இன்றைய நவீன உலகில், ஒவ்வொரு வீட்டிலும் உபயோகப்படுத்தாத, பழைய தொழில்நுட்ப சாதனங்கள் நிறைந்த ஒரு பெட்டியோ அல்லது அலமாரியோ இருப்பது சாதாரணம். அதில், காலாவதியான போன்கள், பழுதடைந்த கேபிள்கள், மற்றும் பிற எலக்ட்ரானிக் பொருட்கள் குவிந்து கிடைக்கலாம். ஆனால், அந்த பழைய போன்களும், மைக்ரோ USB கேபிள்களும் கூட, தங்கம் உட்பட சில மதிப்புமிக்க உலோகங்கள் மற்றும் தாதுக்களைக் கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்களா? ஆராய்ச்சியாளர்களின் மதிப்பீட்டின்படி, ஒரு கிலோ எலக்ட்ரானிக் சர்க்யூட் போர்டில், சுமார் 200 முதல் 900 மில்லி கிராம் வரை தங்கம் இருக்கலாம்.
பொதுவாக, இந்த பழைய எலக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து மதிப்புமிக்க உலோகங்களை பிரித்தெடுப்பது மிகவும் கடினமான செயல்முறையாகும். இதற்கு முன்னர், சயனைடு மற்றும் மெர்குரி போன்ற மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த இரசாயனங்கள், பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபடுபவர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் தீங்கு விளைவிப்பவை.
ஆனால், ஆஸ்திரேலியாவில் உள்ள ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், தற்போது இந்த தங்கத்தை பிரித்தெடுப்பதற்கான ஒரு புதிய, பாதுகாப்பான முறையை உருவாக்கியுள்ளனர்.
சாதாரணமாக, நீர் சுத்திகரிப்பில் பயன்படுத்தப்படும் டிரை குளோரோஐசோசயனூரிக் அமிலம் (Tri-Chloroisocyanuric acid) என்ற ஒரு நிலையான கலவையைப் பயன்படுத்தி, நச்சுத்தன்மை இல்லாத ஒரு புதிய கரைப்பானை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்தக் கரைப்பான், அபாயகரமான இரசாயனங்களின் தேவை இல்லாமல், தங்கத்தை கரைத்து, பிரித்தெடுக்க உதவுகிறது. இந்த புதிய முறை, ஈ-கழிவுகளிலிருந்து மட்டுமன்றி, தாதுக்களிலிருந்தும் தங்கத்தை பிரித்தெடுக்க உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எலக்ட்ரானிக் சாதனங்களில் தங்கம் ஏன் பயன்படுத்தப்படுகிறது?
தங்கம், அதன் இயற்கையான மின் கடத்தும் திறன், நீடித்த தன்மை, மற்றும் அரிப்பு எதிர்ப்பு சக்தி போன்ற காரணங்களுக்காக, எலக்ட்ரானிக் பொருள்களில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
உலக ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி, 2022 ஆம் ஆண்டில், உலகில் சுமார் 62 மில்லியன் டன் ஈ-கழிவுகள் (e-waste) உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது 2010 ஆம் ஆண்டை விட 82% அதிகம். இந்த ஈ-கழிவுகளில் இருந்து தங்கத்தை பிரித்தெடுக்கும் போது, நச்சுத்தன்மை கொண்ட இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால், சுற்று சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த புதிய முறை, ஈ-கழிவுகளை மறுசுழற்சி செய்வதில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, உங்கள் பழைய போன்கள் மற்றும் கேஜெட்களை தூக்கி எறிவதற்கு முன், அவை ஒரு தங்கச் சுரங்கம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த புதிய தொழில்நுட்பம் பெரிய அளவில் வர்த்தக ரீதியாக பயன்பாட்டிற்கு வரும் வரை, நீங்கள் உங்கள் பழைய எலக்ட்ரானிக் பொருட்களை உள்ளூர் ஈ-கழிவு மறுசுழற்சி மையங்களில் அல்லது தொண்டு நிறுவனங்களில் ஒப்படைக்கலாம். இது சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நமது வருங்கால சந்ததியினருக்கு ஒரு பசுமையான பூமியை விட்டுச் செல்லவும் உதவும்.