

மனிதர்களின் மகத்தான கண்டுபிடிப்புகளில் நெருப்பும் ஒன்று. இரண்டு கற்கள் ஒன்றோடு ஒன்று உரசும் பொழுது உண்டாகும் உராய்வினால் வெப்ப ஆற்றல் உருவாகி நெருப்பு உண்டாகிறது என்பதை நம் ஆதி மனிதர்கள் கண்டுபிடித்தனர். இதே அடிப்படையில்தான் தீக்குச்சிகளும் தயாரிக்கப்பட்டன.
ஆரம்பத்தில் சொரசொரப்பான இடத்தில் தீக்குச்சியை தேய்த்தாலே தீப்பற்றும் விதத்தில் தயாரிக்கப்பட்டது. அது அவ்வளவு பாதுகாப்பானதாக இல்லை என்பதால் தீக்குச்சியை தீப்பெட்டியில் உரசும்போது நெருப்பு உண்டாகும்படி உருவாக்கப்பட்டது.
தீப்பெட்டியின் பக்கவாட்டில் சொரசொரப்பான பட்டை இருப்பதற்கும், தீக்குச்சி எரிவதற்கும் பின்னால் ஒரு சுவாரஸ்யமான வேதியியல் ரகசியம் உள்ளது. தீப்பெட்டியின் பக்கவாட்டில் இருக்கும் சொரசொரப்பான பட்டை, தீக்குச்சியை உரசியவுடன் எளிதாக நெருப்பைப் பற்ற வைக்கும் ஒரு வேதியியல் வினையூக்கியாக செயல்படுகிறது.
தீப்பெட்டி ரகசியம்:
தீக்குச்சி எரியும் ரகசியம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அறிவியல் காரணங்கள்:
தீப்பெட்டியின் பட்டை:
இதில் சிவப்பு பாஸ்பரஸ் (Red Phosphorus) மற்றும் கண்ணாடித் துகள்கள் கலந்திருக்கும். இந்த கண்ணாடித் துகள்கள் தான் அந்தப் பட்டையை சொரசொரப்பாக மாற்றுகிறது.
தீக்குச்சியின் தலைப்பகுதி:
இதில் பொட்டாசியம் குளோரேட் (Potassium Chlorate) மற்றும் கந்தகம் (Sulphur) போன்ற எளிதில் எரியக்கூடிய வேதிப்பொருட்கள் இருக்கும்.
பற்றும் ரகசியம்:
உராய்வு மற்றும் வெப்பம்:
தீக்குச்சியை அந்த சொரசொரப்பான பட்டையின் மீது வேகமாகத் தேய்க்கும் பொழுது உராய்வு காரணமாக அந்த இடத்தில் வெப்பம் (friction) உருவாகிறது.
பாஸ்பரஸ் மாற்றம்:
இந்த வெப்பத்தால் பட்டையில் உள்ள ஒரு சிறிய அளவிலான சிவப்பு பாஸ்பரஸ் உடனடியாக வெள்ளை பாஸ்பரஸாக மாறுகிறது. வெள்ளை பாஸ்பரஸ் காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் சேர்ந்து தானாகவே தீப்பற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது.
தீப்பொறி உருவாக்கம்:
இந்த சிறிய தீப்பொறி, தீக்குச்சியின் தலையில் உள்ள பொட்டாசியம் குளோரேட்டை சிதைத்து ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. இந்த ஆக்சிஜன் குச்சியில் உள்ள மருந்துப் பொருள் தொடர்ந்து எரிவதற்குத் தேவையான ஆற்றலை அளித்து தீக்குச்சியை முழுமையாக எரிய வைக்கிறது.
குச்சி எரிதல்:
இந்த ஆக்சிஜன் மற்றும் வெப்பத்தின் உதவியுடன் தீக்குச்சியில் உள்ள மருந்து எரிந்து, தீக்குச்சி முழுமையாக பிரகாசமாக எரிகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் தீப்பெட்டியின் பக்கவாட்டு பட்டை இல்லை என்றால் தீக்குச்சியைப் பற்ற வைக்கத் தேவையான உராய்வும், பாஸ்பரஸ் வேதிவினையும் நடக்காது. உராய்வு, சிவப்பு பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் குளோரேட் ஆகியவற்றின் கூட்டு வினையால்தான் தீக்குச்சி எரிகிறது.
தீக்குச்சியை தீப்பெட்டியின் பக்கவாட்டில் உரசினால் மட்டுமே எரியுமே தவிர, சாதாரண சுவர்கள் அல்லது தரைகளில் உரசினால் எரியாது. இதுவே விபத்துகளைத் தவிர்க்கும் பாதுகாப்பான தொழில்நுட்பம் ஆகும்.
தீப்பெட்டி பற்றிய சுவாரசியமான உண்மைகள்:
நாம் இன்று பயன்படுத்தும் தீக்குச்சிகள் 'பாதுகாப்பு தீக்குச்சிகள்' ஆகும். இவற்றைப் பெட்டியின் பக்கவாட்டில் தேய்த்தால் மட்டுமே எரியும். வேறு எங்கும் தேய்த்தால் எரியாது. இது 1844ல் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முன்பு இருந்த தீக்குச்சிகளை சொரசொரப்பான எந்த இடத்திலும் (பூட்ஸ், கல், சுவர்) தேய்த்து பற்ற வைக்க முடியும். இதில் தீக்குச்சியின் முனையிலேயே பாஸ்பரஸ் இருக்கும்.
இதனால் தொழிற்சாலையில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு "பாஸ்பரஸ் தாடை" (Phossy Jaw) என்ற எலும்பு அழுகும் நோய் ஏற்பட்டது. இதனால் அது தடை செய்யப்பட்டு, பாதுகாப்பான சிவப்பு பாஸ்பரஸ் பெட்டியின் பக்கவாட்டில் மாற்றப்பட்டது. இது ஆபத்தானது என்பதால் இப்பொழுது பயன் படுத்துவதில்லை.
தீக்குச்சிகள் பொதுவாக ஆஸ்பென் (Aspen) அல்லது பைன் (Pine) மரத்திலிருந்து செய்யப்படுகின்றன. இம்மரங்கள் மென்மையானவை மற்றும் எளிதில் தீப்பிடிக்கக் கூடியவை.
நாணயங்கள், அஞ்சல் தலைகளை சேகரிப்பதுபோல தீக்குச்சிப் பெட்டிகள் அல்லது அதன் லேபிள்களை சேகரிக்கும் பழக்கத்திற்கு பிலிமேனி (Phillumeny) என்று பெயர். உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இதை பொழுதுபோக்காக கொண்டுள்ளனர்.