
2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டத்தின் (BNCAP) கீழ், இந்தியாவில் 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்ற முதல் செடான் கார் என்ற பெருமையை தங்கள் டிசையர் கார் பெற்றுள்ளதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.
மாருதி சுசூகி நிறுவனத்தின் டிசையர் கார், பாரத் கார் மதிப்பீட்டு திட்டத்தில் சோதனை செய்யப்பட்டு, 5 ஸ்டார் ரேட்டிங் கவுரவத்தை பெற்றுள்ளது. பாரத் புதிய கார் மதிப்பீட்டு சோதனையில் முதன்முதலாக பரிசோதிக்கப்படும் கார் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியவர்களுக்கான பாதுகாப்பு சோதனையில் 29.46 புள்ளிகளும், சிறுவர்களுக்கான பாதுகாப்பு சோதனையில் 41.57 புள்ளிகளும் பெற்றிருக்கிறது. இதன் மூலம் டிசையர் வேரியண்டில் உள்ள அனைத்து கார்களுக்கும் 5 நட்சத்திர மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதுபோல மாருதி பலோனோ கார், பாரத் புதிய கார் மதிப்பீட்டுச் சோதனையில் 4 ஸ்டார்களை பெற்றுள்ளது.
BNCAP உலகளவில் தரப்படுத்தப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றுகிறது மற்றும் இந்தியாவில் கார் வாங்குபவர்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவரை BNCAP விபத்து பாதுகாப்பு மதிப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குறைந்தது 16 விளையாட்டு பயன்பாட்டு வாகனங்களை (SUVகள்) சோதனை செய்துள்ளது.
இதற்கான சான்றிதழை வழங்கிய பின்னர் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, பிரதான கார்கள் BNCAPன் கீழ் முன்மாதிரியான பாதுகாப்பு மதிப்பீட்டு சோதனைகள் மேற்கொள்வதை பார்க்கும் போது பெருமையடைவதாக கூறினார். புதிய டிசையர் மதிப்பீட்டுச் சோதனையில் 5 ஸ்டார்களை பெற்றதற்காக மாருதி சுசுகியை வாழ்த்தினார். மேலும், மாருதி சுசுகி தனது அனைத்து மாடல்களிலும் ஆறு ஏர்பேக்குகள் பொருத்தும் நடவடிக்கையை பாராட்டிய கட்கரி, இது வாகன பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றம்’ என்றும் கூறினார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து கார்களிலும் ஆறு ஏர்பேக்குகளை பொருத்த திட்டமிட்டுள்ளதாக மாருதி சுசுகியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹிசாஷி டகேயுச்சி கூறினார். தற்போது, ஆல்டோ கே10, ஸ்விஃப்ட், பிரெஸ்ஸா மற்றும் கிராண்ட் விட்டாரா உள்ளிட்ட 10 மாடல் கார்களில் ஏற்கனவே ஆறு ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.