

நாசா எதை செய்தாலும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகத்தான் செய்வார்கள். அந்த வரிசையில் நீண்ட காலமாகவே நாசா ஒரு சீக்கிரட் ப்ராஜெக்ட்டில் வேலை செய்து வருகிறது என்ற தகவல் வெளியானது. தற்போது அந்த ப்ராஜெக்ட் ஒரு மனித வடிவிலான ஹியூமனாய்டு ரோபோ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மனித உயிர்களின் சேதமின்றி விண்வெளி பயணங்களின் போது ஏற்படும் சவால்கள் மற்றும் சிக்கல்களை சரி செய்ய, அதிநவீன புதிய ஹியூமனாய்டு ரோபோக்களை நாசா உருவாக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த ரோபோக்களை தற்போது வெற்றிகரமாக உருவாக்கி விட்டது என சொல்லப்படுகிறது.
ஏனென்றால், அவர்கள் உருவாக்கிய மனித உருவ விண்வெளி வீர ரோபோ, பல கட்ட ஆய்வுகளுக்காக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. Valkyrie என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோவை Artemis விண்வெளி பயனுங்களின்போது நாசா பயன்படுத்தவிருக்கிறது. இது ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் உருவாக்கப்பட்ட ரோபோவாகும். தற்போது ஆஸ்திரேலியாவிலுள்ள உட்சைடு எனர்ஜி நிலையத்திற்கு அடுத்த கட்ட சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதால், அங்கே அதனுடைய முழு செயல்பாடுகளும் சோதனை செய்யப்படும்.
ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் சோதனையின்போது வால்கெய்ரி ரோபோவின் தனிப்பட்ட திறன்கள் சோதனை செய்யப்படும். குறிப்பாக மனிதர்கள் செயல்பட இயலாத இடங்களிலும், கடலோரத்தில் உள்ள மின் வசதிகளை தூரத்தில் இருந்தே பராமரிக்கவும் இந்த மனித ரோபோவின் திறன்கள் சோதிக்கப்படும் என நாசா தெரிவித்துள்ளது. மேலும் இத்துடன் சந்திரன் மற்றும் மற்ற கிரகங்களில் காணப்படும் சவால்களையும் இந்த ரோபோவின் மீது சோதிக்கவிருக்கிறார்கள்.
மனிதர்களால் இருக்க முடியாத ஆபத்தான நிலைகளிலும் மனிதர்களுக்கு பதிலாக இந்த ரோபோக்களை களமிறக்கும் நோக்கிலேயே நாசா இதை உருவாக்கியுள்ளது. இதை தொழில்முறையாக பயன்படுத்துவதற்கு முன்பாக, இதற்கு நிர்ணயம் செய்யும் சவால்களை எப்படியெல்லாம் திறம்பட முடிக்கிறது என்பதை இந்த சோதனையில் நாசா கண்டறியவுள்ளது.
விண்வெளியில் திடீரென இயந்திரங்கள் பழுதானால் அதை மனிதர்கள் சரி செய்வது கடினமாக இருக்கும். அந்த தருணங்களில் இந்த ரோபோக்கள் பேருதவியாக இருக்கும். ஒருவேளை விண்வெளி ஓடத்திற்கு வெளியே பழுது ஏற்பட்டால், மனிதர்கள் தன் உயிரை பணயம் வைத்து அந்த பழுதை இனி சரி செய்ய வேண்டாம். அனைத்தையும் ஹுயூமனாய்டு ரோபோவே பார்த்துக்கொள்ளும். மேலும் நிலவின் மேற்பரப்பில் மனிதர்கள் நிரந்தரமாக இருப்பதற்கு இந்த ரோபோக்கள் உதவியாய் இருக்கும் என நாசா கூறியுள்ளது.
நிலவிலும், வேற்று கிரகத்திலும் மனிதர்கள் தங்களின் காலனியைத் துவங்க இந்த ரோபோக்களின் தேவை அதிகமாக இருக்கும். சோதனை வெற்றிகரமாக முடிந்தவுடன், இதே போல எண்ணிலடங்கா மனித ரோபோக்களை நாசா உருவாக திட்டமிட்டுள்ளது.