கூகிள் உதவியாளருக்கு விடைகொடுத்து ஜெமினியை வரவேற்போம்!

Gemini AI
Gemini AIGemini AI
Published on

தொழில்நுட்ப உலகில் மாற்றங்கள் மின்னல் வேகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் புதுப்புது கண்டுபிடிப்புகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. அந்த வகையில், கூகிள் நிறுவனம் தனது டிஜிட்டல் உதவியாளரான கூகிள் அசிஸ்டண்டிற்கு விரைவில் முடிவு கட்டவுள்ளது என்ற செய்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக விளங்கிய இந்த டிஜிட்டல் நண்பன், புதிய தலைமுறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஜெமினிக்கு வழிவிடப் போகிறது.

2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கூகிள் அசிஸ்டண்ட், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே திகழ்ந்தது. தகவல்களைத் தேடுவது முதல், அலாரங்களை அமைப்பது வரை பல்வேறு பணிகளை எளிதாக முடித்துக் கொடுக்க உதவியது. ஆனால், காலப்போக்கில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஏற்பட்ட அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக, கூகிள் நிறுவனம் தனது அடுத்த கட்ட நகர்வாக ஜெமினியை களமிறக்கத் தயாராகி வருகிறது. ஏற்கனவே பல மில்லியன் பயனர்கள் ஜெமினிக்கு மாறியுள்ளதாக கூகிள் தெரிவித்துள்ளது. இந்த புதிய டிஜிட்டல் உதவியாளர், முந்தைய வெர்ஷனை விட மேம்பட்ட அம்சங்களையும், அதிநவீன செயற்கை நுண்ணறிவு திறன்களையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களைத் தொடர்ந்து, கார்கள், ஹெட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் போன்ற பிற சாதனங்களிலும் ஜெமினி விரைவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும். தற்போது இந்த சாதனங்களில் கூகிள் அசிஸ்டண்ட் வழக்கம் போல் செயல்பட்டாலும், இந்த ஆண்டு இறுதிக்குள் அவை அனைத்தும் ஜெமினிக்கு புதுப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த சாதனங்களில் ஜெமினியின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஏற்கனவே கூகிள் அசிஸ்டண்டில் இருந்த பல முக்கிய அம்சங்களான இசை கட்டுப்பாடு, லாக் ஸ்கிரீனில் இருந்து சில செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் டைமர்களை அமைத்தல் போன்ற வசதிகள் ஜெமினியில் சேர்க்கப்பட்டுள்ளன. இன்னும் சில அம்சங்கள் படிப்படியாக சேர்க்கப்பட்டு வருவதாகவும் கூகிள் தெரிவித்துள்ளது. கூகிள் நிறுவனத்தின் இந்த முடிவு ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிக்சல் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஜெமினி தான் முதன்மை டிஜிட்டல் உதவியாளராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஹெல்மெட் போடாதவர்களை அலர்ட் செய்யும் கூகிள் மேப்… இனி நோ டென்ஷன்!
Gemini AI

கூகிள் அசிஸ்டண்ட் என்ற ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்து, ஜெமினி என்ற புதிய யுகம் தொடங்கவிருக்கிறது. இந்த மாற்றம் பயனர்களுக்கு மேலும் மேம்பட்ட மற்றும் திறமையான டிஜிட்டல் உதவியாளர் அனுபவத்தை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com