
மழை பெய்யும்போது வரும் இடி (Thunder) சத்தம் தான் பலருக்கும் அச்சத்தை வரவைக்கும். ஆனால், அதற்கு முன்வரும் மின்னலோ அதைவிட பயங்கரமானது. அதிலிருந்து தப்பிக்க என்னென்ன வழிகள் உள்ளன?
மின்னல் என்பது வானத்தில் எழும் ஒரு பிரகாசமான மின் ஒளி(Electric Light). இடி என்பது மின்னலைத் தொடர்ந்து வரும் உரத்த ஒலி. இடி உங்களுக்குத் தீங்கு விளைவிக்காது. ஆனால், மின்னல் ஆபத்தானது. மழையின் போது பெரும்பாலும் மின்னல் ஏற்படுகிறது. சில நேரங்களில் மேகங்களிலிருந்து தரைப் பகுதிகளுக்கும் வருகிறது. இதைத்தான் செய்திகளில் ‘மின்னல் தாக்குதல்’ என்று பார்க்கிறோம்.
எல்லா மின்னல்களும் தரைப் பகுதியைத் தாக்குவதில்லை. இதில் பெரும்பாலானவை மேகங்களுக்கு இடையிலேயே நகர்ந்து விடுகின்றன. சில நேரங்களில் அதிலிருந்து விடுபட்ட மின்னலின் ஒரு சிறிய பகுதி மட்டுமே தரையில் இறங்கி மரங்கள், கட்டடங்கள் அல்லது மனிதர்களைக்கூட தாக்குகின்றன.
எந்த மின்னல் ரொம்ப ஆபத்தானவை?
கனமழையின் போதுதான் மின்னல் எப்போதும் தாக்கும் என்று விதி இல்லை. மழை தொடங்குவதற்கு முன்போ, மழை பெய்யும்போது அல்லது மழை நின்ற பிறகும் கூட இது நிகழலாம்.
ஆபத்தை எவ்வாறு உணரலாம்?
மின்னல் தாக்குதல்களை நம்மால் சரியாக கணக்கிட முடியாது. ஆனால், சில எளிய அறிகுறிகள் அதன் ஆபத்தைக் கணிக்க உதவுகின்றன. உலக வானிலை நிபுணர்களின் கணிப்புப்படி, ‘நீங்கள் ஒரு மின்னலைப் பார்த்துவிட்டு 30 வினாடிகளுக்குள்ளேயே அதன் பலத்த இடி சத்தம் கேட்டால்; அது உங்கள் அருகில் உள்ள பகுதியைத் தாக்கியிருக்கலாம்' என்று அர்த்தமாம். அதன்பின் நீங்கள் உடனடியாக ஏதாவது ஒரு கட்டடங்களுக்குள் சென்று, குறைந்தது 30 நிமிடங்களாவது அடுத்தடுத்த மின்னல்கள் ஓயும்வரை உள்ளேயே இருக்க வேண்டுமாம். காரணம் 10 மைல் தொலைவில் இருந்து கூட ஒரு மின்னலால் தாக்க முடியுமாம்.
இவ்வாறு மின்னலுக்கும், இடிக்கும் இடையில் உள்ள வினாடிகளை எண்ணுவது அடுத்தது நம் இருப்பிடத்தைக்கூட தாக்கலாம் என்பதை தீர்மானிக்க உதவுகிறது. இதோடு வானிலை பயன்பாடுகள் (Apps) பெரும்பாலும் பல எச்சரிக்கைகளை வழங்குகின்றன. இதனால் மழையின்போது நாம் பாதுகாப்பாக இருப்பதைச் சற்று எளிதாக்குகிறது.
மனிதர்களுக்கு என விசேஷ கவசம் உள்ளதா? மின்னல் எங்கு தாக்கும் என்று நாம் எப்போதும் சொல்ல முடியாது. ஆனால், வானிலை நிபுணர்கள் மக்களை எச்சரிக்க சிறப்பு கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். அதற்கேற்ப சில இடங்களில் மக்கள் பாதுகாப்புக்கு உதவும் மின்னல் எச்சரிக்கை அமைப்புகள் உள்ளன.
மின்னலிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்க எந்த மந்திரக் கவசமும் இல்லை. அதனால் வீட்டிற்குள்ளோ அல்லது எதாவது கட்டிடத்திற்குள்ளோ சென்று சொல்லும் பாதுகாப்புகளைப் பின்பற்றுவது ஆபத்தைத் தவிர்க்க உதவும்.
எனவே, படங்களில் காண்பதுபோல் மழையில் விளையாடுவது சந்தோஷமாக தோன்றலாம். ஆனால், அதில் உருவாகும் மின்னல் சக்தி வாய்ந்தது. ஆக பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருப்பது அனைவருக்கும் நல்லது.