

ஸ்மார்ட்போன் நம் வாழ்வின் அங்கமாகிவிட்டது. ஆனால், இன்றும் பல நேரங்களில் நாம் சந்திக்கும் மிகப்பெரிய எரிச்சல் சிக்னல் இல்லை என்பதுதான். குறிப்பாக வீட்டின் உட்புற அறைகள், பேஸ்மென்ட் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளில் சிக்னல் குறைவாக இருக்கும்போது முக்கியமான அழைப்புகள் துண்டிக்கப்படுவது பலருக்கும் நடக்கும் ஒரு கொடுமை.
டவர் கிடைக்கவில்லை என்று போனை ஜன்னல் ஓரம் கொண்டு போய் வைக்கும் காலம் இனி இல்லை. உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் ஒரு ரகசிய வசதியை ஆன் செய்தாலே போதும்; சிக்னல் ஜீரோவாக இருந்தாலும் HD தரத்தில் பேச முடியும். அது என்ன வசதி? அதை எப்படி பயன்படுத்துவது? விரிவாகப் பார்ப்போம்.
இந்த அதிசய வசதியின் பெயர் Wi-Fi Calling (VoWiFi). சுருக்கமாகச் சொன்னால், உங்கள் சிம் கார்டின் சிக்னலைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, உங்கள் வீட்டில் உள்ள வைஃபை (Wi-Fi) நெட்வொர்க்கைப் பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ளும் தொழில்நுட்பம் இதுவாகும்.
இது எப்படி வேலை செய்கிறது?
பொதுவாக நாம் போன் பேசும்போது, நம் மொபைல் அருகில் உள்ள செல்போன் டவருடன் இணையும். ஆனால் வைஃபை காலிங் வசதியில், உங்கள் போன் வைஃபை ரூட்டருடன் இணைந்து, அதன் வழியாக அழைப்புகளை மேற்கொள்ளும்.
இதன் சிறப்பம்சங்கள்:
சாதாரண அழைப்புகளை விட மிகத் தெளிவான ஆடியோ தரம் இதில் கிடைக்கும்.
உங்கள் தற்போதைய ரீசார்ஜ் பிளானிலேயே இது வேலை செய்யும். வைஃபை டேட்டாவிற்கு மட்டுமே மிகக் குறைந்த அளவில் செலவாகும்.
ஒருவேளை உங்கள் ஏரியாவில் மொபைல் டவரே இல்லை என்றாலும், வைஃபை இருந்தால் போதும், உலகத்தின் எந்த மூலைக்கும் பேசலாம்.
வைஃபை காலிங்-ஐ ஆன் செய்வது எப்படி?
பெரும்பாலான நவீன ஸ்மார்ட்போன்களில் இந்த வசதி உள்ளது. இதை ஆக்டிவேட் செய்ய கீழே உள்ள படிகளைப் பின்பற்றுங்கள்.
Android போன் எனில்,
1. முதலில் உங்கள் போனில் உள்ள Settings ஆப்பிற்குச் செல்லவும்.
2. அங்கே Connections அல்லது Network & Internet என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3. அதில் IM Cards அல்லது Mobile Network என்ற ஆப்ஷனுக்குள் செல்லவும்.
4. இப்போது அங்கே Wi-Fi Calling என்ற பட்டன் இருக்கும். அதை On செய்யவும்.
iPhone (iOS) போன் எனில்,
1. Settings ஆப்பிற்குச் செல்லவும்.
2. கீழே ஸ்க்ரோல் செய்து Phone என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3. அதில் Wi-Fi Calling என்பதைத் தொட்டு, உள்ளே சென்று ஆன் செய்யவும்.
கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள்:
1. உங்களிடம் வைஃபை வசதி இருக்க வேண்டும். அது லேண்ட்லைன் வைஃபையாகவோ அல்லது மற்றொரு போனின் ஹாட்ஸ்பாட்டாகவோ இருக்கலாம்.
2. இந்தியாவில் ஜியோ, ஏர்டெல் மற்றும் Vi ஆகிய நிறுவனங்கள் இந்த வசதியை முழுமையாக வழங்குகின்றன.
நீங்கள் அடிக்கடி லிப்ட் அல்லது பேஸ்மென்ட்டில் இருக்கும்போது கால் கட் ஆகிறது என்றால், வைஃபை காலிங் வசதியை எப்போதும் ஆன் செய்து வைப்பது சிறந்தது. இது உங்கள் பேட்டரி ஆயுளை சிறிது மிச்சப்படுத்தும்.
தொழில்நுட்பம் வளர வளர, நம் பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் எளிதாகிக் கொண்டே வருகின்றன. இனி சிக்னல் இல்லை என்று கவலைப்படாமல், உங்கள் வைஃபை மூலமாகவே தடையின்றிப் பேசுங்கள்.