாம்பத்ய வாழ்வு சிறக்கும். நடைமுறையில் இதிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன. ஏனெனில், காதலிக்கும் நபர்கள் இதைப் பற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. காதல் செய்யும் நபர்களில் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றவருக்கு செவ்வாய் தோஷம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அவர்கள் இணையலாமா? அல்லது அவர்களின் துணைவருக்கு இந்த தோஷத்தினால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்று பலவிதமான கேள்விகள் மக்களிடையே இருக்கின்றது.
முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டியது எந்த ஒரு தோஷத்திற்கும் யாரையும் கொல்லக்கூடிய சக்தி என்பது கிடையாது. தோஷம் என்பது நாம் செய்த கர்ம வினையை அனுபவிக்க இப்பிறவியை எடுத்ததாகும். ஆகவே, ஒருவருக்கு மரணம் ஏற்படுமாயின், அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளின்படியே ஏற்படுகின்றது. இதில் இவருடன் இணைந்த பின்பு இவருக்கு மரணம் ஏற்பட்டது, இந்த தோஷத்தினால் ஏற்பட்டது என்று கூறுவது சரியானதல்ல.
திருமணத்தில் இருவரின் ஜாதகங்கள் ஒன்றிணைந்து செயல்படும் பட்சத்தில் இவரின் தோஷமானது அவரை அடித்துவிட்டது என்று கூறுவதைக் கேட்டிருக்கின்றோம். இது முற்றிலும் தவறாகும். அவர்களுக்கான திசாபுத்திகளையும் அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளையும் நாம் சரிவர ஆராய்ந்தே கூற வேண்டும்.
காதலில் விழுந்த இருவரில் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இல்லாத பட்சத்தில் அவருடன் இணையும் மற்றொருவர் அவருக்கு இணையாக செயல்படுதல் என்பது இருவருக்கும் உள்ள பிணைப்பை அதிகப்படுத்தும். காதல் என்பது ஒருவிதமான அன்பாகும். அந்த அன்பிடம் நாம் தோற்பதும், விட்டுக்கொடுப்பதும் நமது வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றுகின்றது என்பதை அவர்கள் உணர்வது மட்டுமே இந்த தோஷத்திற்கான சிறந்த பரிகாரம் ஆகும்.
பெரியவர்கள் பார்த்து செய்யும் திருமணத்தில் இவை யாவும் கவனித்து செய்யப்படுகின்றன. இருவரும் இணைந்த பின்பு அவர்களுக்குள் ஏற்படும் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் அவர்களின் பிரிவினைக்குக் காரணமாக இருக்கின்றன. இதை நாம் முழுமையாக அறிந்து கொண்டால் நமது வாழ்க்கையும், திருமண வாழ்க்கையும் இனிமையானதாக இருக்கும்.