
உங்கள் வீட்டில் பழைய ஸ்மார்ட்போன் தூசி படிந்து கிடக்கிறதா? அதை வெறுமனே ஓரம் கட்டுவதற்குப் பதிலாக, ஒரு சக்திவாய்ந்த வீட்டுப் பாதுகாப்புக் கேமராவாக (Home Security Camera) மாற்றலாம் என்றால் நம்புவீர்களா? ஆம்! இது உங்கள் வீட்டின் பாதுகாப்பை அதிகரிக்க, மிகச் செலவு குறைந்த மற்றும் புத்திசாலித்தனமான ஒரு வழியாகும்.
பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படாத ஸ்மார்ட்போன்கள் இருக்கும். இந்த நவீன போன்களில் உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள், Wi-Fi மற்றும் சேமிப்பகம் (storage) போன்ற அனைத்தும் உள்ளன. இவை ஒரு சிறந்த பாதுகாப்புக் கேமரா அமைப்புக்கு தேவையான அத்தியாவசிய அம்சங்கள். புதிய பாதுகாப்புக் கருவிகளை வாங்குவதை விட, உங்கள் பழைய போனைப் பயன்படுத்துவது மிகமிகக் குறைவான செலவாகும்.
போனை எங்கே வைப்பது? (The Right Spot):
போனை அமைக்கும் முன், அது எந்த இடத்தில் வைக்கப்பட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தீர்மானியுங்கள்.
ஸ்மார்ட்போன்கள் எப்போதும் ஆன் செய்து வைத்திருப்பதற்காக வடிவமைக்கப்பட்டவை அல்ல. எனவே, நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடம் கண்டிப்பாக பவர் சாக்கெட் அருகில் இருக்க வேண்டும். தொடர்ந்து சார்ஜ் செய்வதன் மூலம், ரெக்கார்டிங்கின் நடுவே பேட்டரி காலியாவதைத் தடுக்கலாம்.
நேரலையில் பார்க்க (Live Streaming) அல்லது கிளவுட் ரெக்கார்டிங் செய்ய, உங்கள் பழைய போனுக்கு நம்பகமான இன்டர்நெட் இணைப்பு தேவை. போனை வைக்கும் இடத்தில் Wi-Fi சிக்னல் வலுவாக இருக்கிறதா என்று முதலில் சரிபார்க்கவும்.
ஸ்மார்ட்போனை கேமராவாக மாற்றும் செயலிகள்:
உங்கள் பழைய சாதனத்தை கண்காணிப்பு கருவியாக மாற்ற, அதற்கென வடிவமைக்கப்பட்ட ஒரு ஆப்-ஐ டவுன்லோட் செய்யுங்கள்.
Camy: இந்த செயலியை iOS/Android போன்களில் பதிவிறக்கிக் கொள்ள முடியும். இதில், லைவ் வியூ, இரண்டு வழி ஆடியோ, மோஷன் டிடெக்ஷன், கிளவுட் ரெக்கார்டிங் போன்ற அம்சங்கள் உள்ளன.
Alfred: இது Android பயனர்களுக்கானது. இந்த செயலியில் மோஷன் அலர்ட், கிளவுட் ஸ்டோரேஜ், நைட் விஷன் ஆதரவு போன்ற வசதிகள் உள்ளன.
இந்த செயலிகளை உங்கள் பழைய போன் மற்றும் நீங்கள் பார்க்கப் பயன்படுத்தும் புதிய போன் ஆகிய இரண்டிலும் இணைக்க வேண்டும். இவை ஸ்மார்ட்போன்களை 'நேரலை ஒளிபரப்பு மற்றும் அசைவைக் கண்டறியும்' கேமராக்களாக மாற்றுகின்றன.
முக்கிய குறிப்புகள்:
போன் நகராமல் இருப்பதும், சரியான கோணத்தை நோக்கி இருப்பதும் மிக முக்கியம். இதை உறுதி செய்ய ஒரு மினி ட்ரைபாட், போன் ஹோல்டர் அல்லது வால் மவுண்ட் போன்றவற்றை பயன்படுத்தவும்.
போன் எப்போதும் சார்ஜில் இருந்தாலும், தொடர்ந்து சார்ஜ் செய்வது பேட்டரியின் ஆயுளைக் குறைக்கலாம். பேட்டரி சேமிப்பு (Power-saving) அமைப்புகளைப் பயன்படுத்துங்கள். மேலும், வைஃபை மட்டும் வேலை செய்தால் போதும் என்பதால், ஏரோப்ளேன் மோடை (Airplane Mode) ஆன் செய்து பேட்டரி அழுத்தத்தைக் குறைக்கலாம்.
அவ்வளவுதான்! இப்போது உங்கள் பழைய போன் உங்கள் வீட்டின் ரியல்-டைம் கண்காணிப்பு அமைப்பாக மாறிவிட்டது. நீங்கள் வெளியூரில் இருந்தாலும், இணைக்கப்பட்ட ஆப் மூலம் உங்கள் வீட்டை எப்போது வேண்டுமானாலும் கண்காணிக்கலாம். மிக்க குறைந்த செலவில் பாதுகாப்பை மேம்படுத்த இது ஒரு சூப்பர் ஸ்மார்ட் வழியல்லவா?