5S டெக்னிக்கால் முன்னேறிய ஜப்பான்! அது என்ன 5S டெக்னிக் ?

5S Methodology
5S Methodology
Published on

இரண்டாம் உலகப் போரின் போது 1945 ஆம் ஆண்டில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களின் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டு இரு நகரங்களும் பேரழிவைச் சந்தித்தன. யாருமே எதிர்பாராத வகையில் வெகுவிரையில் ஜப்பான் முன்னேறி தொழில்துறையில் பல சாதனைகளைச் செய்து அனைவரையும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முதல் காரணம் அவர்களுடைய அயராத உழைப்பு. அடுத்த காரணம் தொழில் முன்னேற்றத்திற்கான புதிய நிர்வாக மற்றும் தொழில்நுட்ப வழிமுறைகளைக் கண்டறிந்து அவற்றை நடைமுறைப்படுத்தியது. இத்தகைய புதிய வழிமுறைகளுள் முக்கியமான ஒரு வழிமுறை 5S ஆகும். இந்த பதிவில் 5S பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஜப்பானியர்கள் தங்கள் நிறுவனங்களில் 5S தொழில்நுட்பத்தை செயல்படுத்திய பின்னர் பல நன்மைகள் விளைவதைக் கண்டார்கள்.  

செய்ரி (Seiri), செய்டன் (Seiton), செய்ஷோ (Seiso), செய்கெட்சு (Seiketsu), சிட்சுகே (Shitsuke) - இந்த ஐந்து வழிமுறைகளே 5S என அழைக்கப்படுகின்றன. இந்த ஐந்து வார்த்தைகளின் தொடக்க எழுத்தானது S என அமைந்திருப்பதால் இது 5S என அழைக்கப்படுகிறது. இனி 5S பற்றி அறிந்து கொள்ளுவோம்.

  • செய்ரி (Seiri) – ஆங்கிலத்தில் Sort : 

பணியிடங்களில் பணிக்குத் தேவையான பொருட்களை அதற்குரிய இடங்களில் வகைப்படுத்தி வைத்தலைக் குறிக்கிறது. நமது பணியிடங்களில் தேவையான பொருட்களை விட தேவையற்ற பொருட்களே கணிசமான இடத்தை ஆக்கிரமித்திருக்கும். தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்படுவதால் நிறைய இடம் கிடைக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. பணியிடத்தில் போதிய இட வசதி கிடைப்பதால் விபத்துகள் தவிர்க்கப்படுகின்றன.

  • செய்டன் (Seiton) – ஆங்கிலத்தில் Straighten :

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு இடத்தை ஒதுக்கி அந்த இடத்தில் அந்த பொருளை வைத்துப் பயன்படுத்துதல் என்பதை இது குறிக்கிறது. இந்த செயலானது தேடுதல் என்ற தேவையற்ற செயலை முற்றிலுமாகத் தவிர்க்க உதவுகிறது. இந்த செயல் மூலம் ஒரு குறிப்பிட்ட பொருளை எடுப்பது பயன்படுத்துவது என்பது மிகவும் எளிதாகிறது.

  • செய்ஷோ (Seiso) - ஆங்கிலத்தில் Shine : 

நிறுவனத்தில பணியானது முடிந்த பின்னர் இயந்திரங்களைத் தூய்மைபடுத்துதலை இது குறிக்கிறது. பணிகள் முடிந்ததும் இயந்திரங்களைத் துடைத்து தூய்மைபடுத்தி அவற்றை பளபளப்பாக இருக்கும்படி செய்தலை இது குறிக்கிறது.   இயந்திரங்களைத் தூய்மைபடுத்தும் போது அதில் ஏதேனும் பாகங்கள் சேதமடைந்துள்ளனவா என்பதையும் உடைந்த பாகங்கள் இயந்திரத்தில் சிக்கியுள்ளனவா என்பதையும் இதன்மூலம் தெரிந்து கொள்ள இயலும்.

  • செய்கெட்சு (Seiketsu) – ஆங்கிலத்தில் Standardize : 

தரப்படுத்தப்பட்ட முறை என்பதை குறிப்பது.  இதன் மூலம் பணியிடம்,  நடக்கும் பாதை, பொருட்களை  வைக்கும் இடம் போன்ற ஒவ்வொன்றுக்கும் எல்லைக் கோடுகள் வரையப்பட்டு தரப்படுத்தபடுகின்றன. பணியிடங்களில் உரிய குறிப்பு அட்டைகள் மற்றும் லேபிள்களைப் பொருத்தி அதன் மூலம் பணியாளர்களுக்கு பணி குறித்து விளக்கப்பட்டிருக்கும்.

இதையும் படியுங்கள்:
Teleportation சாத்தியமானால் உலகம் எப்படி இருக்கும்? 
5S Methodology
  • சிட்சுகே (Shitsuke) – ஆங்கிலத்தில் Sustain : 

தக்க வைத்தல் என சுருக்கமான பொருள் கொண்டது இந்த செயல்பாடு.  முதல் நான்கு S களை சரியானப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதையும் இது அறிவுறுத்துகிறது. பணியாற்றும் வழிமுறைகளை பணிசெய்யும் இடத்தில் விளம்பரம் செய்தல், ஊழியர்களுக்கு அந்த வழிமுறைகளில் தேவையான பயிற்சி கொடுத்தல், வழிமுறைகளை சரியாக கடைபிடித்து நடத்தல், விதிமுறைகளின் படி வேலை செய்தல் முதலானவற்றை இது கூறுகிறது.

  • 5S வழிமுறைகளை நிறுவனங்களில் முறையாகப் பின்பற்றி நடந்தால் பணியிடங்களில் பெரிய மாற்றங்கள் உருவாகும். 

  • நிறுவனத்தில் பணியாற்றுபவர்களின் மனஇறுக்கம் குறையும்.

  • பாதுகாப்பான பணிச்சூழல் உருவாகும். 

  • பொருட்களை அதற்குரிய இடங்களில் வைப்பதால் அப்பொருட்களை தேடுவதன் மூலம் ஏற்பம் கால விரயம் தவிர்க்கப்படுகிறது. 

  • பணி இடத்தில் தேவையில்லாதவற்றை அவ்வப்போது அகற்றுவதன் மூலமாக பணியாற்ற இடவசதி அதிகரிக்கும். 

  • நிறுவனத்தைப் பார்வையிட வரும் வெளி நபர்களின் மனதில் நமது நிறுவனத்தைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் உருவாகும். 

  • இயந்திரங்கள் சரியான முறையில் சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுவதால் உற்பத்தி அதிகரிக்கும். 

  • உற்பத்தி அதிகரித்தால் நிறுவத்திற்கு கணிசமான லாபம் ஏற்பட்டு ஊழியர்களுக்கும் கணிசமான வெகுமதி (Production Bonus) கிடைக்கும். 

ஜப்பானியர்கள் கண்டுபிடித்த இந்த வழிமுறை தற்போது உலகெங்கும் பல நாடுகளில் பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  நல்ல பலன்களை அளிக்கும் இந்த 5S வழிமுறையை நிறுவனங்களில் மட்டுமின்றி நம் வீடுகளிலும் பின்பற்றலாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com