
இறைவன் படைப்பில் விண்வெளி அற்புதமான ஒன்று ஆகும். அதிலும் பூமியின் இயற்கை துணைக் கோளாக அமைந்திருக்கும் நிலவு செய்யும் அற்புத நிகழ்வுகள் பல.
பூமியிலிருந்து சுமார் 3.84 லட்சம் கி.மீ தூரத்தில் உள்ளது நிலவு. இது பிரபஞ்சத்தில் செய்யும் பணிகள் ஏராளம். கடலில் அலைகள் உருவாவதற்கும், பூமியில் கோடை, குளிர் ஆகிய பருவ காலங்கள் உருவாவதற்கும் நிலவே காரணமாக அமைகின்றது.
பூமி தனது அச்சிலிருந்து சாய்ந்து இருப்பதால்தான் பருவங்கள் ஏற்படுகின்றன. இப்படி பூமியை சாய்த்து வைத்திருப்பதுவும் நிலவுதான். பூமியின் சுழற்சி வேகத்தையும் நிலவுதான் கட்டுப்படுத்துகிறது.
நிலவின் ஈர்ப்பு விசை, பூமியின் சுழற்சி வேகத்தை மெதுவாக்குகிறது. நிலவு இல்லையென்றால், ஒரு நாள் வெறும் 6 முதல் 12 மணி நேரமாக இருந்திருக்கலாம். இதனால், ஒரு வருடத்தில் ஆயிரக்கணக்கான நாட்கள் இருந்திருக்கும். நிலவு வெளிச்சம் மற்றும் அதன் சுழற்சியை வைத்துதான் பல கடல் வாழ் உயிர்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. மனிதர்களே நிலவை வைத்துதான் முதன் முதலில் நாட்களை கணக்கெடுக்க தொடங்கினார்கள். நாம் முதலில் உருவாக்கிய காலண்டர் நிலவை அடிப்படையாகக் கொண்டுதான் அமைக்கப்பட்டது. எனவே, நிலவு நமக்கு முக்கியம்.
நிலாவைப்பற்றி மேலும் ஒரு சுவாரஸ்யமானத் தகவல் ஒன்று உங்களுக்கு! சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போதுசந்திரகிரகணம் ஏற்படுகிறது. சந்திரன் பூமியின் நிழலுக்குள் செல்லும்போது சந்திரகிரகணம் ஏற்படுகிறது, இதனால் சந்திரன் இருளடைகிறது.
இந்நிலையில் 2025, செப்டம்பர் 7ஆம் தேதி ((ஞாயிற்றுக்கிழமை) அன்று,1.3638 என்ற குடை அளவுடன் சந்திரனின் சுற்றுப்பாதையின் ஏறுமுனையில் முழு சந்திரகிரகணம் நிகழும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பூமி, சூரிய ஒளியை சந்திரன் மேல்விழாமல் தடுப்பதால் சந்திரன் சிவப்பு நிறத்தில் அன்று காட்சி அளிக்கும் எனவும் இது இரத்த நிலவு என அழைக்கப்படும் என்று அறிவியலறிஞர்கள் கூறுகின்றனர்.
இதை சென்னையில் நம்மால் வெறும் கண்களால் பார்க்க முடியும். செப்டம்பர் 7ம்தேதி இரவு 8.58 மணிக்கு தொடங்கும் இந்த சந்திர கிரகணம் 8ம் தேதி அதிகாலை 2.25மணி வரை நீடிக்கும்.
இந்த முழு சந்திர கிரகணத்தை எந்த வித தொலை நோக்கியோ, உருபெருக்கு கருவியோ இன்றி வெறும் கண்களாலேயே நாம் பார்க்க முடியும் என்பதுதான் கூடுதல் சிறப்பு. பூமியின் லேசான நிழலுக்குள் சந்திரன் நுழையும் கட்டத்தை பெனும்பிரல் என அழைக்கின்றனர்.
BLOODMOON எனப்படும் இந்த இரத்த நிலா சந்திர கிரகணம் பூமியின் மைய இருண்டபகுதியான அம்ப்ரா சந்திரனை மறைக்கத் தொடங்கி முழுமை அடையும் போது சந்திரன் சிவப்பு நிறத்தில் ஒளிரத்தொடங்கும். இரவு 11.41 மணிக்கு முழுமையான சந்திர கிரகணம் நிகழும். அந்த வகையில் இரவு 9.57 மணி முதல் நள்ளிரவு 12.22 மணி வரை, ஐரோப்பா,ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அலாஸ்கா, தென் அமெரிக்காவின் கிழக்கு பகுதி மற்றும் உலகின் பெருங்கடல்கள் மற்றும் துருவப் பகுதிகள் முழுவதும் இந்நிகழ்வு தெரியும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக சென்னையில் உள்ளவர்கள் கிழக்கு நோக்கி வானத்தை பார்த்தாலே இந்த சந்திர கிரகணத்தை அவர்களால் பார்க்க முடியும் என்பது மகிழ்ச்சியான செய்திதானே?