பெட்டியாய்த்தான் பிறப்பெடுத்தேன்
பெருமையாய் வரவேற்பறையில்
என்னை வைத்துவிட்டு
எல்லோரும் பார்த்திருப்பர்!
சாய்வுநாற்காலியில் சாய்ந்தபடி தாத்தா…
பாதங்களை நீட்டியபடி பக்கத்தில்பாட்டி…
ஓரமாய்நாற்காலியில் ஒய்யாரமாய்அப்பா…
அடுப்படிநிலைப்படியில் அமர்ந்தபடிஅம்மா…
டாய்கார்களை டாப்ஸ்பீடில் இயக்கிட
அடிபோட்டபடி அண்ணாவும் தங்கையும்…
என்றேஇருந்த இனியநாட்களவை!
எல்லோர்பார்வையும் என்மீதேபதிந்திருக்கும்!
வண்ணத்தில் எனைமாற்றி மகிழ்வாய்ப்பார்த்திடவே
மொத்தக்குடும்பமும் முழுதாய்விரும்பிற்று!
என்பருமனைக் குறைத்தார்கள்!
பக்கவாட்டில் இழுத்தார்கள்!
மெலிந்த உடம்புடனே…
மேலுங்கீழும் நீண்டேன்!
சுவருக்குத் துணையானேன்
சூப்பராய் உடல்இளைத்தேன்!
வண்ணத்திற்கு மாறியதால்
எண்ணத்திற்கு உவப்பானேன்!
சின்னதாய் இருந்தஎன்னைச்
சிறப்பாய்ப் பெருக்கியதால்
மூத்தோர் கண்களிலும்
முழுதாய் நான்பட்டேன்!
சினிமா டிராமாவென்று
சிறுபிள்ளையாய் அலைந்தவர்களைப்
படிதாண்டாப் பத்தினிகளாய்
பக்குவமாய் மாற்றிவிட்டேன்!
நேருஸ்டேடியமோ நீளுலகஒலிம்பிக்கோ…
என்னில் பார்ப்பதைப்போல்
இயல்பாய்ப் பார்த்திடவே
அவ்விடங்கள் சென்றாலும்
அவ்வளவாய் முடியாது!
உலகத்து நடப்புகளை
உங்கள் ரிசப்ஷன்ஹாலில்
கண்களுக்கு விருந்தாக்கும்
கலைத்தாயின் புதல்வன்நான்!
ஏஐ உதவியுடன்
இன்னும்எனைச் சிறிதாக்கி
ஆணியில் மாட்டிவிட்டு
ஆப்போசிட் சுவற்றினிலே
படம்காட்டும் நிலைகூட
பக்குவமாய் வந்திடலாம்!
உருவம் மாறினாலும்…
உயர்நுட்பம் சிறந்தாலும்…
உங்கள் உயிர்நண்பன்
என்றும் நான்தானே!