செயற்கை கருத்தரிப்பு என்பது, இயற்கையான முறையில் கருத்தரிக்க இயலாத தம்பதியருக்கு மருத்துவ உதவியுடன் குழந்தைப்பேறு பெறுவதற்கான ஒரு முறையாகும். 1978-ம் ஆண்டில் முதன்முதலாக இங்கிலாந்தில் செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பிறந்தது.
அந்த ஆண்டில், டாக்டர் ராபர்ட் ஜியோஃபரி எட்வர்ட்ஸ், டாக்டர் பேட்ரிக் கிறிஸ்டோபர் ஸ்டெப்டோ மற்றும் செவிலியர் ஜீன் மரியன் பர்டி ஆகியோரின் முயற்சியால் உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை லூயிஸ் பிரவுன் பிறந்தார். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஜூலை 25 ஆம் தேதி உலக கருவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. பின்னர் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் அம்முறை நுழைந்தது.
இதில் முக்கியமாக, ஐ.வி.எஃப் (In Vitro Fertilization) மற்றும் ஐ.யூ.ஐ (Intrauterine Insemination) போன்ற முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஐ.வி.எஃப் (IVF - In Vitro Fertilization) முறையில், பெண்ணின் கருமுட்டையும், ஆணின் விந்தணுவும் ஆய்வகத்தில் இணைக்கப்பட்டு, கரு உருவாக்கப்பட்டு, பின்னர் பெண்ணின் கருப்பையில் வைக்கப்படுகிறது.
ஐ.யூ.ஐ (IUI - Intrauterine Insemination) முறையில், ஆணின் விந்தணுவை கருப்பைக்குள் செலுத்தி கருத்தரிப்பு நிகழ வைக்கப்படுகிறது.
இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில் தரப்பட்டு வந்த செயற்கை கருத்தரிப்பு சேவையை கடந்த 2007-ம் ஆண்டு முதல் அரசு மருத்துவமனைகளே தரத்தொடங்கியுள்ளன. இந்தியாவை பொருத்தவரை கடந்த 40 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 80 லட்சம் குழந்தைகள் செயற்கை கருத்தரித்தல் மூலமாக பிறந்திருப்பதாக ‘செயற்கை கருவூட்டலுக்கான இந்திய சங்கம்’ கூறுகிறது.
தற்போது கருத்தரிப்பில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொலம்பியா ஆராய்ச்சியாளர்கள் சாதனை புரிந்து உள்ளனர்.19 ஆண்டுகள் குழந்தைக்காக காத்திருந்த பெண்ணொருவரை STAR (Sperm Tracking and Recovery) எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் கருவுறச் செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். AI முறையை பயன்படுத்தி இப்படி செய்வது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகின்றது.
இந்த சாதனை ஆண்களின் மலட்டுத்தன்மை பிரச்சனைகளுக்கு, குறிப்பாக விந்துவில் உயிரணுக்கள் இல்லாத (azoospermia) நிலை உள்ளவர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
STAR எனப்படும் இந்த செயன்முறையானது அதிநவீன இமேஜிங் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு இரண்டையும் பயன்படுத்தி விந்து மாதிரிகளை ஸ்கேன் செய்கிறது எனவும், இது ஒரு மணி நேரத்திற்கு 80 லட்சம் படங்களை எடுக்கக்கூடியது எனவும், இந்த AI அல்காரிதம், விந்துவில் உள்ள உயிரணுக்களை சிறப்பாக அடையாளம் காண்கிறது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இம்முறை மூலம் விந்து மாதிரிகளில் மிகச் சிறிய உயிரணுக்களைக் கண்டறிந்து, அவை கருப்பைக்குள் நுட்பமாக செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி, மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் இணையும் புதிய பரிமாணமாகக் கருதப்படுகிறது.