மூட்டை முடிச்சுகளை ரெடி பண்ணுங்க… மற்றொரு பூமி தயார்! 

Europa Mission
NASA Europa Mission
Published on

இந்தப் பிரபஞ்சத்தின் அளவுடன் ஒப்பிடுகையில் மனித இனம் மிகச் சிறிய துகள் போன்றது என்றாலும், புதிய எல்லைகளை தேடிச் செல்வதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறது. அந்த தேடலில் நாம் வாழும் பூமியைப் போன்றே வேறொரு உலகை கண்டுபிடிப்பதும், அங்கு வாழும் சாத்தியக்கூறுகளை ஆராய்வதும், விண்வெளி ஆய்வாளர்களின் கனவுகளில் முதலிடத்தில் உள்ளது.‌ இந்த கனவை நனவாக்க அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, வியாழனின் துணைக்கோள்களில் ஒன்றான யுரோப்பாவை நோக்கி ஒரு முக்கியமான பயணத்தை தொடங்க தயாராகிக் கொண்டிருக்கிறது.

யூரோப்பா - ஒரு புதிய நம்பிக்கை:

யூரோப்பா, வியாழனைச் சுற்றி வரும் நான்காவது பெரிய துணைக்கோள். இது பனிக்கட்டியால் மூடப்பட்டிருந்தாலும், அதன் கீழே பெருங்கடல் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த பெருங்கடலில் உயிர்கள் வாழத் தேவையான அனைத்து அடிப்படை கூறுகளும் இருக்கலாம் என்ற நம்பிக்கை, யூரோப்பாவை ஆய்வுப் பொருளாக மாற்றியுள்ளது.

நாசாவின் யூரோப்பா கிளிப்பர் (Europa Clipper) திட்டம், இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், யூரோப்பாவின் பனிக்கட்டி மேற்பரப்பையும், அதன் கீழே உள்ள பெருங்கடலையும் ஆய்வு செய்து, அங்கு உயிர் வாழத் தேவையான சூழல் உள்ளதா என்பதைத் தீர்மானிப்பதுதான்.

பயணத்தின் விவரங்கள்:

யூரோப்பா கிளிப்பர் விண்கலம், ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் ஹெவி ராக்கெட் மூலம், கேப் கனவரல் ஸ்டேஷனிலிருந்து ஏவப்பட உள்ளது. இந்தப் பயணம் சுமார் ஐந்து வருடங்கள் மற்றும் ஆறு மாதங்கள் நீடிக்கும். இந்த காலகட்டத்தில், விண்கலம் 1.8 பில்லியன் மைல் தூரத்தை கடந்து வியாழனை அடையும். இதன் மதிப்பு சுமார் 5.2 பில்லியன் டாலர்களாகும். கடந்த பத்து வருடங்களாக, சுமார் 4000 பேர் இந்தத் திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர்.

விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒன்பது அறிவியல் கருவிகள், யூரோப்பாவின் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்யும். இவற்றில் கேமராக்கள், ஸ்பெக்ட்ரோகிராஃப், ரேடார் மற்றும் ஒரு காந்தமாணியும் அடங்கும். இந்த கருவிகள் மூலம், யூரோப்பாவின் பனிக்கட்டி மேற்பரப்பின் கீழ் என்ன இருக்கிறது, அதன் பெருங்கடலின் தன்மை என்ன, அங்கு உயிர்கள் வாழத் தேவையான வேதிப்பொருட்கள் உள்ளனவா என்பன போன்ற கேள்விகளுக்கு விடை காண முடியும்.

இதையும் படியுங்கள்:
பூமி எதிர்திசையில் சுற்றத் தொடங்கியுள்ளது… ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Europa Mission

ஏன் யூரோப்பா?

பூமியைத் தவிர வேறொரு கிரகத்தில் உயிர் வாழும் சாத்தியக்கூறு இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது, யூரோப்பாவில் நீர் இருப்பதாகக் கருதப்படுவதுதான். பெரும்பாலான உயிரினங்களுக்கு நீர் என்பது வாழ்க்கையின் அடிப்படை. யூரோப்பாவில் இருக்கும் நீர், பூமியில் உள்ள நீரைப் போலவே, பல்வேறு வகையான உயிரினங்களுக்கு ஆதாரமாக இருக்கலாம்.

மேலும், யூரோப்பாவில் ஆற்றல் மற்றும் சில வேதிப்பொருட்களும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பொருட்கள், பாக்டீரியாக்கள் போன்ற எளிய உயிரினங்களின் வளர்ச்சிக்கு உதவலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com