
தற்போது உள்ள அவசர காலக்கட்டத்தில் காலையில் பள்ளி செல்லும் குழந்தைகள் உணவை எடுத்துக் கொள்ளாமல் தவிர்க்கிறார்கள். காலை உணவை எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியமாகும். குழந்தைகள் சரியான காலை உணவை எடுத்துக் கொள்ளும் போது அது அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துகிறது. இதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
காலை உணவை தவிர்க்காமல் குழந்தைகள் உட்கொள்வது அவர்களின் கல்விக்கும், ஆரோக்கியத்திற்கும் முக்கியமானதாக சொல்லப்படுகிறது. குழந்தைகள் காலை உணவை தவிர்ப்பது அவர்களின் உடல் மற்றும் மனநலத்தை பாதிக்கும். குழந்தைகளுக்கு சிறுவயது முதலே பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட பழக்க வேண்டும். இதுவே அவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் உடல் மற்றும் மன வெற்றிக்கு வழிவகுக்கும்.
காலை உணவு உட்கொள்வதால் குழந்தைகளுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது. காலை உணவு பசியை குறைத்து கற்றலுக்கு வழிவகுக்கிறது. இதனால் அவர்கள் நாள் முழுவதும் உற்சாகத்தோடு இருப்பதோடு கல்வியிலும் கவனம் செலுத்த முடியும். ஊட்டச்சத்து மிகுந்த உணவை குழந்தைகள் எடுத்துக் கொள்வதால், போதுமான நினைவாற்றலை பெறவும், சுறுசுறுப்புடன் செயல்படவும் உதவுகிறது.
குழந்தைகள் வீட்டுப்பாடம், விளையாட்டு என்று இருப்பதால், தூங்க செல்வதற்கு தாமதம் ஆகிறது. இதனால் காலை தாமதமாக எழுந்து அவசரமாக பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவர்களுக்கு சாப்பிட போதுமான நேரம் கிடைப்பதில்லை. சரியான தூக்கம் இல்லாததால் குழந்தைகள் காலையில் சோர்வாக உணர்கிறார்கள்.
குழந்தைகள் காலை உணவை தவிர்ப்பதன் மூலம் தேவையான ஊட்டச்சத்துக்கள் பெறமுடியாமல் போகிறது. சத்தான காலை உணவை எடுத்துக்கொள்ளாத குழந்தைகள் வகுப்பறையில் சோம்பேறியாக சுறுசுறுப்பின்றி இருப்பார்கள். இவர்களுக்கு கவனச்சிதறல் அதிகமாக இருக்கும். இதனால் இவர்களின் கற்றல்திறன் பாதிக்கப்படும்.
நல்ல காலை உணவை சாப்பிடும் குழந்தைகள் சுறுசுறுப்பாகவும், நினைவாற்றலுடனும் நல்ல பிரச்னையை தீர்க்கும் திறனுடனும் இருப்பார்கள். குழந்தைகளுக்கு முட்டை, தயிர், வேர்க்கடலை, வெண்ணெய், சுண்டல் போன்ற புரத உணவுகளை சாப்பிட தருவது நல்லது. முழு தானியங்கள், ஓட்ஸ், காய்கறிகள் போன்ற நார்ச்சத்துக்களும் அவர்களின் உணவில் இடம் பிடிக்க வேண்டும்.
பீன்ஸ், பயறு வகைகள், ஸ்ட்ராப்பெர்ரி, ஆப்பிள், மாதுளை, கொய்யா, சிட்ரஸ் பழங்கள், கீரைகள், மசாலா போன்றவற்றை சேர்க்க வேண்டும். சில குழந்தைகளுக்கு தானிய உணவுகள் பிடிக்காது. பழங்கள், பழச்சாறு அதிகம் பிடிக்கும். அவர்களுக்கு பழ ஸ்மூத்தீஸ் கொடுக்கலாம். சில பழ ஸ்மூத்தீஸில் தயிர் சேர்த்துக் கொடுக்கலாம். இது குழந்தைகளுக்கு தேவையான சக்தியை கொடுக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)