

இடி மின்னலின் பொழுது வளிமண்டலத்தில் ஏற்படும் வலிமையான மின்புலம் (Electric Field) காரணமாக மரங்களின் உச்சி இலைகளில் கரோனா டிஸ்சார்ஜ் (Corona Discharge) எனப்படும் நீல நிற ஒளியை உமிழும் நிகழ்வு நடைபெறும். இது விஞ்ஞானிகளால் அதிவேக கேமரா மூலம் முதன்முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மரங்களுக்கு சேதம் விளைவிக்காத, குளிரூட்டப்பட்ட மின்சாரமாகும்.
இந்த மின்னல் ஒளி, ஆயிரக்கணக்கான மின்னும் மின்மினிப் பூச்சிகள் மரத்தின் உச்சியில் அமர்ந்தது போன்ற காட்சியை உருவாக்குகிறது. இந்த வகை மின்சாரம் வலிமை குறைவாகவும், பரவல் குறைவாகவும் உள்ளது. அது பைன் ஊசிகள் மற்றும் இலை நுனிகள் போன்ற மரத்தின் (ஊசியிலை மரம்) கூர்மையான முனைகளில் குவிந்து, மரங்கள் மங்கலான ஒளியை உமிழச் செய்கின்றன. இந்த மின்சாரத்தால் மரத்திற்கு எந்தவிதமான சேதமும் ஏற்படாது.
இடியுடன் கூடிய மழையின் பொழுது, மரங்களின் கூர்மையான இலைகளின் நுனிகளில் மின்சாரம் குவிந்து, காற்றை அயனியாக்கம் (lonize) செய்து நீல நிற ஒளியை உருவாக்குகிறது. இது மின்னலை விட வெப்பம் குறைந்த, அதேசமயம் தீங்கு விளைவிக்காத நிகழ்வாகும். இந்த மின்சாரம் வேர்ப்பகுதி வரை செல்லாமல் இலைகளின் உச்சியில் மட்டுமே தங்கி ஒளிர்கிறது. இது மின்னல் தாக்குதலைப்போல மரத்தை எரிப்பதோ அல்லது சேதப்படுத்துவதோ இல்லை.
அமெரிக்காவில் உள்ள பென் ஸ்டேட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், புளு ரிட்ஜ் மலைகளில் உள்ள மரங்களில் இந்த அதிசய ஒளி நிகழ்வை படம் பிடித்துள்ளனர். இந்த ஒளி மிகவும் மங்கலானது என்பதால் சாதாரண மனிதக் கண்களுக்கு தெரிவது கடினம். புற ஊதா கதிர்களைக் கண்டறியும் சிறப்பு கேமராக்கள் மூலம் இதை படம் பிடித்துள்ளனர். இந்த ஒளி வெறும் கண்ணுக்குத் தெரியாது. ஆனால் யூவி கேமராக்கள் மூலம் இதைப் பதிவு செய்ய முடியும். இந்த மின்னல் ஒளி வினாடிக்கு சில முறை இலைகளிலிருந்து இலைகளுக்குத் தாவி, ஒரு அற்புதமான ஒளிக்காட்சியை (light show) உருவாக்குகிறது.
இந்த அதிசய நிகழ்வு, காடுகள் பூமியின் மின் சமநிலையைப் பராமரிப்பதிலும், பசுமை இல்ல வாயுக்களின் (greenhouse gases) அளவைக் கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்காற்றுகின்றன என்பதை உணர்த்துகிறது. மாலுமிகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக கப்பல் பாய்மரங்களில் இதேபோன்ற ஒளியை கவனித்து வருகின்றனர். தற்போது இது காடுகளிலும் பரவலாக நடப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. பென் ஸ்டேட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி, மரங்களின் முனைகளில் ஏற்படும் மின்னிறக்கங்களால் உருவாகும் மின்சாரம், அதிக அளவில் தனி ஹைட்ராக்சிலையும் உருவாக்குகிறது.
ஹைட்ராக்சில் நமது வளிமண்டலத்தின் முதன்மையான தூய்மைப்படுத்தும் காரணியாக செயல்படுகிறது. மேலும் ஹைட்ராக்சில் மூலக்கூறுகள் அதிக வினைத்திறன் கொண்டவை. இவை மீத்தேன் போன்ற பல மாசுபடுத்திகளையும், பசுமை இல்ல வாயுக்களையும் சிதைக்க பயன்படுகின்றன. இல்லையெனில் இவை புவி வெப்பமயமாதலுக்கு காரணமாக அமைந்துவிடும்.