

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது என்பது எப்போதுமே ஒரு த்ரில்லான விஷயம் தான். ஆனால் அங்கு நடக்கும் சில விஷயங்கள் சில நேரங்களில் விஞ்ஞானிகளுக்கே பெரிய ஷாக்கைக் கொடுத்துவிடும். அப்படி ஒரு சம்பவம்தான் இப்போது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் நடந்துள்ளது. கடந்த 60 வருட மனித விண்வெளிப் பயண வரலாற்றில் இதுவரை கேள்விப்படாத ஒரு அதிரடியான முடிவை நாசா தற்போது எடுத்துள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்ற மூத்த வீரர் ஒருவருக்கு நடந்த விபரீதமும், அதன் காரணமாக அவர் அவசரமாகப் பூமிக்குத் திருப்பிக் கொண்டுவரப்பட்ட சம்பவமும் ஒட்டுமொத்த உலகையும் அதிர வைத்துள்ளது.
அந்த திகிலான 20 நிமிடங்கள்!
நாசாவின் க்ரூ-11 (Crew-11) மிஷனுக்காக விண்வெளி நிலையத்திற்குச் சென்றவர் தான் மைக்கேல் ஃபின்கே (Michael Fincke). மிகவும் அனுபவம் வாய்ந்த இந்த விண்வெளி வீரருக்கு கடந்த ஜனவரி மாதம் ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு நாள் இரவு சக வீரர்களோடு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, திடீரென அவருக்குப் பேச்சு வரவில்லை.
அவருக்கு உடம்பில் எந்த ஒரு வலியும் இல்லை என்றாலும், சுமார் இருபது நிமிடங்கள் அவரால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. அவர் மிகவும் சிரமப்படுவதைப் பார்த்த மற்ற வீரர்கள் உடனடியாகப் பூமியில் உள்ள மருத்துவக் குழுவுக்குத் தகவல் கொடுத்தனர். இதனால் அவர் செய்யவிருந்த Spacewalk உடனடியாக நிறுத்தப்பட்டது.
நாசாவின் அவசர முடிவு!
சாதாரணமாக ஒருவருக்கு திடீரெனப் பேச்சு வரவில்லை என்றால் அது பக்கவாதம் அல்லது ஏதோ ஒரு பெரிய நரம்பியல் பிரச்சனைக்கான அறிகுறியாகத் தான் பார்க்கப்படும். விண்வெளி மையத்தில் MRI அல்லது CT scan போன்ற எந்த ஒரு அட்வான்ஸ்டு மெஷின்களும் கிடையாது.
அதனால் மைக்கேலுக்கு ஏதேனும் பெரிய ஆபத்து வருவதற்கு முன்பே அவரை உடனே காப்பாற்ற நாசா ஒரு பெரிய முடிவை எடுத்தது. Controlled Medical Evacuation என்ற விதியின் கீழ், அவரது மிஷன் முடிவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே டிராகன் விண்கலம் மூலமாக அவரைப் பத்திரமாகப் பூமிக்குக் கொண்டு வந்துவிட்டனர்.
திட்டங்களில் மாற்றம்!
இந்த ஒரு சம்பவம் நாசாவின் எதிர்காலத் திட்டங்களையே ஒரு நிமிடம் மாற்றி யோசிக்க வைத்துள்ளது. நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பத் தயாராகி வரும் இந்த நேரத்தில், பல மாதங்கள் பூமியை விட்டுத் தள்ளி இருக்கும்போது இப்படி ஒரு எமர்ஜென்சி வந்தால் என்ன செய்வது என்ற பயம் அனைவருக்கும் வந்துவிட்டது.
இதனால் இனிமேல் ஸ்பேஸ் ஸ்டேஷனிலேயே மூளை ஸ்கேன் செய்யும் கருவிகள் மற்றும் அதிநவீன மருத்துவ உபகரணங்களை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல், இதற்கு முன்பு விண்வெளிக்குச் சென்ற வீரர்களுக்கும் இப்படி ஏதாவது நடந்துள்ளதா என பழைய ரெக்கார்டுகளை எல்லாம் இப்போது தீவிரமாகத் தோண்டி எடுத்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
விண்வெளி என்றாலே அது ஒரு மர்மங்கள் நிறைந்த இடம் தான். அங்குள்ள ஜீரோ கிராவிட்டி சூழல் மனித உடலை எப்படியெல்லாம் மாற்றும் என்பது இன்னும் முழுமையாக யாருக்கும் தெரியாது. எவ்வளவு தான் கடுமையாக பயிற்சி எடுத்துக்கொண்டு போனாலும், விண்வெளியின் தாக்கத்தில் இருந்து யாராலும் தப்பிக்க முடியாது என்பதை மைக்கேல் ஃபின்கேவின் இந்த சம்பவம் உலகிற்கு அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.
இந்த புதிய சவால்களை எல்லாம் நாசா எப்படி சமாளித்துத் தங்களது அடுத்தகட்ட பயணத்தைத் தொடரப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.