காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் நவீன தொழில்நுட்பங்கள் பல உள்ளன. அவற்றில் வளிமண்டல நீர் ஜெனரேட்டர்கள், மூடு பனி சேகரிப்பு, சூரிய சக்தி அமைப்பு, சவ்வுகளின் பயன்பாடு என பல உள்ளன.
வளிமண்டல நீர் ஜெனரேட்டர்கள்(AWG):
காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் நவீன தொழில்நுட்பம் Atmospheric Water Generators - AWGs என்று அழைக்கப்படுகிறது. காற்றை குளிர்வித்து அதில் உள்ள நீராவியை நீராக ஒடுக்கம் (condense) செய்ய இந்த ஜெனரேட்டர்கள் செயல்படுகின்றன. அதிக வெப்பநிலையிலும், குறைந்த ஈரப்பதத்திலும் செயல்படும் வகையிலான ஜெனரேட்டர்களும் உள்ளன. குறிப்பாக பாலைவனப் பகுதிகளில் இவை பயனுள்ளதாக இருக்கிறது.
வளிமண்டல நீர் ஜெனரேட்டர்கள் செயல்படும் விதம்:
இந்த அமைப்புகள் குளிர்விப்பு மற்றும் ஒடுக்கம் என்னும் இயற்பியல் கொள்கையின் அடிப்படையில் செயல்படுகின்றன. இந்த இயந்திரங்கள் காற்றை உள்ளிழுத்து, குளிர்விப்பான் சுருள்கள்(evaporator coils) வழியாக செலுத்துகின்றன.
காற்றின் வெப்பநிலை பனி நிலைக்கு கீழே குறையும் பொழுது, காற்றில் உள்ள நீர் ஆவியானது குளிர்ந்து திரவ நீராக ஒடுக்கம் அடைகிறது. இது ஏர் கண்டிஷனர் செயல்படும் அதே கொள்கையைப் போன்றது. அப்படி சேகரிக்கப்பட்ட நீர் பின்னர் பல வடிகட்டுதல் நிலைகள்(filtration stages) மற்றும் சுத்திகரிப்பு செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு, குடிக்கக்கூடிய பாதுகாப்பான நீராக மாற்றப்படுகிறது.
இதன் நன்மைகள்:
குடிநீர் கிடைப்பது கடினமான வறண்ட பகுதிகள் மற்றும் பாலைவனப் பகுதிகளிலும் இந்த தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் நீர் எப்போதும் வளிமண்டலக் காற்றில் ஈரப்பதம் வடிவில் இருக்கும்.
இந்த செயல்முறை காற்றிலிருந்து நேரடியாக நீரை உருவாக்குவதால், அதில் கன உலோகங்கள் அல்லது பூச்சிக்கொல்லி எச்சங்கள் போன்ற நிலத்தடி நீர் மாசுபாடுகள் இருக்காது. இதனால் கிடைக்கும் நீர் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்.
சுத்தமான குடிநீருக்கான நிலையான ஆதாரத்தை உருவாக்குவதன் மூலம் AWG அமைப்புகள் வாட்டர் பாட்டில்களை கொண்டு செல்வதற்கான தேவையைக் குறைத்து, சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க உதவுகிறது.
சிறிய அளவிலான வீட்டு உபயோக சாதனங்கள் முதல், அதிக தண்ணீர் தேவைப்படும் அகதிகள் முகாம்கள் போன்ற சமூகங்களுக்கு நீரை வழங்கும் பெரிய வணிக ரீதியான அலகுகள் வரை பல்வேறு அளவுகளில் இந்த தொழில்நுட்பம் கிடைக்கிறது. குறிப்பாக சுத்தமான தண்ணீருக்கான அணுகல் குறைவாக உள்ள பகுதிகளில் குடிநீர் பாதுகாப்பிற்கு ஒரு முக்கிய தீர்வாக உருவெடுத்துள்ளது.
மூடுபனி சேகரிப்பாளர்கள்(Fog harvesters):
இது மழைப்பொழிவு இல்லாத பகுதிகளில் மூடுபனியில் இருந்து தண்ணீரை சேகரிக்கும் ஒரு பண்டைய நுட்பமாகும். ஆனால் நவீன வடிவங்களில் இதுவும் ஒரு பகுதியாக உள்ளது. காற்றில் உள்ள மெல்லிய மூடுபனியைப் பிடித்து தண்ணீராக சேகரிக்கும் வலை போன்ற அமைப்புகள். இது குடிநீர் மற்றும் நீர்ப்பாசனம் போன்ற பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
சவ்வுகளின் பயன்பாடு (Membrane technology):
காற்றில் உள்ள நீராவியை மட்டுமே கடத்தும் சிறப்பு ஜவ்வுகளைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம் தண்ணீரை பிரித்தெடுக்கிறது.
சூரிய சக்தி அமைப்புகள்:
காற்றில் இருந்து தண்ணீரை எடுக்க சூரிய சக்தியை பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.