சமீபத்தில் நடந்த புதிய ஆய்வில், மயில்களின் தோகையில் லேசர் ஒளி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு அறிவியலாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மயில்கள் தங்களின் கண்கவர் தோகையைப் பயன்படுத்தி ஒளியை உருவாக்குகின்றன என்பது நமக்குத் தெரிந்ததே. ஆனால், அவற்றின் தோகையிலுள்ள குறிப்பிட்ட பகுதிகள் மஞ்சள் மற்றும் பச்சை நிறத்திலான லேசர் ஒளியை உருவாக்கும் திறன் கொண்டவை என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கண்டுபிடிப்பு, அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் ஃப்ளோரிடா பாலிடெக்னிக் பல்கலைக்கழகம் (Florida Polytechnic University) மற்றும் யங்ஸ்டவுன் மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மயிலின் தோகையில் உள்ள சிறப்புப் பகுதிகளில் ஒரு சாயத்தைப் பயன்படுத்திப் பரிசோதனை செய்தனர். அப்போது, வழக்கமான ஒளியின் பிரதிபலிப்புக்கு அப்பாற்பட்ட ஒரு வித்தியாசமான ஒளியை, இந்தச் சாயங்கள் வெளியிடுவதை அவர்கள் கண்டறிந்தனர்.
LASER என்பது Light Amplification by Stimulated Emission of Radiation என்பதன் சுருக்கமாகும். அதாவது, ஒளியை அதிகரிக்கச் செய்யும் ஒரு முறை. சில பொருள்கள் அல்லது சாயங்களின் மீது ஒளியைப் பாய்ச்சும்போது, அவை கூட்டாக ஒளியை வெளியிட்டு, லேசர் ஒளியை உருவாக்குகின்றன. இது இயற்கையில் அரிதாக நடக்கிறது.
மயிலின் தோகையில் லேசர் ஒளி உருவாவதற்கு, ஆப்டிகல் கேவிட்டி (optical cavity) எனப்படும் ஒரு சிறப்பு அமைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த அமைப்பு, ஒளியை எதிரொலிப்பதன் மூலம் அலைகளை வரிசைப்படுத்தி, லேசர் கதிர்களாக மாற்றுகிறது. தோகையிலுள்ள சிறிய கண் போன்ற புள்ளிகளில் இந்த அமைப்பு காணப்படுகிறது. இது, மஞ்சள் மற்றும் பச்சை நிற லேசர் ஒளியை வெளியிடுகிறது.
தோகையின் எந்தப் பகுதி இந்தப் பிரகாசமான வண்ணங்களுக்குக் காரணமாக இருக்கிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இந்த லேசர் ஒளியானது, தோகையின் பல பகுதிகளில் ஒரே மாதிரியான அலைநீளத்தில் உள்ளது.
மயில்கள் ஏன் தங்களின் அழகான தோகையில் லேசர் ஒளியை உருவாக்கும் திறனைப் பெற்றிருக்கின்றன என்பது ஒரு புதிராகவே உள்ளது. பிற மயில்களுடன் தொடர்புகொள்வதற்காக, அவை இந்த லேசர் ஒளியை பயன்படுத்துகின்றனவா அல்லது எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள இந்த ஒளியைப் பயன்படுத்துகின்றனவா என்பது பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த ஆராய்ச்சி, 'Scientific Reports' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பு, லேசர் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கும் மேம்படுத்துவதற்கும் உதவியாக இருக்கலாம். மேலும், உயிரியல் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கும் ஒரு புதிய கருவியாக இந்த லேசர் அமைப்பை, ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.