
தினமும் பூமியிலிருந்து பார்த்து மகிழும் அற்புத கிரகம் சந்திரன்.
அம்புலிமாமா வா வா என்று குழந்தைகள் மகிழ்வது ஒரு புறம் இருக்க, வாராயோ வெண்ணிலாவே என்று காதலனும் காதலியும் பாடி மகிழும் ஆனந்தத் தேன் நிலவைத் தருவதும் கூட இந்த சந்திரன் தான்!
பூமியிலிருந்து சராசரியாக 2,38,360 மைல்கள் (3,82,500 கிலோமீட்டர்) தூரத்தில் உள்ளது சந்திரன். இது ஏறத்தாழ 30 மடங்கு பூமியின் குறுக்களவிற்குச் சமமான தூரமாகும்.
குறுக்களவை எடுத்துக் கொண்டோமானால் சந்திரன் பூமிக்கு நாலில் ஒரு பங்கு அளவு தான். சந்திரனின் மேல்பரப்பளவை பூமியுடன் ஒப்பிட்டுப் பார்த்தோமென்றால் அதில் பதினாறில் ஒரு பங்கு பரப்பளவைத் தான் கொண்டுள்ளது. பூமியின் பொருள்திணிவை எடுத்துக் கொண்டோமானால் அது 1.2% அளவு பூமியின் பொருள்திணிவைக் கொண்டிருக்கிறது.
சந்திரனின் மிக பிரமாதமான அம்சம் அது பூமிக்கு எப்போதும் இருக்கும் சிறந்த தோழன் என்பது தான். பூமியிலிருந்து சுலபமாகப் பார்த்து ஆனந்திக்கக் கூடிய கிரகமும் அது தான். சந்திரனின் வளர்பிறையும் தேய்பிறையும் மனித குலத்திற்கு பல்லாயிரம் ஆண்டுகளாகப் பல்வேறு விதத்தில் வழிகாட்டி வந்திருக்கிறது. எடுத்துக்காட்டாகச் சொல்வதென்றால் நாம் கொண்டிருக்கும் காலண்டர் மாதம் சுமாராக சந்திரன் ஒரு பௌர்ணமியிலிருந்து அடுத்த பௌர்ணமிக்கு வரும் காலம் தான்.
ஆனால் அதன் தோற்றம் இருக்கிறதே, அது மர்மமானது. எப்போதுமே அது நமக்கு அதன் ஒரு முகத்தையே காண்பிக்கிறது. ஆனால் நிஜத்தில் அது மாறிக் கொண்டே தான் இருக்கிறது. அதன் உண்மையான அளவில் எவ்வளவை நாம் பார்க்கிறோம் என்பது அது சூரியனுக்கும் பூமிக்கும் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதைப் பொறுத்துத் தான்!
ஒவ்வொரு மாதமும் பூமிக்கு மிக அருகில் சந்திரன் இருக்கும் தூரம் Perigee எனப்படுகிறது. அதே போல பூமிக்கு ஒவ்வொரு மாதமும் சந்திரன் மிகவும் தூரத்தில் உள்ள தூரம் Apogee எனப்படுகிறது. எடுத்துக் காட்டாகச் சொல்வதென்றால் 2025ல் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி மிகவும் சமீபத்தில் இருந்த சந்திரன் செப்டம்பர் மாதம் 10ம் தேதி Perigee தூரத்தில் இருக்கும்.
பூமி மீது சந்திரன் மோதும் வாய்ப்பு உண்டா?
இல்லை, இல்லவே இல்லை. ஏன்? வருடாவருடம் பூமியிலிருந்து சந்திரன் ஒன்றரை அங்குலம் தள்ளியே போகிறது.
ஆனால் இது பூமி மீது மோதினால் ஏற்படும் விளைவு அதி பயங்கரமாக இருக்கும். டைனோஸர் இனத்தையே மொத்தமாக அழித்த சிறுகோளின் குறுக்களவு 12 கிலோமீட்டர் தான். ஆனால் 3500 கிலோமீட்டர் குறுக்களவு கொண்ட சந்திரன், பூமி மீது மோதினால்......? நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது அல்லவா?
சூரிய மண்டலத்தின் வயது 460 கோடி வருடங்களாகும். இது உருவான ஒன்பதரை கோடி ஆண்டுகளுக்குப் பின்னர் சந்திரன் உருவாகி இருக்கக் கூடும் என்று சமீபத்திய ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சந்திரன் பற்றிய ஆய்வில் நாம் முன்னேறிக் கொண்டே தான் இருக்கிறோம். 1959ம் ஆண்டு சோவியத் யூனியனின் முதல் விண்கலம் சந்திரனில் மோதி சந்திரனைப் போட்டோ எடுத்து அனுப்பியது.
1969ல் அபல்லோ 11 சந்திரனில் இறங்கி அமெரிக்காவிற்குப் பெரும் புகழைத் தந்தது. விண்வெளி வீரர்கள் சந்திரனில் இறங்கி பரபரப்பை ஏற்படுத்தினர். மனிதன் சென்ற முதல் கிரகம் சந்திரன் என்று ஆனது. சந்திரனிலிருந்து இதுவரை 842 பவுண்ட் பாறை மற்றும் மணலை மனிதன் பூமிக்குக் கொண்டு வந்திருக்கிறான். இவற்றை ஆராய்ந்து பல புதிய உண்மைகள் தெரிய வந்துள்ளன.
இனி அடுத்து என்ன? அங்கே ஒரு காலனி அமைக்க வேண்டியது தான்/ எப்போது என்ற கேள்விக்குக் காலம் தான் பதில் சொல்லும்!