

அமெரிக்கா விண்வெளியில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளத் தயாராகி விட்டது. இதன் விளைவை அதன் செயல் திட்டங்களில் நன்கு பார்க்க முடிகிறது.
2025ம் ஆண்டு அதிரடிச் செயலாக தனது க்ரூப் 24 என்ற தனது இருபத்தி நான்காம் குழுவை அது தேர்ந்தெடுத்துள்ளது.
விண்வெளி வீரர்களாக விரும்பி 8000 விண்ணப்பங்கள் நாஸாவிற்கு வந்தன. அதில் பத்து பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இதில் அதிசயமாக ஆறு பேர் பெண்கள்; நால்வர் ஆண்கள்!
இதில் முன்பு விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுத்தது போலவே இந்த பத்து பேரில் சிலர் பைலட்டுகள்; சிலர் டாக்டர்கள். சிலர் பொறியியல் வல்லுநர்கள்!
இதில் அன்னா மேனன் என்பவர் ஸ்பேஸ் எக்ஸில் எஞ்சினியராகப் பணி புரிந்திருக்கிறார்; விண்வெளியில் ஒரு வருடத்திற்கு முன்னால் பறந்தும் இருக்கிறார். இந்த பத்து பேரும் அமெரிக்காவை ஒரு புது விண்வெளி சகாப்தத்திற்கு இட்டுச் செல்லப் போகிறார்கள். இவர்களுக்கு இரண்டு வருட கடும் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
2027ம் ஆண்டு இவர்களின் பயிற்சி முடிவு பெறும். முதல் தடவையாக இவர்களில் யாரும் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் பயிற்சி பெறப் போவதில்லை.
2021ம் ஆண்டு பயிற்சியை முடித்தவர்களில் பலருமே இன்னும் விண்வெளிக்குச் சென்றபாடில்லை. இவர்கள் அனைவரும் நம்பிக்கை வைத்திருப்பது ஆர்டெமிஸ் (ARTEMIS) மீது தான்.
ஆர்டெமிஸ் 3 (Aartemis 3) என்பது அமெரிக்காவால் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும். இதனுடைய லட்சியம் சந்திரனில் தென் துருவத்தில் விண்வெளி வீரர்களை இறக்குவது தான். முப்பது நாட்கள் பயணத் திட்டத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் பறப்பார்கள். இருவர் சந்திரனில் இறங்குவர். இருவர் கலத்திலேயே இருப்பார்கள். ஒரு வாரம் சந்திரனில் வீரர்கள் தங்குவர். நான்கு விண்வெளி நடைப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னால் 2026 பிப்ரவரி 5ம் தேதி ஆர்டெமிஸ் 2 விண்வெளியில் (NASA Artemis Mission 2026) ஏவ வேண்டும்.
ஆர்டெமிஸ் 2ல் பறக்க இருக்கும் விண்வெளிவீரர்களுக்கான சில சிக்கலான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இப்போது நாஸா முனைந்திருக்கிறது. இவர்களை ஏந்திச் செல்லும் கலமான ஓரியன் பற்றியும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து சந்திரனின் சுற்றுப்பாதைக்கு விண்வெளி வீரர்களை இட்டுச் செல்லும்.
ஓரியன் என்பது நவீன வடிவமைப்புகளைக் கொண்ட கலமாகும். இது வரை 12 அமெரிக்க விண்வெளி வீரர்கள் சந்திரனில் இறங்கியுள்ளனர். நீல் ஆர்ம்ஸ்ட்ராங் 1969 ஜூலை 21ம் தேதி முதன் முதலாக சந்திரனில் கால் பதித்து சாதனை படைத்தார்.
கடைசியாக ஹாரிஸன் ஷ்மிட் 1972 டிசம்பர் 11 முதல் 14ம் தேதி முடிய சந்திரனில் இருந்து சாதனை படைத்தார். 53 வருடங்கள் ஓடி விட்டன.
உலகமே ஆவலுடன் எதிர்பார்ப்பது அடுத்து சந்திரனில் மனிதன் எப்போது காலடியைப் பதிப்பான் என்பதைத் தான்! இதற்கு பதில் வரும் ஆண்டுகளில் கிடைத்து விடும்.வாழ்த்துவோம் சாதனை படைக்க இருக்கும் வீரர்களை!