சூரியன், பூமி மற்றும் செவ்வாய் தற்போது இருக்கும் நிலைகளின் காரணமாக வரும் நவம்பர் 25 ஆம் தேதி வரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் சிக்னலை நிறுத்துவதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.
நவம்பர் 11 முதல் 25ஆம் தேதி வரை செவ்வாய் கிரகத்திற்கும் பூமிக்கும் இடையே சூரியன் இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த நிகழ்வை செவ்வாய் சூரியன் இணைப்பு என்று கூறுவார்கள்.
இச்சமயத்தில் சூரியனின் கரோனா பகுதியிலிருந்து வெளிவரும் அயனியாக்கம் செய்யப்பட்ட வாயுவானது, பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் ரேடியோ சிக்னலை தடுக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே தகவல் தொடர்புகளை தற்காலிகமாக நிறுத்துவதாக நாசா தெரிவித்துள்ளது.
இந்த தற்காலிக நிறுத்தத்தால் செவ்வாய் கிரகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பெர்சிவரன்ஸ் ரோவருக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது. இச்சமயத்தில் செவ்வாய் கிரகத்தில் இருக்கும் ரோவர்கள் நகராமல் இருந்தாலும் அதன் மேற்பரப்பு, கதிர்வீச்சு மற்றும் வானிலை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கும்.
நாசா செவ்வாய் கிரகத்திற்கு தனது கட்டளைகளை அனுப்பவில்லை என்றாலும், செவ்வாய் கிரகத்தில் இருக்கும் கருவிலிருந்து நாசாவுக்கு தொடர்ந்து அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கும். ஆனால் இதில் இரண்டு நாட்கள் முழுமையான தகவல்கள் எதுவும் பெற முடியாத நிலையும் ஏற்படும். ஏனெனில் அப்போது செவ்வாய் கிரகம் சூரியனால் முழுமையாக மறைக்கப்படும் என்பதால் இரண்டு நாட்களுக்கு எவ்விதமான தகவல்களையும் அனுப்பவோ பெறவோ முடியாது.
இந்த இடைநிறுத்தம் முடிவுக்கு வந்ததும், செவ்வாய் கிரகத்தில் உள்ள கருவிகள் சேகரித்த நிலுவையில் உள்ள தரவுகள் அனைத்தும் பூமிக்கு அனுப்பப்படும். இதை விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு செய்வார்கள் என நாசா கூறியுள்ளது.